சுயநினைவு எங்கே போனது - மயிலாப்பூர் டைம்ஸ்
பொதுவாக நாம் தினசரி நிறைய நினைவுகளால் அலைகழிக்கப்பட்டு வருகிறோம். அதில் குறை சொல்ல ஏதுமில்லை. ஆனால் மக்களுடன் இணைந்து வேலைகளை செய்யும்போது, அது நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தும். நெடுநாள் பார்க்காத நண்பர், அவர் கல்லூரியில் அல்லது பள்ளியில் படித்திருப்பார். போனில் பேசிவிட்டு உடனே தன்னை அடையாளம் கண்டுபிடி என மோசமாக விளையாடுவார். இதெல்லாம் சத்திய சோதனை என்றாலும் வேறு வகை.
நான் மயிலாப்பூரில் உள்ள நெருக்கடியான தெரு ஒன்றில் உள்ள மேன்ஷனில் குடியிருக்கிறேன். அங்கு புதிதாக வலம்புரி பிள்ளையார் கோவிலுக்கு பூஜை செய்யும் குழு ஒன்று வந்தது. வாடகைக்கு வந்தது ஒருவர் என்றாலும் அவருக்கு உதவி செய்ய வந்த பரிசாரகர்கள் குழு அதிகம். இவர்கள் அடிக்கடி தான் எங்கே இருக்கிறோம் என்று தெரியாமல் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருப்பார்கள். ஒருநாள் இரவு ஆபீசிலிருந்து ரூமுக்கு சென்றேன். சென்றபிறகு குளிக்கலாமே என்று தோன்றியது. நேரமே குளிக்கவில்லையென்றால் பக்கத்தில் உள்ள ஜவ்வாது மனிதர், குளியலறையை கடுப்பேற்றும் ஜவ்வாது மணம் கொண்ட பாத்டப்பாக மாற்றிவிடுவார். தலையே வலிக்கும் அளவு உடம்பில் ஜவ்வாது பூசிக்கொள்வது அவருக்கு பிடிக்கும். அவருக்கு இடம் கொடுக்காது குளித்துவிடலாம் என சென்றேன். பாத்ரூமின் சிறப்பம்சம் என்னவென்றால், அதனை யாரும் லாக் செய்ய முடியாது. கதவு பாட்டிற்கு எனக்கென்ன என தனியாக ஆடிக்கொண்டிருக்கும். விஜய் படத்தில் விஜய்தானே முக்கியம் கதையா முக்கியம் என்பதுபோலத்தான். அதனை பக்கெட்டில் நீர் நிரப்பி ஆதரவுக்கு வைத்தால்தான் நமது கோமணக் கோலம் அடுத்த அறைக்காரருக்கு தெரியாமல் இருக்கும். அப்படி பார்த்து பக்குவமாக குளித்துவிட்டு வெளியே வந்தால், கட்டம் போட்ட சட்டை போட்டவர், சுவிட்ச் பாக்சில் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தார்.
மேப்பில் தமிழ்நாடு எங்கே இருக்கிறது என்பதற்கு குறையாத ஈடுபாடு காட்டி தேடுகிறாரே என்ன என்று பார்த்தால், டாய்லெட்டுக்கான ஸ்விட்சை தேடியிருக்கிறார். தேடி அதையும் கண்டுபிடித்து ஸ்விட்சை போட்டுவிட்டார். நான் வெளியே வந்ததும், டாய்லெட் ஸ்விட்ச் எதுங்க என்றார். ஏற்கெனவே ஸ்விட்சை போட்டுவிட்டாரே என பார்த்தாலும் கேள்வி கேட்டால் சொல்வதுதானே இயல்பு என கடைசி ஸ்விட்சுங்க என்றேன். உடனே வேகமாக அதனை ஆப் செய்தவர், தீர்மானமாக டாய்லெட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். என்ன இந்தாளு லூசா என நினைத்தவன். சரி காது கேட்காது போல என ஸ்விட்சை மீண்டும் ஆன் செய்தேன். உடனே டாய்லெட் கதவு சாத்தும் முன்பு தேங்க்ஸ் என்று குரல் கேட்டது. அப்போது நினைத்துக்கொண்டேன். இந்த தெளிவும் துணிச்சலும் புத்திசாலித்தனமும் பெரிய இடத்தில் உன்னைக் கொண்டுபோய் சேர்க்கும் என.
2
ராயப்பேட்டை அலுவலகத்தில் வேலை பார்க்கத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடியப்போகிறது. இங்கே உருப்படியான சாப்பாட்டுக் கடை என்று ஏதும் கிடையாது. அஜந்தா பஸ்டாப் ரோட்டைக் கடந்து சிறிது தூரம் போனால் மயிலாப்பூருக்கு செல்லும் பாலம் வரும். அதன் கீழே சிறிய டீ மற்றும் டிபன் கடை உண்டு. கேரளாக்காரர் ஒருவர் அதை நடத்தி வருகிறார். அங்கு நிலையாக ஆட்கள் வேலை செய்வது சாத்தியமல்ல என்று ஓனரின் புடைத்த மூக்கைப் பார்த்தாலே தெரிந்துவிடும். எட்டு பேர் உட்கார்ந்து நெருக்கியடித்துக்கொண்டு ஆனந்தமாக சாப்பிட முடியும் கடை. அதனையொட்டி சிறிய பெட்டிக்கடை உள்ளது. அங்குதான் முதலில் நான் காலையில் இட்லி வாங்கி சாப்பிடுவேன். இன்றுவரையும் கூட நான் சென்றபோது, புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் இருந்தார். அவர் பார்வையில் ஐயையோ இந்த வேலை நிலைக்குமா என்ற பயம் இருந்தது. என்னைப் பார்த்ததும் வேலை வந்திருச்சே என அவஸ்தையாகப் பார்த்தார். அப்போதே எனது வயிற்றில் பட் பட பட என சில சப்தங்கள் வந்தன. ஆண்டு முழுக்க எனக்கு வயிற்றில் ஏதோ வேதி ஆய்வகம் போல சத்தங்கள் வந்து கொண்டே இருக்கும். ஏதோ நடக்கப்போகிறது என யூகித்தேன். என்ன வேணும் என்றவரை பொங்கல் பார்சல் என்று சொன்னேன். 30 ரூபாய் பொங்கல், முழுக்க கெட்டியாக இருக்காது. பாசிப்பயரும் அரிசியும் நல்ல பக்குவத்தில் வேக வைத்திருப்பார்கள். சாப்பிடும்போதும் அது தொண்டையில் சிக்காது. சில இடங்களில் பொங்கலைத் தின்று கட்டியாய் தொண்டையில் சிக்க, கிழங்கு தின்ற நாய் பரிதாபமாக கத்துமே அப்படியெல்லாம் கத்தியிருக்கிறேன். ஆனால் இந்த மெஸ்சில் அந்த பிரச்னை இல்லை. பொங்கலை பட்டாசுக்கு நூல் சுற்றுவது போல சுற்றி கட்டியிருந்தார் புது வேலையாள். சரி உள்ளே என்ன பண்ணி வெச்சிருக்காரோ, கர்த்தரே என வேண்டிக்கொண்டு சாலையைக் கடந்து ஆபீஸ் வந்தேன்.
செக்யூரிட்டி அண்ணனுக்கு வணக்கம் வைத்துவிட்டு பிஸ்லரியில் கையைக் கழுவி விட்டு உள்ளே வந்து மேசையில் உட்கார்ந்தேன். ப்ளூஸ்டார் எப்போதும் போல உறுமிக்கொண்டு குளிர்ந்த காற்றை முகத்தில் இறைத்தது. சோழ அரசன் இப்படித்தானே ஓலைச்சுவடியை பிரித்திருப்பான் என நினைத்துக்கொண்டே பொட்டலத்தைப் பிரித்தேன். பொங்கல் நீரும் சோறும் பருப்புமாக இருந்தது. ஆனால் கூட சிவப்பாக இருந்ததைத்தான் என்னவென்று தெரியவில்லை. எடுத்து சுவைத்து பார்த்தபோதுதான் தெரிந்தது. வடகறியை எடுத்து பொங்கலோடு சேர்த்து கட்டியிருக்கிறார் என்று. புது வேலையாளின் பதட்டம் எப்படியெல்லாம் வாடிக்கையாளர்களை பாதிக்கிறது பாருங்கள். பொங்கல், இட்லி, வடகறி, சட்னி, சாம்பார் என அனைத்துமே சாப்பிடும் பொருள்தானே என நினைத்திருப்பார் போல. அன்று வடகறியின் வினோத சுவை வாயில் பொங்கலைச் சாப்பிட்டேன். நாம் நன்றாக இருக்க பக்கத்துவீட்டுக்காரன் சரியாக அமையவேண்டும் என்று சொல்வார்கள். இங்கும் அதேதான். நீங்கள் காசு கொடுத்து பொருளை வாங்கினாலும் கூட அது சரியாக இருக்க, அவர் கான்சியஸாக இருக்கவேண்டும். என்ன செய்கிறோம். என்ன சொன்னார்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டே வேலை பார்க்கவேண்டும். இல்லையெனில் சோலி முடிந்துவிடும். சில நாட்கள் கழித்து அந்தக்கடைக்கு போனபோது, புதிதாக சேர்ந்தவரைக் காணவில்லை. அப்போதும் என்னைப் பார்த்தபோது அவர் முகத்தில் தெரிந்த பதட்டத்தை என்னால் மறக்கவே முடியாது.
கருத்துகள்
கருத்துரையிடுக