நூலகத்திற்கு செலுத்தும் நன்றிக்கடன்! - த.சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்





pixabay




நூலகத்திற்கு செலுத்தும் நன்றிக்கடன்! 


5.4.2021

 

அன்பு நண்பர் சீனிவாசனுக்கு, வணக்கம். நலமா?

நான் தற்போது ஈரோட்டுக்கு வந்துவிட்டேன். ஜூன் இறுதியில் நாளிதழ் வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். அதுவரையில் நான் ஊரில் இருக்க திட்டமிட்டுள்ளேன். நீங்கள் கொடுத்த அடோமிக் ஹேபிட்ஸ் என்ற நூலை இங்கே படிக்க எடுத்து வந்துவிட்டேன். அதில் பதிமூன்று பக்கங்கள்தான் படித்துள்ளேன். சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு வரும் பேருந்து பயணம் பெரும் களைப்பை உடலில் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து சேலம், சேலத்திலிருந்து ஈரோடு, ஈரோட்டிலிருந்து கரூர் என மூன்று பேருந்துகளில் ஏறி எட்டு மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் பயணிக்க வேண்டும். 

இப்படி பாடுபட்டு முக்கி முனகி வீட்டுக்கு வந்தால் இரவில் மின்சாரம் இல்லை. அதுவும் எந்த நேரத்தில் தெரியுமா? தட்டில் சோற்றைப் போட்டு சாப்பிடும் நேரத்தில்.... 

நூல்களை நூலகத்திற்கு தரும் உங்களது பழக்கத்தைப் பின்பற்றி, எங்கள் ஊர் நூலகத்திற்கு தர ஒன்பது நூல்களை எடுத்து வைத்துள்ளேன். இவை அனைத்துமே புத்தக திருவிழாவில் வாங்கியவைதான்.  தேர்தல் முடிந்தபிறகு நூல்களை கொண்டு சென்று கொடுப்பேன். நூலகத்தை மட்டுமே வாசிப்பிற்கு நம்பியிருப்பவர்களுக்கு இந்த நூல்கள் உதவும் என நினைக்கிறேன். எங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் எழுத்தாளர் பாலபாரதி அவர்களும் தான் படித்த நூல்களை மடிப்பாக்கத்தில் உள்ள நூலகங்களுக்கு வழங்கிவிடுவதாக சொன்னார். நல்ல விஷயம். ஒருவகையில் இது நன்றிக்கடனை தீர்ப்பது போலத்தான் எனக்குப் படுகிறது. 

ச.அன்பரசு

5.4.2021







செய்தி ஊடகங்களின் பொறுப்பு!


13.4.2021

அன்பு நண்பர் சீனிவாசனுக்கு, வணக்கம். குழந்தைகளும், தாங்களும் நலமா?  ஈரோட்டுக்கு வந்தும் பெரிதாக எழுத்தில் முன்னேற்றமில்லை. வீட்டில் குடும்ப சூழல்கள் வினோதமாக உள்ளன. எழுதுவதற்கான இடமே இல்லை. கிடைக்கும் இடத்தில் உட்கார்ந்துதான் அலுவலக வேலையைக் கூட செய்யவேண்டியிருக்கிறது. 

கோழி, நாய் என கவனத்தை சிதைக்கும் நிறைய சமாச்சாரங்கள் உள்ளன. உங்களிடம் இரவலாக வாங்கிய சுயமுன்னேற்ற நூலை 150 பக்கங்கள் படித்துவிட்டேன். அதில் கூறும் விஷயங்கள் யோசிக்க வைப்பதாக உள்ளன. 

இவற்றைக் கடைபிடிக்க எனக்கான வீட்டைத் தேடி கண்டுபிடித்து செட் செய்யவேண்டும். பினாக்கியோ என்ற கொரிய தொடர் பார்த்து வருகிறேன். பொய் சொல்ல முடியாத சொன்னால் விக்கல் வரும் குறைபாடு கொண்ட ஒருவர் சொல்லும் தகவலால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய கதை இது. டிவி நிருபர் ஒருவர் செய்யும் நேர்மையற்ற செயலால் தீயணைப்பு வீரர் ஒருவரின் நேர்மையான ஆளுமை அழிகிறது வீண்பழிக்கு ஆளாகுபவர் விபத்தில் இறந்தாலும் கூட தேவையில்லாத குற்றத்தின் சுமையை அவரது குடும்பம் சுமக்கிறது. ஒருகட்டத்தில் இறந்துபோன தீயணைப்பு வீரரின் மனைவி கடலில் விழுந்து தற்கொலை செய்ய இரு ஆண் பிள்ளைகளும் அனாதையாகிறார்கள். இவர்களின் வாழ்க்கை என்னவானது? இவர்களின் மீது பழி தூற்றியவர்கள் என்னவானார்கள்? என்பதுதான் கதை. பழிக்குப் பழி கதைதான். அதையே செய்தி ஊடகங்கள் எப்படி பொறுப்புணர்வோடு நடந்துகள்ளவேண்டும், அரசியல், தனிப்பட்ட லாப நோக்கத்தோடு செயல்பட்டால் என்ன விளைவு ஏற்படும் என்பதை நெகிழ்ச்சியான காட்சிகளோடு சிறப்பாக காட்சிபடுத்தியிருக்கிறார்கள். நன்றி! சந்திப்போம்!

ச.அன்பரசு

13.4.2021





கருத்துகள்