குழந்தையை அனாதை இல்லத்திற்கு கொடுத்திருக்கலாம், கொலை செஞ்சிருக்க கூடாது! - முப்பிடாதி
எனக்கு முதன்முதலில் கிணத்துல இருந்து எடுத்த பிணம் பத்தி ஞாபகம் இல்லை. ஆனால் மறக்கமுடியாத சம்பவம் ஒண்ணு இருக்கு. திருமணமாகாத பொண்ணு தனக்கு பொறந்த குழந்தை கிணத்துக்குள்ள வீசிட்டு போயிருச்சி. அந்த குழந்தை பொறந்து ஒரு நாள்தான் ஆயிருக்கும். கிணத்தில் நாற்பது அடிக்கு கீழே இருந்து. அதை கையில் எடுத்துட்டு வந்தேன். துணியில வெச்சு வெளியே கொண்டு வந்தாங்க. அந்த குழந்தையை அனாதை இல்லத்திற்கு கொடுத்திருக்கலாம். கிணத்தில் வீசிக் கொன்னது சங்கடமாக இருந்தது என்றார் முப்பிடாதி.
தென்காசி வட்டாரத்தில் யாராவது நீர்நிலையில் இறந்துபோனால் கூப்பிடு முப்பிடாதியை என்றுதான் சொல்லுவார்கள். அந்தளவு பிரபலம். பிணங்களை மூச்சு தம் கட்டி கீழேயிருந்தே மேலே கொண்டு வந்து விடுகிறார். இப்போது 83 வயதாகும் மனிதர். பிணங்களை மீட்பதை 20 வயதிலிருந்து செய்து வருகிறார். இவருக்கு நான்கு பிள்ளைகள். மூன்று ஆண், ஒரு பெண். இவர்கள் யாருக்குமே அப்பா பிணத்தை தூக்குவது பிடிக்கவில்லை. ஆனால் முப்பிடாதி காவல்துறையினர் கூப்பிட்டால் உடனே அந்த குரலுக்கு செவிசாய்த்து தனது பணியை செய்து தருகிறார். போலீசாரும் இவருக்கு இப்போதுதான் முதியோர் பென்ஷன் பெற்றுதர முயன்று வருகிறார்கள். சுகுணா சிங் என்ற காவலதுறை அதிகாரியின் கையால் விருதும் வாங்கியிருக்கிறார்.
6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிணங்களை மீட்டுக்கொடுத்திருக்கிறார். உறவினர்கள் காசு கொடுத்தால் அதனை மறுக்காமல் வாங்கிக்கொள்கிறார். மறுப்பதற்கு அவர் பெரிய வேலை ஏதும் செய்யவில்லை. அவரும் மனைவி செல்லம்மாளும் விவசாய கூலி வேலையை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். ஆண் பிள்ளைகளில் ஒருவர் ராணுவத்தில் வேலை செய்கிறார். அவர் பெற்றோருக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பி வருகிறார். மீதியுள்ளவர்களில் இரு ஆண் பிள்ளைகள் விவசாய கூலி வேலையை செய்கிறார்கள். பெண் பிள்ளை ஒருவர் பீடி சுற்றும் வேலையைச் செய்துவருகிறார். இறந்துபோனவர்களின் உறவினர்கள் வசதி குறைவு என்றால் அவர்களிடம் காசு ஏதும் வாங்குவதில்லை. முப்பிடாதி இதுவரை நீர்நிலையை தொட்டு தோல்வியுடன் திரும்பியதில்லை. உடலும் மனசும் அந்தளவு நேர்த்தியாக வேலை செய்கிறது என புரிந்துகொள்ளலாம். இந்த வேலை தொடங்கியது. கிணற்றில் நீரில் முழ்கியபடி இயங்கும் மோட்டார்களை கழற்றித் தரும் வேலைக்கு சென்றபோதுதான். மெல்ல சுற்றுப்புறத்திலுள்ள விவசாயிகள் மோட்டார்களை கழற்ற கூப்பிட்டனர். நீரில் முங்குவதில் முப்பிடாதி திறமையைக் காட்ட நீரில் மூழ்கி இறந்தவர்களை மீட்டுக்கொடுங்களேன் என காவல்துறை கோரியது. இப்படித்தான் இந்த வேலையைச் செய்யத் தொடங்கியிருக்கிறார் முப்பிடாதி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக