பத்து வளையங்களின் சக்தி கொண்ட அப்பாவை எதிர்க்கும் மகன்! சாங் சி- மார்வெல்
சாங் சி
மார்வெல்
அமெரிக்காவில் ஹோட்டல் ஒன்றில் வரும் வாடிக்கையாளர்களின் கார்களை பார்க்கிங் செய்து வரும் வேலையை நாயகனும் நாயகியும் செய்து வருகிறார்கள். இதில் நாயகனுக்கு கடந்த காலம் ஒன்றுண்டு. அதனை அவன் தனது தோழி பிளஸ் காதலியிடமும் சொல்லவில்லை. பேருந்து ஒன்றில் பயணிக்கும் போது நடைபெறும் மோதல், அவனை யாரென்று காதலிக்கு புரிய வைக்கிறது. நாயகனின் கழுத்தில் உள்ள டாலரை மட்டும் அந்த கும்பல் பிடிங்கிக்கொண்டு செல்கிறது. அதனைத் திரும்ப பெறுவதோடு, தனது தங்கையையும் காப்பாற்ற சாங் சி சீனா செல்கிறான். அங்கு என்ன நடந்தது? தங்கையின் உயிருக்கு வந்த ஆபத்தை தவிர்க்க முடிந்ததா? கொள்ளையடித்த கும்பலின் நோக்கம் என்ன என்பதுதான் கதை.
ஆசிய கலாசாரம், குடும்ப உறவு என ஹாலிவுட் திரும்பிவிட்டது படத்தில் தெரிகிறது. படம் நெடுக குடும்ப உறவுகள், கலாசாரம், தனது வேர் என்ன என்பதை நோக்கியே படம் செல்லுகிறது.
சாங் சியின் அப்பா, சாங் சியின் காதலியிடம் அவளது குடும்பம் மற்றும் சீனப் பெயரைக் கேட்கும் காட்சி இதற்கு உதாரணம். பேருந்தில் நடக்கும் சண்டைக்காட்சி பிரமாதமாக எடுக்கப்பட்டுள்ளது. அதுதான் கதைக்கான முக்கியமான திருப்புமுனை. பிறகு சாங் சி தனது குடும்பத்தைப் பார்க்க சீனாவுக்கு வருகிறான். அங்கு ஆவேசமும் கோபமும் கொண்ட தங்கையைப் பார்க்கிறான். அவளுக்கு தந்தை மீதும், அண்ணன் மீதும் சொல்ல முடியாத கோபம் இருக்கிறது. தன்னை தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டான் என தற்காப்புக்கலையைக் கற்று தனி சண்டைக்கூடத்தையே அவள் நடத்திக்கொண்டிருக்கிறாள்.
தனது நேசத்திற்குரியவர்களை காப்பாற்ற முடியாதபோது ஏற்படும் குற்றவுணர்ச்சியும் வலியும் எப்படி இருக்கும் என்பதை படத்தில் நன்றாக காட்டியிருக்கிறார்கள். இதில் சாங் சியின் அப்பா, அவரால் கொலைகளை செய்ய பயிற்றுவிக்கப்படும் சாங் சி, சாங் சி தன்னை வீட்டிலிருந்து கூட்டிக்கொண்டு செல்வான் என காத்திருக்கும் தங்கை என மூவருக்குமே வலியும் வேதனையும் இருக்கிறது. இவர்கள் தங்களை ஏதேனும் ஒருவகையில் மறைத்துக்கொண்டு வாழ்கிறார்கள்.
தங்களது அடையாளம் தெரிய வந்தால் கடந்த கால வேதனைகளையும் மீண்டும் நினைவுகூர வேண்டுமே என சாங் சி தனது பெயரைக் கூட மாற்றி வைத்துக்கொண்டு வாழ்கிறான். ஆனால் அவனது அப்பாவின் ஆக்ரோஷம், முரட்டு குணத்தால் அனைத்துமே மாறுகிறது.
இறுதியில் அவன் பேரழிவு ஏற்படுத்தும் நரக வாயிலை திறக்கும் அப்பாவை எதிர்த்து சண்டை போடுகிறான். ஆனால் அவருக்கு மனதில் இருக்கும் குற்றவுணர்ச்சியால் மிருகத்தின் குரல் கூட மனைவியின் குரலாக கேட்கிறது. அதனால் அவர் மகனைக் கொல்லக்கூட துணிகிறார். சாங் சி தனது அத்தை, தங்கை, காதலி ஆகியோரோடு சேர்ந்து ஆன்மாவை விழுங்கி பலம் பெறும் டிராகனை எதிர்த்து போரிட்டு வெல்வதோடு படம் நிறைவடைகிறது.
சண்டைக்கு இடையிலும் உணர்ச்சிகரமான காட்சிகள் உண்டு. நெகிழ்ச்சியான பகுதிகளை சிறப்பாக எடுத்திருக்கிறார்கள்.
கடந்தகாலம்
கோமாளிமேடை டீம்
Director: Destin Daniel Cretton
கருத்துகள்
கருத்துரையிடுக