பலவந்தப்படுத்தினால் பாசம் வருமா? - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

 







வினோத் பாலுச்சாமி/Vinodh Balusamy




லினக்ஸிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது! 


29.11.2021

அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். 

நலமா?

நேற்று லேப்டாப் திடீரென பிரச்னை செய்தது. இதுவரை எழுதித் தொகுத்து வைத்த நூல்கள் எதையும் திருத்த முடியவில்லை. லிப்ரே ஆபீஸ் ரைட்டர் கோப்பில், கர்சர் தானாகவே எழுதிய வரிகளை அழித்துக்கொண்டே சென்றது. இதை தடுத்து நிறுத்த அடிக்கடி எஸ்கேப் பட்டனை அழுத்திக்கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் முடியல சாமி என்று ஆகிவிட்டது. லினக்ஸிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என நினைத்து, கணினியை அணைத்துவிட்டேன். 

ஜோம்பிலேண்ட் - டபுள்டேப் என்ற ஆங்கிலப் படம் பார்த்தேன். வணிகரீதியான படம். எப்போதும் போல ஜோம்பிகளின் மண்டையை சிதறடித்துக் கொல்லும் படம்தான். உங்களுக்கும் கோபத்தில் யாரையாவது அடித்துக் கொல்லும் உக்கிரம் இருந்தால், படத்தைப் பார்க்கலாம். தமிழ் டப்தான். உறுதியாக வயது வந்தவர்களுக்கு மட்டும். 

ஷோபாடே எழுதிய கட்டுரைகளில் பணம், அதன் மதிப்பு, கடன் வாங்குவது பற்றி படித்தேன். அதற்கு மேல் அதில் மனம் செல்லவில்லை. படம் பார்க்கத் தொடங்கி விட்டேன். இன்று வானில் சூரியனே வரவில்லை. இணையம் தான் எனது மனத்தைக் காப்பாற்றியது. 

அன்பரசு 

29.11.2021

-----------------------------------------------------------------------------------------------------------


படம் - வினோத் பாலுச்சாமி



பலவந்தப்படுத்தினால் பாசம் வருமா? 


சென்னை

30.11.2021

அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, 

வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

இங்கு மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. வெயில் வரவேயில்லை. மனமே கனத்து போனது போலவே இருக்கிறது. எனக்கு சலிப்பும் சோர்வும் ஏற்படாமல் இருக்க யூடியூப் உதவுகிறது. 

ஓமனின் மஸ்கட்டிலிருந்து தற்போது ஈரோட்டுக்கு வந்துள்ள சித்தப்பாவின் மகள் கவிதாவுடன் பேசினேன். இவர், பெங்களூருவிலுள்ள ரவிசங்கர் ஆசிரமத்தில் வளர்ந்த மாணவர் ஒருவரை தனது கணவராக கைப்பிடித்தார். இப்போது அவருக்கு ஸ்ரீநாத் என்ற குழந்தை கூட இருக்கிறது. சகோதரருடன் நெருக்கமான பாசப் பிணைப்பு கொண்டவர் கவிதா அக்கா. 

இவருடன் பேசியபோது, தான் ஆசிரமத்தில் செய்யும் வேலைகள், செய்துகொண்டிருக்கும் விஷயங்கள், கற்றவை, பெற்றவை என நிறைய விஷயங்களைப் பற்றி பேசினார். எங்கள் சமூகத்தில் அன்றைக்கு அதிகம் படித்தவர்கள் என்றால் கவிதக்காவைத்தான் சொல்லவேண்டும். என்னிடம் தனது நண்பனின் சகோதரன் என்பதற்காக கொஞ்சம் பேசுவார். மற்றபடி என் சகோதரரிடம் தான் அவருக்கு பிரியம். அனைத்து விஷயங்களையும் மனம் விட்டுப் பேசும் அபூர்வமான நட்பு இது. அறிவு, மனம் என அனைத்தும் ஒருங்கே ஒற்றுமையாக அமைந்த இருவர் என இவர்களை இன்று நான் நினைக்கிறேன். 

அன்றைய எனது புத்திக்கு கவிதக்காவிடம் அன்பை பரிசுகளாக மாற்றி  பெற நினைத்தேன். பிற்காலத்தில்தான் அது எவ்வளவு மோசமான முயற்சி செயல்பாடு என தேர்ந்து தெளிந்தேன். பலவந்தப்படுத்தி அன்பை, பாசத்தை பெற முடியாது என புரிந்துகொண்டேன். அதை தெரிந்தபிறகு மன்னிப்பு கேட்பதற்கு முன்னரே மணமாகிவிட்ட அக்கா, வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். கற்றுக்கொண்ட பாடம் மனதில் இருப்பதால், இப்போது எதிர்பார்ப்புகள் குறைந்துவிட்டது. 

நன்றி! சந்திப்போம்! 

அன்பரசு

30.11.2021


 



  

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்