எதிரிகளை ஆல் இன் ஆலாக வதம் செய்யும் அகோரி அகண்டா! - அகண்டா - பொயபட்டி ஸ்ரீனு- தெலுங்கு

 




அகண்டா - பாலகிருஷ்ணா(NBK)


அகண்டா

பொயபட்டி ஸ்ரீனு

என்பிகே, பிரக்யா ஜெய்ஸ்வால்






முரளி கிருஷ்ணா, புகழ்வாய்ந்த பணக்கார விவசாயி. இவர், தன்னுடைய பிராந்தியத்தில் உள்ள ரவுடிகளை அடித்து திருத்தி நம்நாடு எம்ஜிஆர் போல பக்குவப்படுத்துகிறார். அப்படி ஒருவரை அடித்த அடியில் நேர்மையான மனிதராக மாறி, அத்தொகுதியில் வென்று எம்.பியாகிறார். இந்த நேரத்தில் அங்கு சாமியாராக உள்ளவர், தனக்கென ரவுடி கூட்டத்தை வைத்து சுரங்கங்களை தோண்டுகிறார். அதில் கிடைக்கும் யுரேனிய பாதிப்பு பற்றி அரசு அதிகாரிகளுக்கு கூட சொல்லுவதில்லை. 

கழிவுகளை ரிவர்ஸ் போரிங் முறையில் நிலத்திற்கு அடியில் செலுத்துகிறார்கள். இதனால் மண், நீர் மாசுபட மக்களும் , குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் முரளி கிருஷ்ணாவிற்கும் சுரங்க மாஃபியாவிற்கும் முட்டல் மோதல் தொடங்குகிறது. இதன் அடுத்த விளைவாக, முரளி கிருஷ்ணாவின் மருத்துவமனையில் குண்டு வைத்து வெடிக்க வைக்கப்படுகிறது. இதில் பிராந்திய எம்பி பலியாகிறார். சாமியாரின் தந்திரத்தால் தேசிய புலனாய்வு முகமையால் முரளி கிருஷ்ணா கைதாகிறார். அவரது மனைவியின் மாவட்ட ஆட்சியர் பதவியும் பறிபோகிறது. இப்போது அவர்களை யார் காப்பாற்றுவது என்பதுதான் மீதிக்கதை. 

இதில் முரளி கிருஷ்ணாவை விட படம் முழுக்க ஆக்கிரமிப்பது எறும்பைக் கூட மிதிக்காமல் எதிரிகளின் நெஞ்சில் சூலத்தால் குத்தி மாஞ்சா சோற்றை எடுக்கும் அகண்டா தான். இவருக்கான பிஜிஎம்தான் படத்தின் உயிரே. தமன் எஸ், வாசிக்கும் வாத்தியங்களின் இசை தியேட்டரையே அதிர வைக்கிறது. 

வரத ராஜூலு (ஸ்ரீகாந்த்)


முரளி கிருஷ்ணா, அகண்டா என இருவரும் யார் என்பது மிகப்பெரிய புதிரான கதை அல்ல. அகண்டா எப்படி தன்னை வெளிப்படுத்திக்கொண்டு இரட்டையரான சகோதரனின் குழந்தை உயிரை எப்படி காப்பாற்றுகிறார், அத்தோடு எதிரிகளை எப்படி துவம்சம் செய்து(மனிதர்களின் சட்டத்தையும் தான்) தர்மத்தை நிலைநாட்டுகிறார். இதை செய்யும்போது பேசும் பன்ச்சுகள் பீதியாக்குகின்றன, 

சாவுக்கே பயத்தை காட்டுபவன், போத் ஆர் நாட் சேம் வசனம், நீ அவன செல்லுல போடுவ, நான் அவன ஹெல்லில் போடுவேன் என ஆங்கில வசனங்களை பாலைய்யா பேசும்போது டெம்போ எகிறு எகிறென எகிறுகிறது. முரளி கிருஷ்ணா, விழாமேடையில் இளைஞர்களை ஊக்கப்படுத்திப் பேசும் வசனங்கள் சிறப்பாக உள்ளன. யாரை நாம் ரோல்மாடலாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். 

படத்தில் முரளி கிருஷ்ணா நவீனமான தன்மையில் இருப்பார். அதற்கேற்ப கருத்துகளை சொல்லுவார். அதேசமயம் அகண்டா பேசுவது தொன்மையான இந்தியாவில் உள்ள விஷயங்களை என்பதை பார்வையாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இரண்டும் உலகைப் பற்றிய வேறுபட்ட பார்வைகளை கொண்ட பாத்திரங்கள். 

பொயபட்டி ஸ்ரீனு படத்தில் என்னென்ன விஷயங்கள் இருக்கும்? சண்டை போடும்போது சக்கரங்கள் உருண்டு ஓடுவது, துப்பாக்கியை வில்லன்கள் வைத்திருந்தாலும் நாயகன் கத்தி, சூலத்தை வைத்து சண்டை போடுவது, ஒருவரை உதைத்து அவர் கீழே விழுவதற்குள் இரண்டாவது உதை கொடுப்பது, வில்லனின் தலையை கத்தியால் வெட்டி எறிவது, வல்லுறவு காட்சி ஆகிய காட்சிகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. படம் வெற்றி பெறுவது, அதன் உணர்ச்சிகளை எளிதாக நமக்கு கடத்தியதில்தான்.

மாவட்ட ஆட்சியராக வரும் நாயகி, தன்னைப் பற்றிய பின்னணிக் கதையை நாயகன் பேசும்போது முகத்தில் காட்டுவது என்ன வருத்தமா? ஆச்சரியமா? மிகவும் சிரமப்பட்டு சுய உழைப்பால் குடிமைத் தேர்வு எழுதியவரை மதிக்கும்படி மரியாதையான சில காட்சிகளையேனும் வைத்திருக்கலாம். கார் சீட்பெல்ட் காட்சி, கள் குடிக்கும்போது ஊறுகாய் கொடுக்கும் காட்சி என இதையெல்லாம் பார்த்தால் இயக்குநர் அந்த பெண்ணைப் பற்றி நாம் என்ன நினைக்கவேண்டும் என நினைக்கிறார் என்பதே புரியவில்லை.  

முரளி கிருஷ்ணா


படத்தில் வில்லன் என்பது சாமியார்தான். அவர் சொல்லும் வேலையை செய்யும் கூலிப்படை தலைவன் வரத ராஜூலு (ஸ்ரீகாந்த்) இவருக்கான பில்டப் பெரிதாக இருந்தாலும், நமக்கு ஏற்படுத்தும் விளைவு ஒன்றுமில்லை. ஜெகதி பாபுவை இதில் சாமியாராக்கி ஓரம் தள்ளி விட்டார்கள். இந்த படத்தில் நடித்ததை அவரே மறக்க நினைப்பார். ஸ்ரீகாந்திற்கு வேகமாக முகத்தை ஆட்டி கோபத்தில் அதிரும் தசைகளை காட்டுவதுதான் பெரும்பாலான காட்சிகளில் வேலையாக இருக்கிறது. இவரை, முரளி கிருஷ்ணாவே ஊதித்தள்ளி விட அகண்டாவிற்கு பெரிய வேலை இல்லை. 

பின்னணி இசை, பாடல்கள் என அனைத்திலும் தமன் எஸ், தனது உழைப்பை நிரூபித்துள்ளார். அகண்டா பாடலில் சங்கர் மகாதேவனின் குடும்பமே பாடியுள்ளது. உணர்வு ரீதியான இப்பாடல் நம்மை படத்துடன் கட்டிப்போடுகிறது. 



முந்தைய ராம் சரண் படத்தில் நடக்காத உணர்வு ரீதியாக நம்மைப் பொருத்திக்கொள்ளும் மேஜிக் இங்கு நடப்பதுதான்  முக்கியமான விஷயம். படத்தை ஸ்ரீனு எடுத்தாரா அல்லது ஸ்டண்ட் சிவா எடுத்தாரா என பலரும் கேலி பேசலாம். அவர்களுக்கு படம் முடிந்தவுடன் வரும் மேக்கிங் வீடியோ சரியான பதிலாக இருக்கும்.  அடுத்த படம் வருவதற்கான நிறைய வாய்ப்புகள் உள்ளன. 

அனகோண்டாவை விட பலம் வாய்ந்தவன் இந்த அகண்டா! (குங்குமம் தலைமை உதவி ஆசிரியர் த. சக்திவேலின் விமர்சனம் இது)

இதை விட பொருத்தமாக நாம் எழுதிவிட முடியுமா என்ன?

கோமாளிமேடை டீம் 






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்