பத்திரிக்கை அரசியல், கற்றலைத் தடுக்கும் பரபரப்பு, கருத்து சுதந்திரம் - கணியம் சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்
த.சீனிவாசன், நிறுவனர், கணியம்
5
சுதந்திரமான செயல்பாடும், தடையும்!
27.1.2021
அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?
எங்கள் இதழ் குழுவினரை இன்னும் நிர்வாகம் ஆபீசுக்கு வரச் சொல்லவில்லை. இவர்களின் வேகமான செயல்பாடுகளால் மயிலாப்பூரிலுள்ள வாடகை அறையை
யும் கூட காலி செய்யவில்லை. ஏதேனும் முடிவெடுத்தால்தான்தானே? அறைக்கு தங்கினாலும் இல்லாவிட்டாலும் வாடகை தண்டச்செல்வு. உங்களது உதவியால் இப்போது மடிக்கணினி பிரச்னையின்றி இயங்குகிறது.
இந்த அளவில் கணினி இயங்குவதே போதும். இனிமேல் நூலை எழுதி எனது வலைத்தளத்தில் வெளியிடுவதோடு நிறுத்திக்கொள்ளவிருக்கிறேன். பிறரது வலைத்தளங்களில் வெளியிடுவதற்கு இனி மின்னஞ்ச்ல்களை அனுப்ப போவதில்லை. சில வலைத்தளங்களில் நூல்களை எந்த அறிவிப்புமின்றி தகவல்களும் சொல்லாமல் வெளியிடுகிறார்கள். பிறகு அதை நீக்கும்போது மட்டும் இப்படி செஞ்சிட்டீங்களே என பிலாக்கணம் பாடுகிறார்கள். சுதந்திரமான கருத்துகளுக்கு நிறைய இடங்களில் ஏன் எங்கேயுமே தடைகள் உண்டு.
ஸ்டார்ட்அப் பற்றிய நூலொன்றைப் படித்து வருகிறேன். தொழில்துறை சார்ந்த அனுபவங்களை பெறுவதற்கான எனது பயிற்சிகளில் இதுவும் ஒன்று. களத்தில் நின்று சவால்களை நேருக்கு நேர் சந்திப்பது வேறு. அதற்கு ஆலோசனைகளை மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துகொள்வது வேறுவிதமானது. நூல் எழுதுவது இரண்டாவது ரகம். நான் தொழில் சார்ந்த தமிழ் நூல்களை எழுத விரும்புகிறேன். இப்படித்தான் நெ.1 சமூக தொழிலதிபர் நூல் உருவானது.
கருணையில்லாத வணிகம் என்று சொல்லுவார்கள். புகழ்பெற்ற வாக்கியம். ஆனால் நான் இதை நம்பவில்லை. சமூகத்தின் தேவை சார்ந்த தொழில்களே இந்தியாவுக்குத் தேவை என்று நினைக்கிறேன். சோல் என்ற படம் பார்த்தேன். வாழ்க்கைத் தேவை, மகிழ்ச்சி ஆகியவற்றைத் தேடும் மனிதரைப் பற்றிய படம்.
நன்றி!
சந்திப்போம்!
ச.அன்பரசு
27.1.2021
6
திறமையை புறந்தள்ளும் அரசியல்!
29.1.2021
அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?
எங்கள் இதழில் உங்களை எழுத வைப்பதாக கூறினேனே. அதற்கு திட்டங்களும் என்னிடமிருந்தன. ஆனால் இங்கே திறமையை விட சாதியும், அரசியல் நிலைப்பாடுகளும், சிபாரிசுகளும் முக்கியமாக உள்ளன. முத்தாரம் போன்ற முழு இதழின் பொறுப்பும் என்னிடம் இருந்தால் உங்களை அல்லது உங்களது மனைவியை எப்படியேனும் எழுத வைத்திருப்பேன். தற்போதைய நிலையில் என்னால் எனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. பிற்காலத்தில் நிலைமை மாறலாம்.
நான் அதிகம் சொந்தக்காரர்களின் வீடுகளுக்கு செல்கிற ஆள் கிடையாது. இதனால் எங்கள் அம்மா வழி மட்டுமல்ல பிறரையும் கூட என்ன உறவுமுறை என்றே எனக்குத் தெரியாது. இப்போதுதான் வீட்டில் இருக்கும்படி சூழல் அமைந்துள்ளது. நல்ல, கெட்ட நிகழ்ச்சிகளுக்கு சென்று பல்வேறு உறவுக்காரர்களைப் பார்த்து வருகிறேன். அவர்களின் உறவுமுறைகளை தெரிந்துவைத்துக்கொள்ள முயல்கிறேன்.
இக்கிகய் என்ற வாழ்க்கை முறை சார்ந்த நூல் ஒன்றைப் படித்து வருகிறேன்., ஜப்பானியர்களின் நீண்ட வாழ்க்கை முறை பற்றிய ஆய்வு முறைகள், முடிவுகள், அவர்களின் உணவு, மகிழ்ச்சி பற்றிய நிறைய விஷயங்களை அறிய முடிந்தது. நாபிக்கமலம் என்ற வண்ணதாசனின் சிறுகதை நூலை முழுமையாக படித்துவிட்டேன். உறவுகள், அன்பு என இரண்டு விஷயங்களை எடுத்துக்கொண்டு கதைகளை எழுதியுள்ளார் வண்ணதாசன். ஒவ்வாமை பிரச்னை இப்போது உடலில் கொஞ்சம் குறைந்துள்ளது. நன்றி!
ச.அன்பரசு
29.1.2021
7
உயிரின் பிசுபிசுப்பு!
3.2.2021
அன்பு நண்பர் சீனிவாசனுக்கு, நலமா?
நான் விரைவில் சென்னை வருகிறேன். ஆபீஸ் வேலைகள் தொடங்குகின்றன. வீட்டிலேயே வேலை செய்யும் முறை உற்பத்தித் திறனுக்கு பெரிய குந்தகம் விளைவிக்கவில்லை. வேலைகளும் குறையவில்லை. சிறப்பாகவே இருந்தது. நான் நிறைய நூல்களைப் படித்தேன். எழுதினேன். மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணம், அம்மாவோடு பேசிக்கொண்டு இருந்தது என நினைக்கிறேன்.
தனது இறுதிக்காலத்தில் உள்ள டெய்லர் மாமாவைப் போய் பார்த்தேன். எப்போதும் பிறருக்கு சிண்டு முடிந்துகொண்டிருந்தவர், தான் பேசியதே சரி என்று வாதிட்டவர் இன்று தள்ளாமை, பக்கவாதம் காரணமாக பேச முடியவில்லை. முழுக்க சைகைதான். அவரைப் பார்க்கும்போது எனக்கு மனதில் பெரும் பாரத்தைப் வைப்பது போல இருந்தது. அவரின் மனைவி அதே ஊரில் வேறு இடத்தில் குடியிருக்கிறார். இவர், வீட்டில் தனியாக இருக்கிறார். ஒருவரின் இறுதிக்காலம் இப்படி அமைவது உண்மையில் வருத்தத்திற்குரியதுதான்.
மாமாவின் கையைத் தொட்டேன். புகையிலையைத் தொடுவது போல இருந்தது. நான் அவரைத் தொட்டதை உணர்ந்தவர், என்ன நினைத்தாரோ உடனே கையெடுத்துக் கும்பிட்டார். அவர் கண்ணில் மட்டும் அகல் விளக்கு போல உயிர் பிசுபிசுப்பாக தெரிந்த்து. கூப்பிய கரங்களையும், கண்ணில் தெரிந்த உயிரின் மெல்லிய ஒளியையும் ஆயுளுக்கும் மறக்க முடியாது. நன்றி!
ச.அன்பரசு
3.2.2021
8
கற்றலை தடுக்கும் பரபரப்பு!
அன்புத்தோழர் சீனிவாசன் அவர்களுக்கு, வணக்கம். நலமா?
இன்று எங்கள் வேலைகளை நாங்கள் தொடங்கிவிட்டோம். இந்த நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராக வேலை தொடங்கிய நான், இப்போது பணி இறக்கம் செய்யப்பட்டு பக்க பொறுப்பாளராக மாற்றப்பட்டுள்ளேன். இப்போது எனக்கு பணி அழுத்தம் நிறையவே குறைந்துள்ளது. நேரடியாக மனிதர்களை பார்ப்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.
வேலை செய்த கணினியின் கடவுச்சொல், பயனர் பெயர் என அனைத்துமே மறந்துபோய்விட்டது. நினைவின் ஆழத்திற்கு சென்று அதனை நினைவிற்கு கொண்டு வர வேண்டியிருந்தது. எப்படியோ சமாளித்து விட்டேன். அலுவலக சகா பாலபாரதி அவர்களுக்கு கட்டுரைகளை எழுதி கொடுத்துக்கொண்டிருந்தேன். உன் கட்டுரை எழுதும் திறன் மாறவே இல்லை. நீ எப்படி நிறுவனத்திற்குள் வந்தாயோ அப்படியே உன் திறன் உள்ளது. மாற்றிக்கொள்ளவும் இல்லை. கற்று்க்கொள்ளவும் இல்லை என்று சொல்லி விமர்சித்தார். ஒருமுறை கட்டுரையை எழுதினால் அதனை இருமுறை சரிபார்ப்பேன். அவ்வளவுதான். நான் எழுதிய கட்டுரையை ஒருங்கிணைப்பாளர், பிழை திருத்துபவர், பொறுப்பாசிரியர் என மூன்று பேர் சரிபார்த்து திருத்துவார்கள். போதும்தானே?
வாக்கிய அமைப்புகள், சொல்ல வந்த விஷயம் சற்று சுற்றி வந்து புரிவது ஆகிய பலவீனங்கள் எனது எழுத்தில் உண்டு. மாணவர்களுக்கு எழுதுவது வேறு. வயது வந்தவர்களுக்கு எழுதுவது வேறு. நான் வயது வந்தவர்களுக்காக எழுதி வந்தவன். அப்போதை்ய தேவைக்கு வேகமாக கட்டுரைகளை எழுதுவேன். இனிமேல் கவனமாக கட்டுரைகளை எழுதிக் கொடுக்கவேண்டும். செம்மை செய்யவேண்டும்.
நன்றி!
ச. அன்பரசு
8.2.2021
கருத்துகள்
கருத்துரையிடுக