எழுத்து திறமையை வளர்த்துக்கொண்டு சாதிக்கும் வேதாந்தம்! - மிஸ்டர் வேதாந்தம் 2 - தேவன்
மிஸ்டர் வேதாந்தம் 2
தேவன்
அல்லயன்ஸ்
மிஸ்டர் வேதாந்தம் நூலின் இரண்டாவது பாகம். முதல் பாகத்தில் வேதாந்தம், தலைமுறையாக பணக்காரனாக இருந்தாலும் மெல்ல குடும்ப நிலையை உணர்கிறான். ஆனால் அதற்குள் நிலைமை கைமீறிப்போகிறது.
தஞ்சையில் இருந்த அப்பா தேசிகாச்சாரி, பணத்தை கௌரவமாக செலவிட்டு நிறைய கடன்களுக்குள் சிக்கியிருக்கிறார். அதனை பையனுக்கு நேரடியாக சொல்லாமல் தவிர்க்கிறார். படிப்பில் அவன் பட்டம் பெற்றால், தனது வாழ்க்கையைப் பாரத்துக்கொள்வான் என நினைக்கிறார். ஆனால் வேதாந்தத்தின் மனம் படிப்பில் செல்லவில்லை. அவனுக்கு எழுதுவதில் திறமை உள்ளது. அதனை வளர்த்துக்கொண்டு வேலையைத் தேடலாம் என நினைக்கிறான்.
தேசிக்காச்சாரியின் உடல்நிலை கெடும்போது, அவனது நிதிநிலை அவனது மாமா கோபாலசாமி அய்யங்காருக்கு தெரிய வருகிறது. அவருக்கு தேசிகாசாரியின் பணத்தின் மீது ஆசை. தனது பேத்திகளில் ஒருத்திக்கு வேதாந்தத்தை மணம் செய்து கொடுத்தால், சொத்து கிடைக்கும் என நினைக்கிறார். ஆனால் தேசிகாச்சாரிக்கு கடன் மட்டுமே இருக்கிறது என தெரிந்ததும், கடன்காரர்களோடு சேர்ந்து கூடி சொத்தை சூறையாடுகிறார். இதனால் வேதாந்தம் அத்தையோடு தங்கியிருக்கிறான். தேர்விலும் தோல்வியடைகிறான். அப்போது டியூசன் எடுக்க சென்னைக்கு செல்கிறான்.
இரண்டாவது பகுதியில், முக்கியமான பாத்திரங்களாக மாறுவது பெரிய பணக்காரராக வரும் சுவாமி, பத்திரிகையாளராக சுற்றும் சிங்கம் ஆகியோர்தான். இப்பகுதியில்தான் வழுக்கைத்தலையாக இருக்கும் பத்திரிகையாளர் சிங்கம் யார் என முழுமையாக அடையாளம் தெரிய வருகிறது வேதாந்தத்திற்கு.. ராம், வெங்கட் போன்றோர் சுயநலத்திற்காக 180 ரூபாயை விட்டு வைக்காமல் வேதாந்தத்தை ஏமாற்றிப் பிழைக்கின்றனர். ஆனால் சிங்கம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நகைச்சுவையாக பேசிக்கொண்டே வேதாந்தத்திற்கான வேலை முயற்சியை செய்தபடி இருக்கிறான்.
பெருமாளை அனுதினமும் வணங்கும், பிரார்த்திக்கும் வேதாந்தத்திற்கு சிங்கமும், சுவாமியும்தான் கடவுளாக தெரிகிறார்கள். முந்தைய பகுதியில் எழுதிய சிறுகதையை விட இம்முறை எழுதும் கட்டுரைகள், பணப்பரிசையும் புகழையும் பெற்றுத் தருகின்றன.
கல்கத்தாவுக்கு சிங்கத்தின் சிபாரிசு மூலம் செல்லும் வேதாந்தம் அங்குள்ள சூழலை ரசிக்கிறான். ஆனால் வேலை செய்யும் சர்மா அவனை சித்திரவதை செய்கிறார். இதனால் வேலையில் பாதியிலேயே திரும்பிவிடுகிறான். இந்த நேரத்தில் அவனது அத்தை மகள் செல்லத்திற்கு வேதாந்தம் தன்னை விட்டு வேறொரு பெண்ணை நோக்கி செல்கிறான் என சந்தேகம் வருகிறது. அவள் எழுதிய கடிதங்களை வேதாந்த த்தின் வாடகை வீட்டில் உள்ள குழந்தைகள் கிழித்து போட்டுவிடுகின்றன. இதனால் வேதாந்தத்திற்கு செல்லம், அவனது அத்தை ஆகியோருக்கு நேரும் பிரச்னைகள் ஏதும் தெரியாது.
ஊருக்கு திரும்பியதும் இதுபற்றி சிங்கத்திடம் பேசுகிறான். ஊருக்கு அனுப்பிய கடிதம் அவனுக்கே திரும்பி வந்துவிட, விரக்தியாகிறான். அவரும் , தான் தஞ்சாவூர் பக்கள் கட்டுரை எழுதுவதற்காக போகிறேன்.நான் விசாரிக்கிறேன் என்கிறார். இதற்கிடையில் ரத்னசாமி என்பவரின் பதிப்பகத்தில் வேதாந்தத்திற்கு வேலை கிடைக்கிறது. இதுவும் சிங்கத்தின் சிபாரிசில் கிடைக்கிறது.
ரத்னசாமி வேலை நிறைய வாங்குவாரே ஒழிய காசை கொஞ்சமே கொஞ்சமாக கொடுப்பார் என்பதை வேதாந்தம கசப்பான அனுபவங்களுக்குப் பிறகே அறிகிறான். ஆனால் அதற்குள் அவனது கட்டுரை, போட்டி ஒன்றில் முதல் பரிசு பெறுகிறது. அது ஒருவகையில் வேதாந்தத்திற்கு எழுத்து மீது பெரிய நம்பிக்கையை அளிக்கிறது.
ஆனால் அதை அவன் ரசிக்கும் நிலையில் இருப்பதில்லை. அத்தையும், மகள் செல்லமும் வீட்டை விட்டு வேறு ஊருக்கு போனதால் குழப்பமாகி கவலையில் திரிகிறான். அப்போது அவனுக்கு பல்வேறு உதவிகளை செய்த சுவாமியும் தன்போக்கில் ஒரு முடிவெடுக்கிறார். பணக்காரர் சீனிவாச்சாரி என்பவரின் மகள் வசந்தாவுக்கு மணம் செய்ய வரனாக வேதாந்தத்தைப் பரிந்துரைக்கிறார். இது தெரிந்து வேதாந்தம் திகைத்துப் போகிறான். உதவி செய்பவரிடம் தான் இன்னொரு பெண்ணை விரும்புவதாக எப்படி சொல்வது தவிக்கிறான்.
செல்லத்தை வேதாந்தம் கண்டுபிடித்தானா, வேதாந்தம் செல்லத்தை காதலிக்கிறான் என்பதை சுவாமி ஏற்றாரா, ஏராளமான உதவிகளை செய்துகொண்டு இருக்கும் சிங்கம் உண்மையில் யார்? சுவாமி, சிங்கம், செல்லம், அத்தை என அனைவரையும் இணைக்கும் புள்ளியும் உள்ளது. அது யார் என்பதுதான் இறுதிப்பகுதி சுவாரசியம்.
சுவாமியின் சாமர்த்தியமான கோபத்தைக் காட்டும் உரையாடல்கள், சிங்கத்தின் பதிலைப் பிடுங்கும் பேச்சு, தங்களுக்கு தேவையான விஷயங்களை வளைக்கும் பணக்கார ர்களின் நுட்பங்கள் என நூல் முழுக்க சுவாரசியமாக திருப்பங்கள், நிகழ்ச்சிகள் உள்ளன.
கல்கத்தா காளி பற்றிய விவரிப்பு வேதாந்தத்தின் இறைஞ்சுதல் மனநிலையை வாசிக்கும் நமது மனநிலையிலும் ஏற்படுத்துகிறது. அந்தளவு அழகாக அப்பகுதியை தேவன் எழுதியுள்ளார். செல்லம், வேதாந்தம் என இருவர் சந்திக்கும்போது நடைபெறும் உரையாடல் சிறப்பாக உள்ளது.
மந்திரியான சாஸ்திரி முருகனை நினைத்து உளமாறப் பாடும் பாடல் பிரமாதம். அந்தப் பகுதியில் உள்ளமே அப்படியே நெக்குருகி விடுகிறது. அரசியலில் உள்ளவர் என்றாலும் கூட ஆச்சரியமான பாத்திரமாக கலைஞானம் கொண்டவராக அதனை உருவாக்கியிருப்பது தேவனின் எழுத்துத் திறனுக்கு சாட்சி.
வேதாந்தத்தின் குற்றவுணர்ச்சி கொண்ட மனநிலை, செல்லத்தின் தடுமாற்றம், சுவாமியின் நாசூக்கான கோபம், சிங்கத்தின் நைச்சியம், சுவாமியின் மனைவி பூமாவின் பெருந்தன்மை, கருணை என உணர்வுகளை வெளிக்காட்டும் உரையாடல்கள் பொருத்தமாக அமைந்துள்ளன. அதுவே இந்த நாவலை சிறப்பானதாக்குகிறது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக