ஆணவக்கொலையால் மீளமுடியாத கற்பனையில் சிக்கும் மனைவியை மீட்கும் கணவன்! அட்ரங்கி ரே - ஆனந்த் எல் ராய்

 






அட்ரங்கி ரே - கலாட்டா கல்யாணம்



அட்ரங்கி ரே - கலாட்டா கல்யாணம்

ஆனந்த் எல் ராய்

ஏ.ஆர். ரஹ்மான்

டிஸ்னி 


கட்டாய கல்யாணம் செய்து வைக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த விசு, தனது மனைவியை மெல்ல விரும்பத் தொடங்குகிறான். ஆனால் அவள் வேறு ஒருவரை விரும்புகிறாள். அதுயார், அந்த காதலை நிறைவேற்ற விசு உதவினானா என்பதுதான் படத்தின் கதை. 

பீகார் பையன் வேண்டாம் வேறு யாராவது ஒரு பையனை பிடித்து வைத்து கல்யாணம் பண்ணிக் கொடுத்துடலாம் என குடும்பமே முடிவு செய்து ரிங்குவை தயார் செய்கிறார்கள். உணவில் மயக்க மருந்து கொடுத்து அவளை கல்யாணத்திற்கு தயார்படுத்துகிறார்கள். அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளையாக மருத்துவ மாணவர் மதுசூதனை பார்க்கிறார்கள். ஆனால் இருட்டில் தவறுதலாக விசு(தனுஷ்) பிடித்துக்கொண்டு வந்து கல்யாணம் செய்விக்கிறார்கள். மணப்பெண்ணுக்கு மயக்க மருந்து என்றால் மாப்பிள்ளைக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கிறார்கள். இதனால அவர் சிரித்துக்கொண்டே வேறுவழியின்றி கல்யாணம் செய்கிறார். 





இன்னொரு விஷயம், மருத்துவ மாணவராக விசு தனது துறைத் தலைவரின் மகளை கல்யாணம் செய்யும் நிலையில் இருக்கிறார். இதற்கான நிச்சயம் ஒருவாரத்தில் நடக்கவிருக்கும்போது கடத்தல் கல்யாணம் நடைபெறுகிறது. இந்த உண்மையை அவர் தனது காதலிக்கு சொன்னாரா, அவர் வாழ்க்கை என்னவானது என்பது உச்ச காட்சி. 

ரிங்கு சூரியவன்சியாக தன்னால் முடிந்தவரை சிறப்பாக நடித்திருக்கிறார் சாரா. படம் முழுக்க என்னமா நடிக்கிறார்ப்பா என பாராட்டுகளை வாங்குவது தனுஷ்தான். கல்யாணம் நின்றாலும் கூட அதைப்பற்றி கவலை இல்லாமல் ரிங்குவிடம் நான் உன்னை விரும்பத் தொடங்கிட்டனே என அழுதபடி பேசும் காட்சி படத்தில் முக்கியமானது. 

ஆணவக்கொலைதான் படத்தில் முக்கியமான பொருள். அதை சிஜியுடன் இணைத்துக் காட்டுவதால் அந்தளவு காட்சியை வலிமைபடுத்த முடியவில்லை என்று தோன்றுகிறது. இருந்தாலும் சாதி மறுப்பு திருமணமாக காதல் செய்து மணம் புரிந்துகொண்ட தவறுக்காக ரிங்குவின் பெற்றோரை , ரிங்குவின் குடும்பம் நுட்பமாக திட்டம்போட்டு எரித்துக்கொல்கிறது. ஆனால் இதுபற்றி எந்த செய்தியும் யாரையும் பாதிக்கவில்லை என்பது படத்தில் துறுத்தலாக இருக்கிறது. 



ரிங்குவின் காதல் எந்த பிரச்னையும் இல்லை. நன்றாக இருக்கிறது என ரசித்துக்கொண்டு பார்க்கும்போதுதான், அப்படி காதல் ஏற்பட என்ன காரணம் என தெரியவருகிறது. அதுதான் படத்தின் முக்கியமான பகுதி. உளவியலை முக்கியமான விஷயமாக எடுத்துக்கொண்டு ஆனந்த் எல் ராய் பேசியிருப்பது அவசியமானது. பலரும் உடலுக்குத்தான் காயம் உள்ளம் நன்றாக இருக்கிறது என நினைப்பார்கள். அதில் ஏற்படும் பாதிப்புகள் ஒருவரை எப்படி பாதிக்கிறது வாழ்க்கையை சீர்குலைக்கிறது என்பதை நன்றாக பதிய வைத்திருக்கிறார்கள். 

தமிழ் வசனங்கள் அனைத்துமே சிறப்பாக உள்ளன. படம் இந்திப்படம் அதனை டப் செய்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து பார்த்தால் பிரச்னை இல்லை. படத்தின் அனைத்து உணர்வுகளையும் உயர்த்த, குறைக்க, உச்சிக்கு கொண்டு செல்ல என ஏஆர்ஆர் கடுமையாக உழைத்திருக்கிறார். தனுஷே எழுதி பாடிய லிட்டில் லிட்டில் பாடல் சிறப்பாக வந்திருக்கிறது. படம் முடிந்தபிறகு எ பிலிம் பை என முதலில் ஏஆர்ஆர் பெயரே வருகிறது. படம் பார்த்தவுடனே அது நியாயம்தான் என உணர்வீர்கள். உணர்வுகளை காட்சிபடுத்திய விதத்தில் படம் ஏமாற்றவில்லை.  



கோமாளிமேடை டீம் 














கருத்துகள்