இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு நூறாண்டு ஆகிறது!- ஜனவரி 11

 






சார்லஸ்,பிரடெரிக்
படம்: இந்து தமிழ்


இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு நூறாண்டானதை எப்போதும் போல முந்திக்கொண்டு ஆனந்த விகடனின் அகஸ்டஸ் எழுதிவிட்டார். இருந்தாலும் அதன் முக்கியத்துவத்தைக் கருதி மீண்டும் ஒருமுறை அதனை சுருக்கமாக பதிவு செய்கிறோம். 

நூறாண்டுகளுக்கு முன்னர், ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால் அவரை புற்றுநோய் வந்தவர்கள் போலவே பார்ப்பார்கள். என்ன பாவம் பண்ணினியோ போச்சு உசுரு போச்சு என பாவப்பார்வை பார்த்து நொட்டுப் பேச்சு பேசுவார்கள். அவர்கள் பொய்யாக வருந்திய விஷயம் உண்மைதான்.  குறைபாடு கண்டுபிடிக்கப்பட்ட மிகச்சில மாதங்களில் நோயாளி இறந்துபோய் கல்லறை வாசகங்களை தேடி பொறித்து விடுவார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இன்சுலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. நோயாளி உணவுக்கட்டுப்பாடுடன் இருந்தால் நிறைய ஆண்டுகள் வாழலாம். 

கணையத்தில் சுரக்கும் இன்சுலின்தான் இப்படி இறப்புக்கு காரணம் என்பதை எட்வர்ட் ஆல்பெர்ட் ஷார்ப்பி ஹாபர் என்பவர் கண்டுபிடித்தார். இன்சுலின் என்ற வார்த்தையே இவரது உபயம்தான். 1921ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த மருத்துவர் ஃபிரடெரிக் பாண்டிங் என்பவர், கணையத்திலிருந்து இன்சுலினை பெறும் முயற்சியில் இறங்கினார். இவர் தனது ஆராய்ச்சிக்கு உதவும்படி டொரன்டோ பல்கலைக்கழக மருத்துவத்துறை தலைவர் மெக்லாய்டை அணுகினார். அவர், சார்லஸ் பெஸ்ட் என்பவரை அனுப்பி வைத்தார். இவர்கள் இருவரும் இணைந்து நாய்களை பிடித்து இன்சுலின் சோதனையை செய்தார்கள். 

முதலில் நாயின் உடலிலிருந்து கணையத்தை அகற்றிவிடுவது, இதன் காரணமாக நாய்க்கு நீரிழிவு ஏற்படும். பிறகு அதன் கணையத்தில் சுரக்கும் இன்சுலினை உடலில் செலுத்துவது என முயன்றனர். இதனால் நாய் இறக்காமல் பிழைத்தது. 1921ஆம் ஆண்டு சார்லஸ் பெஸ்ட், ஃபிரடெரிக் ஆகியோரின் கண்டுபிடிப்பு உலகிற்கு தெரிய வந்தது. இந்த முறை மனிதர்களை சோதிக்கத் தொடங்கினர். 

பண்ணை விலங்குகளிடமிருந்து இன்சுலினைப் பெற்ற ஆய்வாளர்கள் அதனை பதினான்கு வயதான லியனார்ட் தாம்சன் என்ற நீரிழிவு குறைபாடு கொண்ட சிறுவனுக்கு செலுத்தினர். இதன்மூலம் அச்சிறுவனின் பாதிப்பு சீர்பட்டது. 1922ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இச்சோதனை நடத்தப்பட்டு வெற்றி கிடைத்தது. அப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு. பல்கலைக்கழகம் இன்சுலின் தயாரிப்பிற்கான காப்புரிமையை மருந்து நிறுவனங்களுக்கு விலையின்றி வழங்கியது. அப்போதுதானே அந்த நிறுவனங்கள் அதனை தயாரித்து நோயாளிகளுக்கு வழங்க முடியும். ஆனால் மருந்து நிறுவனங்கள் இதனை மகத்தான வருமான வாய்ப்பாக பயன்படுத்தி பண மழையில் கொழித்தன. அதை விடுங்கள். நாம் அனைவரும் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டவர்களா என்ன?

இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு இந்த ஆண்டோடு (2022) நூறு ஆண்டு ஆகிறது. 


 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்