கணிதவியலாளர்கள் 6 பேர் பற்றிய அறிமுகம்!

ஆபிரஹாம் டி மொய்வ்ரே (Abraham De Moivre) பிரெஞ்சு கணிதமேதை ஆபிரஹாம் 1667 ஆம்ஆண்டு மே 26 ஆம் தேதி பிரான்சின் சாம்பக்னே நகரில் பிறந்தார். கணிதத்தில் முறையான பட்டம் பெறாத ஆபிரஹாம், செடானில் கிரேக்க மொழி கற்க புரோடெஸ்டன்ட் அகாடமிக்கு அனுப்பப்பட்டார். கணிதத்தின் தொடக்கப் பாடங்களைக் கற்ற ஆபிரஹாம், 1684 ஆம் ஆண்டு பாரிசுக்குச் சென்று மேல்நிலைக்கல்வியைக் கற்றார். கணிதம் மீது வேட்கை கொண்டதால், அதில் தலைசிறந்த அறிஞரானார். பின்னர் நியூட்டனின் பிரின்சிபியா (Principia) என்ற நூலைப் படித்து ஊக்கம் கொண்டார். ராயல் சொசைட்டியின் அறிமுகம் கிடைக்க, நியூட்டன், எட்மண்ட் ஹாலே ஆகியோரின் நட்பும் கிடைத்தது. மாணவர்களுக்கு கணித வகுப்பு மட்டுமே வருமான ஆதாரம். நியூட்டன் உள்ளிட்ட முன்னோடிகளின் தியரிகளை விரிவுபடுத்தியதோடு டி மொய்வ்ரே சூத்திரம் (De Moivre’s Formula’), பெரிய எண்களின் செயல்பாடுகள் பற்றிய நூல் டாக்ட்ரின் ஆஃப் சான்சஸ் (‘Doctrine of Chances) ஆகியவை கணித துறையில் இவரின் பங்களிப்பு. நன்றி:https://famous-mathematicians.com/abraham-de-moivre/ 2 அடா லவ்லேஸ் (Ada Lovelace) புகழ்பெற்ற கவிஞர் பைரனின் மகள். இதைவிட முதல் பெண் கணினி நிரலாளர் என்று அழைப்பதே அடாவுக்கு பெருமை சேர்க்கும். 1815 ஆம் ஆண்டு டிச.10 அன்று பிறந்த அடா, என்சான்ட்ரஸ் ஆஃப் நம்பர்ஸ் (‘Enchantress of numbers’) தியரிக்காக நினைவுகூரப்படுகிறார். எட்டு வயதில் சுயமாகவே படகுகளைக் கட்டமைத்தவர், பதிமூன்று வயதில் எந்திரங்களை உருவாக்கி குடும்பத்தினரைப் பிரமிக்க வைத்தார். இசை, நடனம், ஜிம்னாஸ்டிக், அறிவியல், கணிதம் என அத்தனையிலும் திறமை காட்டினார். 1843 ஆம் ஆண்டு சார்லஸ் பாப்பேஜ், தான் உருவாக்கிய கணினி குறித்த உரையை டூரின் பல்கலையில் நடத்தினார். தி பிளான் எனும் கணினி நிரலைப் பற்றிய நிகழ்ச்சி அது. இதனை பிரெஞ்சில் கணிதவியலாளர் மெனாபிரியா மொழிபெயர்க்க, ஆங்கிலத்தில் அடா மொழிபெயர்த்தார். அடா எழுதிய கணித நிரல், கணினியின் அடிப்படையை மேம்படுத்த உதவியது. 1852 ஆம் ஆண்டு அடா புற்றுநோயால் காலமானார். 1979 ஆம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்புத்துறை அடாவின் கணித சாதனைகளுக்காக மென்பொருள் மொழிக்கு அடா என பெயரிட்டது. நன்றி: https://famous-mathematicians.com/ada-lovelace/ 3 அல் க்வார்ஸிமி (Al-Khwarizmi 780 -850) பெர்சியக் குடும்பத்தில் பிறந்த இஸ்லாமிய கணிதவியலாளர். கணிதம் வானியல் இரண்டிலும் பல்வேறு சாதனைகளைச் செய்தவர். இயற்கணிதம், சமன்பாடுகள் ஆகியவற்றில் பங்களித்தவர். அரபி மொழியில் தன் சிந்தனைகளை பதிவு செய்து உலகிற்கு வழங்கியவர். இவரின் ஹிசாப் அல் ஜாப்பர் வா அல் முக்காபாலா (“Hisab al-jabr w’al-muqabala”) எழுத்து வடிவமே அல்ஜீப்ரா என்று பெயர் உருவாக முக்கியக்காரணம். இயற்கணிதம், வானியல், வடிவியல், புவியியல் என இவரின் ஆர்வங்கள் பரந்துபட்டவை. இன்றைய ஈராக்கின் பாக்தாத்தில் அறிவியல் படைப்புகளை மொழியாக்கம் செய்து வந்தார். மேற்குலகில் உள்ள தசம புள்ளி முறை ஆகியவற்றை அறிந்திருந்ததோடு, கணக்கில் அல்காரிதம் என்பதையும் க்வார்ஸிமி கண்டுபிடித்தார். இவர் காம்பென்டியஸ் புக் ஆன் கால்குலேஷன் பை கம்ப்ளீசன் ( “Compendious Book on Calculation by Completion and Balancing”), தி இமேஜ் ஆஃப் தி எர்த் (“The Image of the Earth”), எக்ஸ்ட்ராடிக்ஷன் ஆஃப் ஜூயிஷ் எரா (“Extraction of the Jewish Era”) ஆகிய நூல்களை எழுதி தன் பெயரை வரலாற்றில் பதிவு செய்தார். கணிதத்தில் அரபி எண்களை உள்ளே கொண்டு வந்ததும் இவரே. 4 ஆலன் டூரிங் (Alan Turing 1912 -1954) ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது, 1912 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று இன்றைய ஒடிசாவின் சத்தர்பூரில் பிறந்தவர், ஆலன் டூரிங். இவரது பெற்றோர், ஆலனுக்கு சரியான கல்வியை அளிக்க அவரை லண்டனுக்கு அழைத்துச்சென்றனர். புனித மைக்கேல் பள்ளி, செர்பார்ன் பள்ளி ஆகியவற்றில் கல்வி பயின்றார். கணிதப்பாடத்தில் ஆலன் ஆர்வம் காட்டினாலும் ஆசிரியர்கள் அதனை அங்கீகரிக்கவில்லை. ஏன்? செர்பார்ன் பள்ளியில் பழைய கிளாசிக் நூல்களுக்கு மட்டுமே மதிப்பு. முறையான பயிற்சி இன்றி பல்வேறு கணக்குகளுக்கு தீர்வு கண்டுபிடித்தார் ஆலன். அதோடு ஐன்ஸ்டீனின் கருத்துக்களை பதினாறு வயதில் உள்வாங்கி, அவரின் இயக்கவியல் தியரியைக் கேள்வி கேட்டார். பின்னர் கேம்ப்ரிட்ஜிலுள்ள கிங் கல்லூரியில் கல்வி கற்றார். எண்களை கணக்கிடுவதற்கான எந்திரம் ஒன்றை உருவாக்கினார். இதுவே இன்றைய கணினியின் கணக்கிடும் திறனுக்கு முன்னோடி கருவி. ‘Computing Machinery and Intelligence in Mind’ என்ற இவரது அறிக்கை இன்றைய செயற்கை நுண்ணறிவை சுட்டிக்காட்டியது. கணிதம், உயிரியல், கணினி என பல்துறையிலும் பங்களிப்பு செய்தவர் ஆலன் டூரிங். நன்றி: https://famous-mathematicians.com/alan-turing/ 5 ஆல்பெர்டஸ் மேக்னஸ் (Albertus Magnus 1193 - 1280) கல்வியாளர் மற்றும் தத்துவவாதியான ஆல்பெர்டஸ் பவேரியாவில் பிறந்தவர். பதுவா பல்கலையில் கல்வி கற்றவர், பாரிசில் முனைவர் பட்டம் பெற்றார். அரிஸ்டாட்டிலை குருவாக வழிபட்டவர், எழுபது நூல்களுக்கும் மேல் எழுதியவர். கணிதம், பொருளாதாரம், அரசியல், கொள்கைகள், விலங்கியல், வேதியியல், இயற்பியல், புவியியல், வானியல் என பல்துறை சார்ந்தும் ஏராளமாக கட்டுரைகளை எழுதிக் குவித்த ஆளுமை. இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவை பிசிகா, சம்மா தியாலஜியா, டி நேச்சுரா லோகரம் (‘Physica’, ‘Summa theologiae’ ‘De Natura Locorum’). 6 கிரேக்க கணிதவியலாளரான யூக்லிட், இன்றைக்கு நாம் பள்ளிகளில் படிக்கும் வடிவியல் கணக்குகளை உருவாக்கியவர். இவர் அத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக, வடிவியலின் தந்தை என புகழ்பெற்றார். யூக்லிட் என்ற பெயருக்கு, மகிமை என்று பொருள். கி.மு.300 இல் இவர் எழுதிய தி எலிமென்ட்ஸ் (The Elements) என்ற நூல், கணிதத் துறையில் முக்கியமானது. இவற்றோடு எண்ணியல், வடிவியல், எண்கணிதம் ஆகியவற்றைப் பற்றி 13 நூல்களை எழுதியுள்ளார். எகிப்திலுள்ள அலெக்சாண்ட்ரியாவுக்கு வருவதற்கு முன்பு, பிளேட்டோவின் அகாடமியில் நூல்களை வாசித்து வந்தார். மேலும் நகரில் அரசு அமைத்திருந்த பெரிய நூலகம் யூக்லிட்டின் அறிவுப்பசியைப் போக்கியது. இவரின் காலத்தில் புகழ்பெற்றிருந்த மற்றொரு கணிதவியலாளர், கிளாடியஸ் டோலமி (கி.மு.323-283). தகவல்: .10-facts-about.com 7 கணிதப் பரிசுகள்! திரைப்படங்களுக்கு உயரிய விருதான ஆஸ்கர், நோபல் பரிசுகள் வழங்கப்படுவது அனைவருக்கும் தெரிந்ததே. அதேசமயம் அறிவியல் துறைகளுக்கும் இதே போல உயரிய விருதுகள் வழங்கப்படுவது உண்டு. கணித துறை ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்படும் சாதனை விருதுகள் இதோ!... பீல்ட்ஸ் மெடல் (The Fields Medal) கணித துறையில் சாதனை செய்பவர்களை அங்கீகரிக்கும் விதமாக, 1936 ஆம் ஆண்டு முதல் பீல்ட்ஸ் பரிசு வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்குள்ளான கண்டுபிடிப்பாளர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் பரிசு இது. உலக கணித மாநாட்டில் (IMU), 15 ஆயிரம் டாலர்கள் மதிப்பிலான இப்பரிசு வழங்கப்படுகிறது. கனடாவைச் சேர்ந்த ஜான் சார்லஸ் ஃபீல்ட்ஸ் என்ற கணிதமேதையைப் போற்ற இப்பரிசு உருவானது. ஆபல் பரிசு (Abel Prize) நார்வே அரசர் வழங்கும் கணித துறையை ஊக்குவிக்கும் முக்கியமான பரிசு. 2001 ஆம் ஆண்டு உருவான இப்பரிசு நார்வே கணிதவியலாளர் நீல்ஸ் ஹென்ரிக் ஆபல் (Niels Henrik Abel) நினைவாக வழங்கப்பட்டு வருகிறது. கணித துறையின் நோபல் பரிசாக குறிப்பிடும் இப்பரிசுடன் 7லட்சம் டாலர்கள் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது. வோல்ஃப் பரிசு (Wolf Prize in Mathematics) இஸ்ரேலைச் சேர்ந்த வோல்ஃப் பவுண்டேஷன் கணிதத்துறைக்கான பரிசை வழங்குகிறது. ஆண்டுதோறும் ஆறு வேறுபட்ட பரிசுகளை வழங்கும் இந்த அமைப்பு கணிதத்திற்கெனவும் இந்தப் பரிசை வழங்குகிறது. 1978 ஆம் ஆண்டு முதலாக இப்பரிசை பீட்டர் சர்னாக், மைக்கேல் ஆர்டின், ஜார்ஜ் டி மொஸ்டொவ், லூயிஸ் காஃபரெல்லி, மைக்கேல் ஆஸ்பாசெர் ஆகிய கணிதவியலாளர்கள் பெற்றுள்ளனர். பரிசு சான்றிதழுடன் 1 லட்சம் டாலர்கள் நிதியையும் வழங்குகின்றனர். செரின் பதக்கம் (Chern Medal) நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் பரிசு. 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2,50,000 டாலர்கள் மதிப்பு கொண்ட பரிசு உலக கணித மாநாட்டில் வழங்கப்படுகிறது. 2014 ஆம்ஆண்டு இப்பரிசை கணிதவியலாளர் பிலிப் கிரிஃபித் வென்றார். வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருது இது. நன்றி: http://famous-mathematicians.org/top-awards-in-mathematics/ தொகுப்பு: அன்பரசு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்