தனித்தமிழை வளர்க்க தன்னை அர்ப்பணித்த தமிழ் அறிஞர்! - மறைமலையடிகள் கடிதங்கள்

 


மறைமலையடிகள் படம் - புதிய தலைமுறை






மறைமலையடிகளின் கடிதங்கள்
தமிழ் மின்னணு நூலகம்


மறைமலையடிகள், தமிழ்த்தொண்டு ஆற்றியவர். தனித்தமிழில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். சொற்பொழிவுகளையும் ஆற்றியவர். 

அவர் இந்த நூலில் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக பல்வேறு கடிதங்களை எழுதியுள்ளார். இதில் அவரே முந்தைய பக்கங்களில் குறிப்பொன்றை குறிப்பிடுகிறார். அஞ்சலட்டையில் ஆங்கிலத்திலும், இன்லேண்ட் தாளில் தமிழிலும் எழுதுவேன் என்று. எதற்காக இந்த விதி என்று புரியவில்லை. 

அவரது காலத்தில் அவருக்கான சில நெறிமுறைகளோடு வாழ்ந்திருக்கிறார் என்று நாம் புரிந்துகொள்ளலாம். 

1920 தொடங்கி 1950 ஆம் ஆண்டு வரையில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. இவை முறையாக ஆண்டு கணக்கில் தொகுக்கப்படவில்லை. எனவே நடைபெறும் சம்பவங்கள் தாறுமாறாக இருக்கும் என்பதால் வாசகர்களே மனதில் தொகுத்துப் பார்த்து புரிந்துகொண்டு சிவனை  மனதில் நினைத்து வாசிக்க வேண்டியதுதான். 

கடிதங்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு எழுதப்படுபவைதான். அதனை நூலாக தொகுக்கும்போது குறிப்பிட்ட நபரின் பெயரைக்கூட எடுத்துவிட்டால் அதனை வாசிப்பவர்கள் எப்படி பொருந்திப் பார்ப்பார்கள் என்று புரியவில்லை. இந்த நூல் அந்த முறையில் எழுதி தொகுக்கப்பட்டுள்ளது. 

மறைமலையடிகள் பயன்படுத்தும் தமிழ்சொற்கள் அழகாக உள்ளன. அந்த அருந்தமிழுக்கான நூலிலுள்ள பிற பிழைகளை நாம் பொறுத்துக்கொள்ளலாம். தவறில்லை. தன் உடல்நலனை பராமரிப்பதில் மறைமலையடிகள் தனி கவனம் காட்டி வந்திருக்கிறார். இதனை அவர் எனிமா கொடுத்து குடலை சுத்தம் செய்து கொள்வதும், பிறருக்கு அதை பரிந்துரைப்பதும் செய்வதிலிருந்து அறியலாம். மருத்துவம் சார்ந்த அறிவும் இருப்பதால், பிறருக்கு வழிமுறைகள் கூறுமளவு சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். 

நூல்களை எழுதுவது, அதனை பதிப்பது, குறிப்பிட்ட கழிவோடு அதனை விற்பது என்பதில் மறைமலையடிகள் தனக்கான வழிமுறைகளோடு இருந்திருக்கிறார். தமிழும் சிவத்தொண்டும் முக்கியமென கருதியவர், அதற்காகவே உழைத்திருக்கிறார். பொருள் தட்டுப்பாடு வாழ்வெங்கும் இருந்தாலும் கூட அதனை சில இடங்களில் கூறுவதோடு நிறுத்திக்கொள்கிறார். 

நூல்களை படிப்பதில் ஆர்வம் காட்டாத மக்களை, சமூகத்தை நிறைய இடங்களில் கடிந்து பேசியிருக்கிறார். இப்படி சராசரிகளோடு இருந்து அவர்களுக்கு மேலாக யோசிப்பவர் வேறு என்ன செய்துவிடமுடியும்? 

நூலின் இறுதியில் மறைமலையடிகளின் தினசரி வாழ்க்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நூலின் தொடக்கத்தில் சொல்வது போல, இந்த நூலைப் படித்தால் நிச்சயம் நிறைய தனித்தமிழ் சொற்களை கற்றுக்கொள்ளலாம் என்ற கூற்று உண்மையே. இதனை நூலைப் படித்தவர்கள் மனமார உணரலாம். 

கோமாளிமேடை டீம் 


கருத்துகள்