அங்கன்வாடி பணியாளரின் சிந்தனையால், மேம்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியம்! - சுமதி உருவாக்கிய மாற்றம்

 










காய்கறிகளை விளைவித்த அங்கன்வாடி பணியாளர்!

மரக்காணத்தில் உள்ளது பாலாஜி கார்டன். இது டவுன் பஞ்சாயத்து வரம்பில் வருகிறது.  இங்குள்ள அங்கன்வாடியில் மொத்தம் 30 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் பலரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். அமைப்புகள் அப்படியேதான் இருக்கும். ஆனால், அதனை இயக்குபவர்கள் மனம் விரிவாக இருந்தால் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும். 54 வயதான சுமதி அப்படிப்பட்டவர்தான். அங்கன்வாடி பணியாளரான இவர், அங்கு கொடுக்கும் உணவுவகைகளுக்கான காய்கறிகளை குப்பைக்கூளமாக கிடந்த நிலத்தை தூய்மைப்படுத்தி உருவாக்கிய நிலத்தில் இருந்து பெறுகிறார். இவருக்கு உதவியாக ஹேமாவதி என்ற பெண் பணியாளர் இருக்கிறார். 

மாதம் 15 ஆயிரம் சம்பளம் சுமதிக்கு வழங்கப்படுகிறது. அதில் சேர்த்து வைத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை செலவிட்டு நிலத்தை பண்படுத்தி, காய்கறிகளை விளைவித்திருக்கிறார். இதற்கான தொடக்க கால முயற்சியில் உள்ளூர் அதிகாரிகள் இவரை ஏளனம் செய்திருக்கிறார்கள். முயற்சியை தடுத்திருக்கிறார்கள். உள்ளூர் மக்களும் கூட சுமதியின் முயற்சிக்கு ஆதரவு தரவில்லை. ஆனால் சுமதி தனது முயற்சி செயல்பாடுகளில் எந்த தளர்வையும் காட்டவில்லை. உற்சாகமாக பணியாற்றி நிலத்தை பண்படுத்தியிருக்கிறார். அங்கு தக்காளி, இஞ்சி, சுரைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், நிலக்கடலை என பல்வேறு பயிர்களை விளைவித்து அதனை குழந்தைகளுக்கு உணவில் சேர்த்து வருகிறார். மீதியுள்ள காய்கறிகளை ஊர் மக்களுக்கு கொடுத்து வருகிறார். 

சிறந்த அங்கன்வாடி பணியாளருக்கான தமிழக அரசு விருதை 2002ஆம் ஆண்டு பெற்றவர் சுமதி. 2017இல்தான் மரக்காணத்தின் பாலாஜி கார்டனுக்கு வேலைக்கு வந்திருக்கிறார். மிகச்சில ஆண்டுகளிலேயே தனது செயல்பாட்டில் மாற்றத்தை கொண்டு வந்து அதனை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக மாற்றியிருக்கிறார். இன்று அவரை ஏளனம் செய்தவர்கள், குறை கூறியவர்கள், வசை, அவதூறு பரப்பியவர்கள் திகைத்து போய் நிற்கிறார்கள். குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகளுக்கு கிடைக்கும் ஆரோக்கியமான உணவு காரணமாக சுமதிக்கு மானசீகமாக நன்றியைச் சொல்லி மரியாதையாக பார்க்கிறார்கள். 

காய்கறி விளைவிக்கப்படும் நிலம் பள்ளிக்கு சேர்ந்தது. கைவிடப்பட்டது. அதில் காய்கறிகளை விளைவிப்பது திட்டமாக இருந்தாலும் அதற்கான கூடுதலான நீர் பெரிதாக கிடைக்கவில்லை. பள்ளியின் கழிவறை, சமைப்பது, பாத்திரங்களை கழுவுவது என அனைத்துக்குமே 500 லிட்டர் நீர்தான் வழங்கப்பட்டது. இதில் கிடைக்கும் கழிவுநீரை வைத்து காய்கறிகளை நம்பிக்கையுடன் வளர்த்திருக்கிறார். காய்கறிகளை பாதுகாக்கும் சிறு வேலியையும் அமைத்தார் சுமதி. 

உணவு மட்டும் போதுமா? கல்வியும் வேண்டுமே? அங்கன்வாடியில் புதிய நாற்காலிகளை வாங்கிப் போட்டு பழைய டிவி ஒன்றை வாங்கி டிவிடி பிளேயர் மூலம் பாடல்களை சொல்லித் தந்து வருகிறார். தன்னாட்சி கிடைத்துவிட்டது என்றால் அனைத்துக்கும் அரசை நம்பியிருப்பதில் எந்த பிரயோஜனமுமில்லை என்பார்கள். மக்கள் தங்களுடைய பங்களிப்பில் செயல்களை வடிவமைப்பதே பிராந்திய அளவில் முன்னேற்றத்திற்கான வழி என்பது காந்தி சொன்னது. அதனை சுமதி தனது செயல்வழியாக நிரூபித்திருக்கிறார். 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

பகலவன் பெரிர் (விழுப்புரம்)

pinterest

கருத்துகள்