தனது காதலி செய்த கொலையை கணித அறிவால் மறைக்கும் கணித ஆசிரியர்! - தி பர்ஃபெக்ட் நம்பர் - தென் கொரியா
பர்ஃபெக்ட் நம்பர் (2012) |
பர்ஃபெக்ட் நம்பர்
தென்கொரியா
ஜப்பான் எழுத்தாளர் எழுதிய தி டிவோஷன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ் என்ற நாவலைத் தழுவிய படம்.
ஒரு பெண் செய்த கொலையை அவளை விரும்பும் கணித ஆசிரியர் எப்படி மறைக்கிறார். அந்த முயற்சியில் தன்னை எப்படி எரித்துக்கொள்கிறார் என்பதே கதை.
சிறு வயதிலிருந்து கணிதம் தவிர வேறெதையும் கண்டுகொள்ளாதவர்தான் நாயகன். நட்பு, காதல் என எதுவுமே அவருக்கு அமையவில்லை. கணிதம் சார்ந்த சிக்கல் முடிச்சை அவிழ்க்கும் முயற்சியில் இருக்கிறார்.
நண்பன் மீது சந்தேகம் கொள்ளும் டிடெக்டிவ் |
தினமும் எழுந்து பள்ளிக்கு வேலைக்கு செல்வது, அங்கு செல்லும் வழியில் உள்ள கடையில் மதிய உணவை வாங்குவது என வாழ்க்கை செல்கிறது. மதிய வாங்கும் இடத்தில் வேலை செய்யும் பெண்ணை மெல்ல நேசிக்கத் தொடங்குகிறார். அந்தப் பெண், திருமணமாகி விவகாரத்தானவர். அவர் தனது உறவினர் குழந்தையுடன், கணித ஆசிரியரின் அறைக்கு அருகில் தங்கியிருக்கிறார். ஹோட்டலில் வேலை செய்யும் பெண்ணுக்கு முன்கதை உள்ளது. அது சோகமான வருத்தக்கூடிய கதை. அதிலிருந்து தப்பிக்கவே அவர் சியோலுக்கு வந்து வேலை செய்துகொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நாம் மறக்க நினைக்கும் கடந்தகாலம் நிகழ்கால வாழ்க்கையில் வந்தால் எப்படியிருக்கும் என்பதுதான் முக்கியமான மையக் காட்சி.
இப்போதுதான் காட்சியில் கணித ஆசிரியர் தானாகவே முன்வந்து உதவ நினைக்கிறார். அவர் ஏன் இப்படி அந்த பெண்ணுக்கு உதவுகிறார் என்பதை படத்தின் பின்பகுதியில் அறிகிறோம். படத்தின் நிறைய இடங்களில் உருவாகும் மௌனமே படத்தின் அடர்த்தியை கூட்டுகிறது.
கணித ஆசிரியருக்கு நிறைய வசனங்கள் கிடையாது. பெரும்பாலும மெல்லிய புன்சிரிப்பும், தலையசைப்பும். நடந்துசெல்வதும்தான் அவரின் பணி. ஆனால் அதை வைத்தே பார்வையாளர்களின் மனதை கவர்ந்து இழுக்கிறார். இது உண்மையில் இயக்குநரின் திறமை.
முந்தைய திருமணத்தில் பெற்ற கசப்பான அனுபவங்களால் காதல் என்றாலே அது செக்ஸூக்காகவே ... வடிவங்கள் மட்டுமே மாறுகிறது என ஒவ்வாமையில் இருக்கிறார் விதவைப் பெண். இதனால் கணித ஆசிரியர் தயங்கி அருகில் வந்தால் கூட அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். துயரங்களால் உள்ளொடுங்கிப் போன பாத்திரத்தை நன்றாக நடித்திருக்கிறார் இதை ஏற்ற நடிகை.
விரல் துடிக்க கணிதம் போடும் நாயகன் |
கொலை நடந்த பிறகு, தான் சிறைக்கு போய்விட்டால் தனது உறவினர் பெண்ணை எப்படி வளர்ப்பது என திகைப்பில் ஆழ்வதும், கண்ணீர் விடுவதும், பிறகு கணித ஆசிரியர் உதவியுடன் அதிலிருந்து மெல்ல மீளவதும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன.
கணித ஆசிரியரைப் பார்த்து, உனக்கு என்னதான் வேணும்? என கதறி அழுதபடி நடிக்கும் காட்சியும். அதற்கு அங்கே பதில் சொல்லாத நாயகன், பிறகு தனது செயல்பாடுகள் மூலம் தனது காதலை நிரூபிப்பது மனதை ரணமாக்குகிறது. கையில் இருப்பது கண்ணாடியா வைரமா என குருடன் எப்படி அறிவான் என்பதுபோல விதவைப் பெண்ணின் நிலை மாறுகிறது.
போலீஸ் டிடெக்டிவ் முக்கியமான பாத்திரம் என்று கூறலாம். எப்போதும் தனது பள்ள நண்பனை டூப் கோரஸ் என கிண்டல் செய்தபடி இருப்பது, பீர் குடிப்பது என தொடக்கத்தில் இருப்பார். மெல்ல மர்மங்கள் வெளிப்பட தனது கணித ஆசிரிய நண்பனை திகிலுடன் பார்ப்பது, பிறகு உண்மை அறிந்து இறுதிக்காட்சியில் அவனைக் காப்பாற்ற முயல்வது என சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதைக்கு பொருத்தமாக கணிதம் தொடர்பான வசனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. முதல்முறை இயல்பாக சொல்லப்பட்டு பின் அவையே வழக்கை துப்புதுலக்க டிடெக்டிவ்விற்கு உதவுகிறது. இதுவும் இயக்குநரின் திறமை என்று கூறலாம். இறுதிக்காட்சி யாரும் எதிர்பாராத ஒன்றுதான்.
கடந்துபோகும் காதல் அல்ல
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக