காதல் மீட்டர் - திருமண உறவைக் காப்பாற்ற என்ன செய்வது?

 


காதல் மீட்டர் 

4

பொதுவான திருமணங்களில் நிச்சயம் செய்வது முக்கியமான சடங்கு. இவரை இன்னாரை திருமணம் செய்துகொள்வதாக உறுதி செய்துகொள்வது. உறுதி செய்துகொண்டவரைத்தான் ஒருவர் திருமணம் செய்வார் என்று நிச்சயமில்லை. காலம் மாறிவிட்டது. கிராமங்களில் பெரும்பாலும் கொடுத்த வாக்குறுதியை யாரும் காப்பாற்றாமல் விடுவதில்லை. ஏனெனில் ஒருவரின் நம்பிக்கை தொலைந்துவிட்டால் அவர் பேசுவதை யார் கேட்பார்கள்.? 


இந்த நிச்சய காலத்தில் இணையர்கள் உரையாடலாம். இன்று ஸ்மார்ட்போன் உள்ளது. போன் உயிரோடு இருந்தே ஆகவேண்டும். அதன் வழியாக பேசலாம். நிறைய விஷயங்களைப் பகிரலாம். பொதுவாக கல்யாணம் செய்துகொள்ளப்போகும் ஆட்கள் வெட்டி அரட்டைதானே அடிப்பார்கள். அதுவும் எதிர்கால உறவைப் பற்றி அறிவதற்கான வழிதான். 


ஜோதிடம், திருமண பொருத்தம் என்பதை பொதுவான பலரும் நம்புகிறார்கள். குறிப்பாக திருமணம் எனும்போது... ஆனால் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் என்னுடைய நேரத்தை நானே உருவாக்குவேன் என இருப்பவர்கள் தங்களுக்கு பிடித்த ஒருவரை மணந்துகொள்ளலாம். நிச்சயத்திலும் மோதிரத்தை போடுவதுண்டு. இது ஒரு ஒப்பந்தம் போல செயல்படுகிறதாக கொள்ளலாம். இன்று நிலைமை நிறைய மாறிவிட்டது. கல்யாணம் நிச்சயமாகி பிறகு நின்று பிறகு செய்து என மீண்டும் மீண்டும் நடைபெறும் விழாவாக மாறிவிட்டது. 


திருமணம் முறிந்தால் கூட கணவர் வீட்டாரிடம் பெண்கள் தங்களுடைய நகை, திருமணச்செலவு கேட்பது உண்டு. நிச்சயம்கூட பிரேக்கப் என்று சொல்லி முறிந்துபோவதுண்டு. இதிலும் இருவரும் பரிமாறிக்கொண்ட மோதிரங்களை திரும்ப கேட்கும் பழக்கம் உள்ளது. தங்கத்தில் வைரக்கல் பதித்த மோதிரம் என்றாலோ, வெறுமனே தங்கம் என்றாலோ கேட்காமல் விட முடியாது. உறவு முறிந்தாலும் பணம் கேட்டுப் பெறுவது என்பது அல்டிமேட்டான ஒன்று. அதை யாருமே உயிரோடு வாழும்வரை கைவிட முடியாது. 


நவீன காலத்தில் குறிப்பிட்ட காலத்தில் கமிட்மென்ட் என்று கை, கால்களை கட்டிக்கொள்ள வேண்டுமா என்ற இளைஞர்கள் நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எனவே, நிச்சயம், திருமணம் என்ற விவகாரங்களில் அவர்கள் தலையிடுவதில்லை. பிடித்தவர்களோடு ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். அதில் பிரிவு வந்தால் வேறு உறவைத் தேடுகிறார்கள். 


ஒருவருக்கொருவர் ஒன்றாக வாழ்வதே பல்வேறு காரணங்களுக்காக என மாறிவிட்டது. சிலர் பொருளாதார செலவுகளை சமாளிக்க முடியாமல், இன்னொரு பாலினத்தவரோடு சேர்ந்து வாழ்கிறார்கள். சிலர் காதல் கொண்டு ஒன்றாக வாழ்வதும் உண்டு. ஆனால், எந்த உறவாக இருந்தாலும் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை இருப்பது முக்கியம். சுரண்டல் இருந்தால் அந்த உறவு சிறக்காது. வேலைகளை கூட ஒருவருக்கொருவர் பகிர்ந்து செய்துகொள்ளலாம். இன்னொருவரை சார்ந்து இருப்பது, உழைக்காமல் இருப்பது இந்த காலத்தில் உதவாது. 


காதலுக்கு பெரிய பொறுப்புகள் இல்லை. ஆனால், திருமணம் என வந்துவிட்டால் நிறைய பொறுப்புகள் உண்டு. குடும்பத்தை நடத்த வேண்டும். கணவன், மனைவி தங்களுக்குள் யாருக்கு திறமை இருக்கிறதோ அவர்களை குடும்பத்தலைவர் என கருதி பொறுப்புகளை பிரித்துக்கொள்ளலாம். ஆண்  மைய சமூகங்களில் ஆண்கள் குடும்பத்தலைவர்களா அதிகாரப்பூர்வமாக இருப்பார்கள். பின்னணியில் அனைத்து வேலைகளையும் பெண்கள் செய்வார்கள். சாதி, மதம் என குறுக்கீடு கொண்ட இந்திய போன்ற பின்தங்கிய நாட்டில் திருமணம் என்பது தனிநபரின் விருப்பமாக எளிதாக நிறைவேறுவது இல்லை. அப்படி செய்தாலும் காதில் விஷம் ஊற்றி அல்லது கண்ணில் மிளகாய் பொடி போட்டு முதுகில் குத்திக் கொல்லும் மாவீர செயல்பாடுகள் நடத்தப்படுகின்றன. இதன்வழியாக குடும்ப கௌரவத்தை மீட்பதாக நம்புகிறார்கள். பெரும்பாலும் இதில் பலியாக்கப்படுவது பட்டியலின சாதிகள்தான். மதவாத நாடுகளில் தனிநபர்கள் சுதந்திரமாக எதையும் செய்யமுடியாது. 


ஒப்பீட்டளவில் பெற்றோரின் ஆதரவு கிடைத்தால் நிறைய விஷயங்களை நீங்கள் தனியாக செய்யவேண்டியதில்லை. ஆனால், காதல் திருமணங்கள் பெரும் போராட்டங்களை சந்திப்பது ஆண், பெண் என இருவருக்கும் வலுவான பொருளாதாரம் இல்லாதபோதுதான். அவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதியானதாக இருந்தால் நகரம் சென்று தங்கி வாழ்க்கையை வாழலாம். ஆனாலும் தங்களை தாங்களே பார்த்துக்கொள்ள முடியும் என நம்புகிறவர்கள் விதியை கால நேரத்தை எல்லாம் நம்புவதில்லை. தங்கள் வாழ்க்கையை தாங்களே தீர்மானித்து கொண்டு வாழ்கிறார்கள். 


பொதுவாக நிச்சயமான ஆறு மாதங்களில் திருமணத்தை செய்துவிடுவார்கள். அதற்கு மேல் செல்வது நல்லதல்ல. காதல் என்பது வேறு. திருமணம் என்பது சமூக பாதுகாப்புக்கான அமைப்பு. இரண்டையும் வேறுபடுத்தி புரிந்துகொண்டால்தான் உலகில் வாழ்வது எளிது. 


நிச்சய காலத்தில் உறவுக்குள் வரும் முரண்பாடுகள், பிரச்னைகளை முறையாக பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. அதை அப்படியே விட்டுவிட்டால் பின்னாளில் பெரும் பிரச்னைகளாக மாறக்கூடும். திருமணம் என்பது இன்று ஏராளமான நிகழ்ச்சிகளை ஒன்றாக இணைத்து செய்கிறார்கள். இந்திய வணிகர் ஒருவரின் மகன் திருமணம் ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்றது. ஏராளமான செலவில் விருந்து, விருந்தினர் உபசரிப்பு, பாடல், கேளிக்கை என நடத்தப்பட்டது. செல்வந்தர் வீட்டு திருமணங்கள் இப்படியானவை. திருமணம் ஒற்றைநாள் நிகழ்ச்சியல்ல. அதற்குப் பிறகு வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு செல்லும். நிச்சய காலத்தில் வெட்டிக் கனவுகளை காணாமல் நடைமுறையைப் புரிந்துகொள்ள முயலவேண்டும். திருமணத்தை முறையாக திட்டமிட்டால் மட்டுமே அதை வெற்றி பெறும் வகையில் மாற்ற முடியும். அலட்சியமாக இருந்தால் தோல்வியே மிஞ்சும். 


யாரும் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு திட்டமிட்டு இலக்கை நோக்கி நடக்க முடியாது. வாழ்க்கை என்பதே எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்புதானே? ஆனால், இணையர்கள் இருவருக்குமே அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய தெளிவு தேவை. அப்படி இல்லாதபோது உறவில் சிக்கல்கள் பூசல்கள் எழும். 


காதல் உங்கள் வாழ்க்கையில் இருக்கிறதோ, திருமணம் செய்துகொள்ள முடிகிறதோ இல்லையோ, பொருளாதாரத்திற்காக வேலை செய்யவேண்டும். அதை வைத்துத்தான் நீங்கள் வாழ்க்கை நடத்த முடியும். திருமணமான இணையர் பொருளாதாரத்தில் சுதந்திரமாக செயல்படுவது நல்லது. யாரும் யாருடைய கையையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. வீட்டுச்செலவுகளை இருவரும் சேர்ந்து செய்யலாம். பொருளாதாரம், வேலையை அடிப்படையாக கொண்டது. நீங்கள் புத்தொழில் செய்யலாம். அல்லது மாதச்சம்பளத்திற்கு வேலை செய்யலாம். பணம் சம்பாதிக்க ஏதேனும் ஒன்றை செய்யவேண்டும். அவ்வளவுதான். இணையர்கள் திருமணத்தில் கூட்டாளிகள் என்பதால் பொருளாதாரம் பற்றிய அறிவைப் பெறுவது அவசியம். இருவரும் செலவுகளைப் பற்றி முன்னமே பேசி திட்டமிட வேண்டும். அப்போதுதான் செலவுகளை குறைத்து குடும்பத்தை நடத்த முடியும். 


குழந்தையைப் பெற்றுக்கொண்ட பிறகு அதை எப்படி வளர்த்துவது என தடுமாறக்கூடாது. பிறக்கும் முன்னரே கவனமாக இருந்து திட்டமிடவேண்டும். அதுபற்றி யோசிக்கவேண்டும். இணையரிடம் பேச வேண்டும். நிறைய குழந்தைகைளப் பெறுவது இன்றைய ஜிஎஸ்டி காலத்தில் பேராபத்தாக முடியும். எனவே, கவனமாக திட்டமிட்டு குழந்தையை பெறாமல் இருக்க முயலவேண்டும். ஒன்றை பெற்றாலே அதை வளர்த்து மேலே கொண்டு வர தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும். பொருளாதார அழுத்தங்கள் அந்தளவு தீவிரமாக உள்ளது. 










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!