ஊக்கப்படுத்துவதை எப்படி செய்வது? - சூப்பர் டெமோ - மயிலாப்பூர் டைம்ஸ் Extended

 







மயிலாப்பூர் டைம்ஸ் 

ஊக்கப்படுத்துங்க ப்ரோ?




பொதுவாக சோகத்தில் மூழ்குவது ஒரு இன்பம். அதில் ருசி கண்டுவிட்டால் பிறகு வேறெதுவே தேவையில்லை என ஜெயமோகன் தன் மீட்சி நூலில் கூறியுள்ளார். இதுபோல ஆட்களிடம் சிக்கினால் என்னாகும் தெரியுமா? நேரம் வீணாவதோடு நம் உடலில் ஏதாவது உருப்படியாக செய்யலாம் என்று திட்டமிட்ட ஆற்றலும் வெட்டியாக தீர்ந்துபோகும். 

செயலின்மை படைப்பு சார்ந்து செயல்படுபவர்களுக்கு வருவதுதான். ஆனால் அதிலேயே வெயில் கடுமைக்கு குளிர்ந்த நீரின் சேற்றில் எருமை புரள்வது போல அப்படியே நின்றால் எப்படி?

திருவண்ணாமலைக்கு செல்லும்போது அப்படி ஒருவரை சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. புகைப்படக்காரர் தினேஷ் சாந்தமூர்த்தி அப்படியொரு நிலையை உருவாக்கினார். நான் அங்கு வருவதாக போன் செய்தபோது அவருடைய வீட்டில் உறவினர்கள் இருந்தார்கள். சரி, என போனை வைக்க நினைத்தபோது சட்டென கோபப்பட்டவர், உடனே போனை வெக்காத, ஒருமணிநேரம் கழிச்சு கூப்பிடு என்றார். 

பிறகு போன் செய்தபோது, அவர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். தினேஷ் அண்ணாவுக்கு முக்கியமான பழக்கம் இருக்கிறது. ஒரு விஷயத்தை இரண்டு முறை சொன்னால் உடனே மூக்கு விடைத்து தோள் புடைத்து புரட்சி தளபதி விஷாலாகி விடுவார். மதுரைக்காரர் வேறு. டப்பிங் படத்தில் கூட நட்புன்னா உயிரைக் கொடுப்பேன். வம்புன்னா வகுந்துடுவேன் என மதுரைக்காரர்களுக்கு தெளிவுரை கொடுக்கிறார்கள். அதனை யூடியூபில் பார்த்தும் கூட சூதானமாக இருக்காவிட்டால் எப்படி?

பிறகு நான் அவருக்கு போன் செய்யவில்லை. அந்த வாரம் போன பிறகு, வேலை நாளின் மதியத்தில் போன் செய்தேன். பொதுவாக நாம் ஒரு விஷயத்தை செய்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு செய்யவில்லை என்றால் உடனே என்ன செய்வோம்? அடுத்தவர்களைப் பார்ப்போம். அவர்கள் மட்டும் ஒழுங்கா என பாய்வோம். அதேபோல த்தான் தொடங்கினார் தினேஷ் அண்ணா. 

என்னடா வர்றேன்னு சொன்ன , வரவேயில்லை

நான் நாளைக்கு வர்றேன். அங்கே தங்கறதுக்கு ஏதாவது இடம் இருக்கா?

லாட்ஸ் இருக்கு. ஆனால் ஒரு நாளுக்கு 1500 கேட்கறாங்க. அதெல்லாம் கொடுக்கறது நியாயமே இல்லை. அதனால நான் பிரெண்டு ஒருத்தரு இருக்காரு. அவருகிட்ட கேட்டுக்கிட்டு சொல்றேன். நீ வா!

நான் கிளம்பும்போதுதான் லாக்டௌன் பிரச்னைகள் நினைவுக்கு வந்தன. அப்போது சமாளித்து பேருந்தில் ஏறிவிட்டேன். போய் இறங்கும்வரை மோட்டலை சூறையாடியவர் எனது தோளில் தூங்கிக்கொண்டே வந்தார். சிவனின் பாதத்தை அவ்வளவு எளிதாக தொட்டுவிட முடியுமா? 

திருவண்ணாமலைக்கு போனதும் பஸ் ஸ்டாண்டில் இறங்கினேன். கேமராக்காரர் தினேஷ், எனக்கு ஜேம்ஸ் என்பவரின் நம்பரைக் கொடுத்தார். முதல்முறை அழுத்தும்போது நான் ரீச்சபிள் என்றது. தளராத ஊக்கம்தானே வாழ்க்கையை முன்னுக்கு கொண்டு வரும் என பிஎஸ்என்எல்லை மீண்டும் அழுத்தினேன். இம்முறை ஊழியர்கள் தூங்கி எழுந்து வேலை செய்ததால் ரிங் போனது. 

சார், தினேஷ் அண்ணன் இந்த நம்பரு கொடுத்தாருங்க. நான் உங்க ரூமில் தங்கறதுக்கு சொல்லியிருப்பாருங்க. நான் எப்படி வர்றதுங்க என்றேன். 

உடனே அவர், நான் இப்போதுதான் ரூமிலிருந்து காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு வர்றேன். நான் பத்து நிமிஷன் கழிச்சு கூப்பிட ட்டுமா? சைக்கிள் வர்றதுனால டைம் ஆயிரும். 

சரிங்க என்றபடி பார்த்தால், பக்கத்தில் படையப்பா சில்க்ஸ் என புது ஷோரும் மின்னிக் கொண்டிருந்தது. சுபாஷ் 120 சதவீத சுத்த சைவ உணவகம் பிரமாண்டமாக நின்றது. ஆனால் என்ன உணவகத்தில்தான் கூட்டம் இல்லை. வர்றவர்கள் ஹோட்டல் பார்க்கிங்கில் வண்டி நிறுத்திவிட்டு வெவ்வேறு கடைகளுக்கு பறந்துகொண்டிருந்தார்கள். செக்யூரிட்டி சோம்பலாக அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். சிவனைப் பார்க்க வரும் கூட்டம் எப்போதும் கூட சாரை சாரையாக வந்து இறங்கி இடது பக்கமாக நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். 

எப்போதும் போன் செய்தால் வேலை இருக்குப்பா என வைத்துவிடும் கவிதக்கா அன்றைக்குப் பார்த்து நிறைய விஷயங்களை மனசு விட்டு பேசினார். ஆச்சரியம்தானே? பெரும்பாலும் நான் அவர் பேசுவதைக் கேட்பதே வழக்கம். பெண்களுக்கு காதுகள்தானே பெரிய நிம்மதியைக் கொடுக்கின்றன. அக்காவுடன் பேசி முடித்தபோது பத்து நிமிடமல்ல. 45 நிமிடங்கள் ஆகியிருந்தன. போனை எடுத்து திரையைப் பார்த்தால் வரிசையாக மிஸ்டு கால். 

சார், ஜேம்ஸ் சார் மன்னிச்சிடுங்க, திடீர்னு போன் வந்திருச்சு. லேண்ட்மார்க் சொல்லுங்க நான் அங்கே வந்திடுறேன் என்றேன். 

ஜீவா எலக்ட்ரானிக்ஸ்னு ஒரு கடை இருக்கும். அங்கே நில்லுங்க. உங்க சட்டை நிறமென்ன என்று கேட்டுக்கொண்டார். 

அங்கேபோய் நின்று அடையாளம் அறிந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. அரசு கொடுத்த சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்தார். இறக்குமதி செய்த சைக்கிளை பில்ட்டப்பாக தள்ளிக்கொண்டு வருவார் என ஃபேன்டசியாக யோசித்துவிட்டேன். மாநிறமாக லைட்டாக தள்ளிய வயிறும் பூரிப்பான கன்னமுமாக இருந்தார். கழுத்தில் குவாண்டம் ப்ளூடூத் இயர்போன் தொங்கியது. குர்தாவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நீலநிறமாக இருந்திருக்க கூடிய பேண்ட்டும் அணிந்திருந்தார். 

உங்களைப் பத்தி தினேஷ் சொன்னாருங்க.. என ஒரு மாதிரியான பாவனையில் சொன்னார். 

கண்டதும் கடியதுமாக சொல்லிட்டாரோ என பயந்தேன். 

நல்ல விதமாத்தானுங்க 

தனிமையாக இருப்பாரு. படிப்பாருன்னு  என இழுத்தார். 

பிறகு, அவராக எங்கிட்ட சைக்கிள்தான் இருக்கு. அதனாலதான் உங்களை இதில் கூட்டிட்டுப் போக முடியல. நீங்க வர்றதை திடீர்னு சொன்னதால வண்டி இல்லை. இருந்தா அதில் கூட்டிட்டுப் போயிருப்பேன். 

பரவால்லைங்க...

நான் சென்னையில் செந்தில்கிட்ட உதவி ஒளிப்பதிவாளராக இருந்தேன். பின்னாடி தான் இங்கே வந்துட்டேன் என சில படங்களின் பெயர்களையும் தான் பணியாற்றி ஒளிப்பதிவாளர்களையும் சொன்னார். 

ஓ அப்படியா...

போட்டோ எடுக்கிறதும், படம் வரையறதும் எனக்கு பிடிச்ச விஷயம். அப்பா வெச்ச ஸ்டாலின் கிற பேரைக் கூட நான் மாத்தி ஜேம்ஸ் எக்யோன்னு வெச்சுக்கிட்டேன். எனக்கு ஸ்டாலின்கிற பேர் ஏதோ துயரத்தை, பயத்தை உருவாக்குன மாதிரி தோணுச்சு என விளக்கினார். 

நடந்துபோகும்போது முன்னர் வேலை செய்த அலுவலகம் இருந்த பகுதியையும் கடந்தோம். டயர் கம்பெனி உள்ள இடத்திலிருந்து உள்ளே போனால் அலுவலகம் வரும் என்பது கூட இத்தனை ஆண்டுகளில் மறக்க முடியவில்லை என்பது வியப்பாக இருந்தது. மெல்ல நடந்து போளூர் சாலைக்கு சென்றோம். 

ஒருவருக்கொருவர் யார் எப்படி என பேசிக்கொண்டே போனோம். பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஜேம்ஸ், உங்களை நடக்க வெச்சி கூட்டிட்டு போறேன். எனக்கு தப்பா தோணுது என சொல்லிக்கொண்டே வந்தார். 

சைக்கிளை ஓரிடத்தில் நிறுத்தியவர், உங்களுக்கு நான் யார்னு காமிக்கிறேன் என போனை எடுத்தார். அதில் ஓவியமா, புகைப்படமா என்று தெரியாதபடி எடுத்த படங்களைக் காட்டினார். இதைத்தான் கண்காட்சியாக வைக்கப்போறேன். நீங்க எனக்கு உதவி பண்ணனும் என்றார். 

இத்தனைக்கும் அவர் சண்டை இந்தியன், இந்தியா டுடே, விகடன் என பல்வேறு பத்திரிகையில் ப்ரீலான்ஸ் முறையில் வேலை பார்த்தார் என்பதையும் அப்போதுதான் அடைமழைபோல கொட்டித்தீர்த்தார். பிறகும் என்னை உதவி கேட்டார். 

தினேஷ் அண்ணாகிட்ட சொன்னீங்கன்னா போதுமே? அவரே ஏற்பாடு செய்வார்!

இப்படி சொன்னதும் அவர் பிறகு ஏதும் சொல்லவில்லை.

நீங்க என்னை ஊக்கப்படுத்துவீங்கன்னு நெனச்சேன் .

நாமெல்லாரும் குறிப்பிட்ட லிங்குல ஒண்ணாயிருக்கோம். எனக்கு தெரிஞ்சவங்க மூலமாக உங்களோட அறிமுகம் கிடைச்சுது. அதேமாதிரி இன்னொரு பத்திரிக்கார ரை தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க. அவ்வளவுதானே?

பிறகு பெரிதாக அவர் பேசவில்லை. அறைக்கு போகும் பாதை சுற்றி வளைந்து வளைந்து சென்றது. மாடி வீடு ஒன்றின் மேல்தளத்தில் அவரது அறை அமைந்திருந்தது.கீழே பார்க்கிங்கில் உள்ள வண்டியை தாண்டி செல்ல உங்களது தடகளப் பயிற்சி தேவை. இல்லையென்றால் உடலில் கீழ்ப்புற பகுதி எதிலாவது மாட்டிக்கொண்டுவிடும். 

ஒற்றைக் கதவு கொண்ட அறை. அதற்கு அருகில் குளியலறை, கழிவறை ஒன்றாக அமைந்திருந்தது. மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் அண்ணாமலையாரின் மலை தெரிந்தது. மனம் பயணத்தின் சோர்வைக் கூட நொடியில் மறந்தது. 

அறைக்கு வருவதே உடலுக்கு உடற்பயிற்சி போலத்தான். எப்படி இவருக்கு தொந்தி போட்டது என யோசித்தபடியே வந்தேன். 

உள்ளே வந்து பையை வைத்ததும், 

பாஸ், சரக்கு வாங்கிட்டு வந்தேன். நீங்க குடிக்க மாட்டீங்கள்ல என்றார். 

இல்லைங்க.. சாப்பிடறதுக்கே காசுக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன். இதுக்கெல்லாம் எங்கீங்க 

சூப்பருங்க என்றவர் சமையல் எண்ணெய்யை பிராந்தி பாட்டிலில் வைத்திருந்தார். 

லோன்லியாக இருக்கிறதுனாலங்க,.. சரக்கு இல்லனா தூக்கம் வரது இல்லை 

ரைட்டுங்கண்ணா...

இன்னும் ரெண்டே மாசத்துல பள்ளி அமைப்புல உதவி வாங்கி கண்காட்சி வைக்கப் போறேன். நீங்க என்கரேஜ் பண்ணுங்க சூப்பரா பண்ணுவோம். எனக்கு வெளிநாட்டுக்காரங்கதான் டார்க்கெட்டு. உங்களுக்கு புரியுதுல்ல.. என்றபடி மதுவரை வாயில் சரித்துக்கொண்டு குண்டாவில் அரிசியை களைந்து போட்டார். 

ஷெல்பில் பிதிரா, பாழி நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதை படித்தே ஊக்கத்திற்கு மது தேவைப்படுகிறதா என்ன என்று ஆச்சரியமானது. ரைட்டு என அயர்வில் மெல்ல பெட்ஷீட்டை விரித்து டைல்ஸ் தரையில் படுத்து தூங்கத் தொடங்கினேன். 

 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்