மயிலாப்பூர் டைம்ஸ் - பாரம் சுமந்த திருவண்ணாமலைப் பயணம்!
பாரம் ஏந்திய பயணம்!
சில நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை சென்றிருந்தேன். அங்குதான் குருவி என்ற அமைப்பில் முன்னர் கிடைத்த நட்புகள் இருந்தன். முன்னர் வேலை செய்யும்போது நிறைய பேர் நட்பில் இருந்தாலும் என்னால் அதில் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது தினேஷ் என்பவரைத்தான். அதாவது ஒருவரைத்தான்.
இவர் தொழில்முறையில் புகைப்படக்காரர். இப்போது மெல்ல வீடியோக்களையும் பதிவு செய்துவருகிறார். தினேஷ் அண்ணாவிடம் பேசுவது தொடர்புகொள்வது தவம் செய்யும் முனிவரிடம் அனுமதி கேட்டு சந்திப்பது போலத்தான். போன் செய்தால் பெரும்பாலும் எடுக்கமாட்டார். அப்படி எடுக்கும்போதும் நிறைய வேலைகள் இருப்பதாக சொல்லிவிடுவார். அவுட்கோயிங்கிற்கு அவசியமில்லை. இன்கம்மிற்கு ரெஸ்பான்ஸ் இல்லை என காமெடி நடிகர் பிரம்மானந்தம் ஒரு படத்தில் சொல்லுவார். அதே கேரக்டர்தான் அவர். அப்புறம் எப்படி அவரைப் போய் பார்ப்பது? சரியான பதில் கிடைக்காததால்இதனால் சில வாரங்களாக திருவண்ணாமலை செல்லும் திட்டம் தடங்கலாகி நின்றுகொண்டே இருந்தது.
சென்னையில் விடியல் முழக்க முதல் அமைச்சர் எப்போது என்ன சொல்லுவார் என்றே பீதியாக பலரும் வீட்டில் வேலை செய்கிறோம் என்று சொல்லி பேருந்து, அல்லது ரயிலில் ஊருக்கு தப்பிச்சென்றுகொண்டிருந்தனர். இதையும் அடிக்கடி தப்பித்து கோவில்பட்டிக்குச் சென்றுவிடும் சுரேஷ் என்ற மேன்ஷன் நண்பர்தான் சொன்னார். பொங்கலுக்கு முன்னரே கோயம்பேட்டில் நல்ல கூட்டம் . எங்காவது போயிட்டு வரணும்னா சீக்கிரம் போய்ட்டு வந்திரு என்றார்.
எனக்கு ஊருக்குப் போக பெரிய விருப்பம் இல்லை. எனவே திருவண்ணாமலை போகலாம் என ஆபீஸ் வேலைகளை செய்துகொண்டிருந்தேன். எங்கள் அலுவலக ஒருங்கிணைப்பாளர் எப்போதும் தூங்கிக்கொண்டே இருப்பார். எப்போது எழுகிறாரோ அப்போதுதான் வேலை பற்றி கேட்பார். மிகவும் கறாராக நடந்துகொள்வார். அவர் குறுஞ்செய்தி ஆப்பில் அலுவலக குழுவில் போடும் செய்திகள் எல்லாமே வங்கி அடமான நோட்டீஸை நாளிதழில் வெளியிடுமே... அந்த தரத்தில் இருக்கும். அதில் வேறு திரு, திருமதி, செல்வன் என ஒருவரின் சமூக அந்தஸ்தையெல்லாம் போட்டு வெரைட்டி காட்டுவது எல்லாம் வேற லெவல்..... எழுதும் அத்தனை விஷயங்களையும் வைவா வைத்துதான் விளக்கவேண்டும். அத்தனை அறிவு அவருக்கு....
எனவே இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் தினேஷ் அண்ணாவுக்கு போன் செய்தேன். அண்ணா நாளைக்கு வரலாமா என்றேன். அந்த பக்கம் உண்மையில் குரல் வரவில்லை காற்றுதான் வந்தது. பிஎஸ்என்எல் திவால் நோட்டீஸ் கொடுத்துவிட்டார்களா என்ன?
செய்திகூட பேப்பரில் வரவில்லையா என சிம் வாங்கி இத்தனை ஆண்டுகளில் இப்போது டஜன் கணக்கில் பகீர் சந்தேகங்கள் தோன்ற ஆரம்பித்தது. அதற்கு அந்த அமைதிதான் காரணம்.
அது வந்துடா.... என லைனுக்கு வந்தவர் வீட்டுல ரெண்டு கெஸ்ட்டு இருக்காங்க. நீ வா வேற இடத்துல தங்க வைக்க பாக்குறேன் என்றார். பரிட்சை எழுதும்போதே ரிசல்ட் சிலருக்கு கண்ணில் தெரியும். எனக்கும் அவருடன் பேசும்போது முடிவு தெரிந்துவிட்டது. அப்படியா... என இழுக்க அண்ணன் உஷாராகி.. ஒரு மணி நேரம் கழிச்சு போன் பண்ணு.. வரலாமா வேண்டாமான்னு சொல்லிருவேன் என்றார்.
பிறகு நான் அவருக்கு போன் செய்யவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு நானே போன் செய்தேன். பிறகு அவர் திருவண்ணாமலை வருவேன்னு சொன்னியே வர்ல என கோட்டை முதலில் இருந்து அழித்து தொடங்கினார். நாளைக்கு வர்றேன்.. பதினொரு மணி ஆகிரும் என்றேன். சொன்னவுடன்தான் ஆபீஸ் பஞ்சாயத்துகள் பற்றி நினைவுக்கு வந்தது. அதுகிடக்கிறது. ஏற்கெனவே வேலைகள் முடித்தாகிவிட்டது என மனதிற்குள் கொஞ்சம் தைரியம் வந்தபோதுதான். காலையில் ஐந்து மணிக்கு பஸ் சர்வீஸ் தொடங்குவது நினைவுக்கு வந்தது.
ஐந்து மணியென்றால், 12 எக்ஸ் ஆட்கள் ஆறுமணி என நினைவுகொள்வார்களே என பதற்றமாகியது. எப்படியோ ஐந்து மணிக்கு தயாராகி மசூதி ஸ்டாப்பிற்கு வந்து நின்றால் கோயம்பேட்டிலிருந்து பட்டினப்பாக்கத்திற்கு மட்டும் ஐந்து பேருந்து பதினைந்து நிமிடங்கள் இடைவெளியில் செல்கிறது. இடது பக்கம் பேருந்து வந்துகொண்டிருக்க, வலது பக்கம் வாக்கிங் போகும் மார்வாடி மார்கள் மட்டுமே வந்தனர். பிக் பஜார் டிஷர்ட் விற்பனையில் சாதனை படைப்பதன் ரகசியம் அப்போதுதான் புரிந்தது.
பிறகு, இவ்வளவு தூரம் கழுத்துவலிக்க பார்க்கிறானே என கனிவு சுரந்த கடவுள் அருளால் 12பி வந்தது. இப்போதுதான் பஸ், டேக் டைவர்ஷன் எடுத்து கே.கே.நகர் சுற்றி வடபழனி பேருந்து நிலையத்திற்கு வருவதால் அதிலும் ஏற முடியாது. மீண்டும் காத்திருப்பு. அத்தனை நேரம் என்னோடு காத்திருந்த ஒரு பூந்தொட்டி தலை இளைஞர், 12 எக்ஸ் வரும்போது கண்களை மட்டுமல்ல தலையையே ரியல்மீ போனுக்குள் புதைத்திருந்தார். டக்கென நான் கையைக் காட்டி பஸ்ஸை நிறுத்தியபிறகுதான் இளைஞர் சுயநினைவுக்கு வந்தார். உடனே நான் பஸ்சில் ஏறிவிட்டேன். அவரும் தடாலடியாக ஏறினார். ஏறி எங்கே இறங்கினார் என்று பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். ஆழ்வார்ப்பேட்டை. நடந்தே போயிருக்கலாமே என்று தோன்றியது. அவர் பஸ்சில் பயணித்து இறங்கியதை விட அதற்கு காத்திருந்த ஏறிய நேரம் அதிகம்.
பஸ் பயணங்களில் எப்போதும் செல்லும் நேரத்திற்கு ஏற்ப ஏதேனும் ஒரு பொழுது விடிஞ்சா நடந்துருமே மொமண்ட் வந்துவிடும். இதெல்லாம் எப்படி என்று கேட்காதீர்கள். அது நம் தலையெழுத்தின் டிசைன். 12 ரூபாய் டிக்கெட் வாங்கி உட்கார, தலையில் யாரோ ஏதோ தூவியது மாதிரி இருந்தது. குளிருக்கு தலைக்கு குளிக்கவில்லை. அதுதான் ஏதோ மாதிரி அரிக்கிறது என நினைத்தேன். பிறகு பார்த்தால் மேலேயிருந்து ஏதோ கொட்டி தலையில் பட்டு அப்படியே சட்டையின் தோள்பட்டை, பேன்ட் என சிதறியது. பஸ்சில் மங்கல் வெளிச்சத்தில் துரு கொட்டியிருப்பது போல தெரிந்தது.
பஸ் டிரைவர் அண்ணாச்சி எப்போதெல்லாம் பிரேக்கை போட்டு மீண்டும் வண்டியைக்கிளப்புகிறாரோ அப்போதெல்லாம் 20 கிராம் இரும்புத் துருப்பு என் தலை மீது விழுந்தது. முதலில் நம் தலையிலிருப்பதுதான் துருப்பிடித்து கொட்டிவிட்டதோ என பயந்தேன். நல்லவேளை அப்படியேதும் நடக்கவில்லை.
எனது அருகில் உட்கார்ந்தவர் வெள்ளைச்சட்டை போட்டு இன் செய்திருந்தார். அவருக்கு இரும்புத்துருப்பு முடிந்தவரை நன்மை செய்யும் என நினைத்தேன். பிறகு கோயம்பேட்டிற்கு போய் இறங்கியதும் எங்கெங்கும் மனித தலைகள் தெரிந்தன. அதில் பார்த்த விஷயம் ஒன்று பீதியூட்டியது. எந்த ஊருக்குசெல்ல எந்த ஊருக்குசென்று ஏறவேண்டும் என தகவல் பலகை வைத்திருந்தார்கள். நான்பயந்தே போய்விட்டேன்.இனிமேல் தாம்பரம் சென்று திருவண்ணாமலை பஸ்சை பிடிப்பது சாத்தியமா என திக்கென ஆனது. தைரியமா நடடா சூனாபான என மனதுக்கு ஆல் இஸ் வெல் சொல்லிக்கொண்டே முன்னே நடந்து சென்றேன். வழக்கமாக திருவண்ணாமலை பஸ் நிற்குமிடத்தில் முன்பதிவு பேருந்துகள் நின்றன. சேலம் பஸ்சிற்கு வேலூர் செல்பவர்களை கூட ஏறு ஏறு அங்கே போய் வேற பஸ்சு மாத்திக்கலாம் என்று சொல்லிக்கொண்டிருந்த நடத்துநரை அணுகினேன்.
சேலம்தானே ஏறு என்றவரை... திருவண்ணாமலை பஸ்சு எங்கண்ணே என்றேன். அந்தப்பக்கம் போய் பாரு.... என ஒரே வீச்சில் சொல்லிவிட்டு பிசினஸில் பிசியானார். அங்கு போய் பார்த்தால் இரண்டு வர்க்கம் சார்ந்த பஸ்கள் இருந்தன. ஒன்று உண்மையில் ஊதாநிற பெயின்டில் டீலக்ஸ் ரகத்தில் இருந்த திருவண்ணாமலை வண்டி. அதில் மாலீஸ் போட்டு தலைசீவிய பெண்களும் தினசரி நெயில் பாலீஷ் போடும் இளம்பெண்களும் சீட்டுகளை நிறைத்திருந்தனர். இன்னொரு பச்சை வண்ணப் பேருந்தை பார்த்தவுடனே சுந்தரா டிராவல்ஸ் இனம் என சொல்லிவிடலாம்.
பரிதாபமாக இருந்த பேருந்தும் ஏறத்தாழ சீட்டுகள் நிரம்பியிருந்தது. முதலில் இதுதான் கிளம்புவது போல தெரிந்தது. இரண்டாவது வழியில் தெலுங்கு குடும்பம் ஒன்று பெட்டிகளை வைத்துக் கொண்டு அதனை எங்கு தள்ளுவது என காரசார விவாதம் நடத்திக் கொண்டிருந்தனர். நான் கடைசிசீட்டில்தான் உட்காருவது வழக்கம். அப்படி உட்கார்ந்தபோதுதான் பார்த்தேன். சீட்டுகள் பெரும்பாலும் கிழிந்து கந்தர கோளமாக இருந்தது. சமாளித்து உட்கார்ந்தால் தெலுங்கு குடும்ப பாப்பா ஒன்று சீட்டில் எழுந்து நின்று என்னைப் பார்த்து சிரித்தது. நான் புன்னகைக்க, பக்கத்தில் நின்ற அதன் அப்பா என்னைப் பார்த்து முறைத்தார். கூடவே அவரது அண்ணன் வேறு என்னை சந்தேகமாக பார்த்துக்கொண்டே பத்திரமா போகணும் சரியா... என சொன்னவர் வண்டி இயங்கத் தொடங்கியதும் வேகமாக இறங்கிக் கொண்டார்.
கோயம்பேட்டிற்கு வெளியே வந்ததும், செஞ்சிக்கு டிக்கெட் கேட்டு ஒருவர் காய்கறி பை சகிதம் அருகில் வந்து உட்கார்ந்தார். அடுத்து கொஞ்ச நேரத்தில் இருவர் ஏறினர். அனைத்து சீட்டுகளும் நிரம்பிவிட நான் உட்கார்ந்த இடத்தில் வந்து உட்கார்ந்தார். எனது டிசைன் எப்படியென்றால், வழியில் சுண்டல், மாங்காய், மோட்டல் சோறு என தின்னும் ஆட்கள்தான் என் அருகில் உட்காருவார்கள். அப்படியே பேருந்தின் சாலை ஓட்டம், குண்டும் குழியுமாக செல்லும். ஆனால் அது அப்படியே சிறுவயதில் குழ்ந்தைகளை தொட்டிலில் போட்டு ஆட்டுவார்களே அப்படி தோன்றும். இதனால் அப்படியே கண்ணை மூடி தோளில் சாய்ந்துவிடுவார்கள். என்தோளில்தான். அதிகம் யோசிக்காதீர்கள். அப்படி தூங்கி எச்சில் விட்டவர்கள்தான் உண்டு. அதை பரவாயில்லை என்று நினைக்க ஸாரி என்ற ஒரே வார்த்தைதான் கிடைக்கும்.
இம்முறை என் அருகில் உட்கார்ந்திருந்தவர் சற்று வலிமையானவர். மோட்டலில் அதிக விலை கொடுத்து முறுக்கு, மிக்சர் என வெளுத்துக்கட்டியதற்கு பிறகுதான் தூங்கினார். அதுவரையில் நான் படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. திண்டிவனத்தை தாண்டி இரண்டு கிலோ மீட்டர் போன பிறகு தூக்கத்தில் அவர் முட்டிய முட்டில் நான் மூடிய ஜன்னல் கண்ணாடியில் சரிந்தேன். பிறகு, அதைக் கவனித்த அவரது சகா ஒருவர் அவரை குழந்தையாக பாவித்து அவரை பின்புறமாக சாய்த்து தூங்க வைத்து தன்னை சற்று முன்னோக்கி உட்காருமாறு செய்துகொண்டார். அதற்குப் பிறகுதான் எனக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
பொங்கலுக்கு முன்னாடிதான் கிளம்பினோம் என்றாலும் அந்த நேரத்திலும் பஸ்சில் அடித்துப் பிடித்து ஏறி நின்றுகொண்டே திருவண்ணாமலை வந்த ஆட்கள் ஆறு பேர்கள் தேறுவார்கள். அந்த மனவலிமை இருக்கிறதே அதுதான் வேறெங்கும் பார்க்க முடியாது. இதே விஷயத்தை வட இந்தியர்கள் கழிவறையில் பயணம் செய்து காட்டுவார்கள். திகில் படம் பார்ப்பது போலவே இருக்கும். அதேசமயம் இவர்களை என்ன செய்வது என கோபமும் வரும். இப்படித்தான் நான்கு மணி நேர என்னுடைய பயணம் திருவண்ணாமலையில் அமைந்தது. பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் மெல்ல ரத்த ஓட்டம் பாய கால்கள் இயல்புநிலைக்கு வர ரமணம் ஆசிரமம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக