ஒன்றாகச் சேர்ந்து காதலிக்க என்ன தேவை?
ஒன்றாக சேர்ந்து...
உறவுகளைப் பொறுத்தவரை எதுவுமே உறுதி கிடையாது. உறவே எளிதாக உடையக்கூடியது என ஜே கிருஷ்ணமூர்த்தி கூறியிருக்கிறார். இருவர் ஒன்றாக வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் சில தவிர்க்க முடியாத தேவைகளுக்காக அப்படி இருக்கலாம். மனப்பூர்வமாக ஒன்றாக இணைந்து இருக்கிறார்களா என்றால் சந்தேகமே. உடல் அளவில் ஒன்றாக இருந்தாலும் மனம் என்ற அளவில் பல கி.மீ. தொலைவில் உள்ள மனிதர்கள் ஏராளமானோர் உண்டு. ஒரே வீட்டில் வசித்தாலும் வேறு வேறு உலகில் இருப்பார்கள்.
டேட்டிங் விஷயத்தைப் பொறுத்தவரை ஆணும், பெண்ணும் மனம் என்ற அளவில் நெருங்கி வருவதையே முக்கியமாக கருதலாம். அப்படியான நெருக்கம், விருப்பங்களின் ஒற்றுமை அளவில் நட்பு உருவாகி பின்பு காதலாக மாறி திருமணமாக அடுத்த நிலைக்கு செல்லலாம். உங்களுடைய உறவில் நட்புத்தன்மை இருக்குமாறு பார்த்துக்கொண்டால் பின்னாளிலே அதில் சிக்கல் வந்தாலும் தீர்த்துக்கொள்ள முடியும். உடல், மனம் சார்ந்த ஊக்கம் பரவசம் என்பது மாறக்கூடியது. எப்படி பருவகாலங்கள் மாறும்போது அதையொட்டி நமது உணவு மாறுகிறதோ அதைப்போலவேதான். காதலில் ஏற்படும் காயங்கள் ஆறுவது கடினம். ஆனால், நட்பில் அப்படி பெரிய கடினமான சூழல் ஏற்படாது.
குறுகிய கால தேவைகளுக்கு ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள் உண்டு. நீண்டகாலம் உறவு வரவேண்டும் என இருதரப்பாருமே நினைத்தால் அதற்கு மனப்பூர்வமாக இணைந்திருப்பது முக்கியம். நட்புக்கு முயலுங்கள். அது காதலாக துணையைக் கொண்டு வந்து கொடுக்கும் வாய்ப்பு அதிகம் கொண்டுள்ளது. அடிப்படையில் உறவுகளே பலாபலன்களை அடிப்படையாக கொண்டதுதான். அதேசமயம் நட்பை அவசர தேவைக்காக அமைத்துக்கொள்பவர்களே அதிகம். ஆனால், அப்படியான உறவு பெரும் தர்மசங்கடத்தையே கொண்டு வந்து சேர்க்கும். உறவு முறியும்போது வேதனைதான் அதிகம் இருக்கும். நல்ல குணச்சித்திரத்தை உறவின் வழியில் உருவாக்கிக் கொள்ளவேண்டும். நட்புகளை உருவாக்கிக்கொள்வது, அதை பராமரிப்பது என இரண்டுக்குமே காலம் தேவை. உழைப்பும் தேவை.
குறிப்பிட்ட தேவை காரணமாக உறவை உருவாக்கிக் கொள்வது ஒருவருக்கு மட்டுமே உதவியாக இருக்கும். அவரை மட்டுமே மையப்படுத்தியதாக இருக்கும். அப்படி இருக்கையில் அங்கே இன்னொருவருக்கு என்ன வேலை? அவர் பிறர் தன்னை சுரண்டுவதாக உணர்வார். விழிப்புணர்வு கொண்டவராக இருந்தால் அதை தொடக்கத்தில் உணர்வார். அல்லாதபோது பின்னாளில்... ஆக, அந்த உறவு கசந்து உடைந்துவிடும்.
பொதுவாக புதிய அறிமுகமற்ற ஒருவரை சந்தித்து பேசும்போது நிறைய தடுமாற்றங்கள் இருக்கும். எப்படி, என்ன பேசுவது என தடுமாறுவது இயல்பானது. இன்றைக்கு உங்களுடைய நண்பர்களாக இருப்பவர்கள் பலரும் ஒருநாளில் அறிமுகமற்றவர்களாக இருந்தவர்கள்தான் என்பதை நினைத்துப் பாருங்கள். தன்னைத்தானே மையப்படுத்தியவர்கள், பிறரிடம் தங்களைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். ஆனால், பிறர் என்ன சொல்கிறார்களோ அதை கேட்பது நட்பை உருவாக்குவதில் முதல்படி. பிறர் நம்மீது காட்டும் ஆர்வம், நம்மை பேச வைக்கிறது என்பது உளவியல் சமாச்சாரம். பொறுமையாக விஷயங்களை கவனித்தாலே நிறைய நட்புகள் கிடைக்கும். இப்படியான பேச்சுகளில் முந்திக்கொண்டு சுயவிளம்பர பேச்சை பேசக்கூடாது. சில விஷயங்களை புரிந்துகொள்ள ஒருவர் தன்னிடம் பேசுபவரிடம் கேள்விகளைக் கேட்டு தெரிந்துகொள்ளலாம். குடும்பம், கல்வி, ஆர்வம் என கேள்விகளை பொதுவான தளத்தில் அமைத்துக்கொள்ளலாம்.
ஆமாம், இல்லை என்பது போல கேள்விகளை அமைத்துக்கொண்டால் நல்லது. அமலாக்கத்துறையினர் அல்லது வருமானவரித்துறையினர் செய்யும் விசாரணை போல கேள்விகளைக் கேட்டால் யாருமே பயந்துவிடுவார்கள். பேச மாட்டார்கள். ம் ஹூம் என பதிலளித்து மழுப்பிவிடுவார்கள். பெற்றோர், குடும்ப வரலாறு, என பொதுவாக சில கேள்விகளைக் கேட்கலாம். இதற்கடுத்து ஒருவரின் கல்வித்தகுதி. பொதுவாக குறைந்தபட்சம் இளங்கலை பட்டப்படிப்பாவது படிப்பவர்களே அதிகம். அப்படி இல்லையென்றால், ஏன் படிக்க முடியவில்லை என்று கூறுவதற்கு ஏதாவது காரணத்தை ஒருவர் கூறுவார். அதை கேட்டுக்கொள்ளலாம். எதிலும் மிகவும் ஆழமாக சென்று தனிப்பட்ட கேள்விகளைக் கேட்க கூடாது. யூட்யூப் போன்ற ஊடகங்களில் தனிப்பட்ட கேள்விகளை கேட்பது போன்ற அறமற்ற அத்துமீறல்களை செய்கிறார்கள். பணம் கிடைக்கிறது என்பதற்காக ஒருவரை பொதுவெளியில் இழிவுபடுத்தும் செயல்களில் இறங்குவது தவறு. இப்படியான செயல்கள் எதிராளியின் பகையை சம்பாதிக்கும் திசையில் அழைத்துச் செல்லும்.
நண்பர்கள் என்றால் என்ன, ஒருவருக்கொருவர் மனதில் உள்ள கனவுகளை நிறைவேற்ற உதவுவது. ஊக்கமூட்டி ஒருவரின் ஆளுமையை மேம்படுத்துவது. நீங்கள் சந்திக்கும் அனைவரையும் நட்பாக்கிக் கொள்ள முடியாது. அது சாத்தியமே இல்லை.
2
பொதுவான சில விஷயங்களைப் பேசுவது நல்லது. உறவை சிக்கலுக்கு உள்ளாக்காது. எதிரில் உள்ளவரை அச்சுறுத்துவது, கேலி சித்திரவதை செய்வது போன்றவற்றை செய்தால் ஆக்கப்பூர்வ சூழல் நிலவாது. உணவு, திரைப்படம், சிறிதேனும் அரசியல் என்றுதான் தமிழ்நாட்டில் அனைவரும் பேசுகிறார்கள். ஆழமாக பேச முடியாது என்பதல்ல. பொதுவாக உள்ளவர்களின் மனநிலை, புத்தி என்பது இந்தளவுக்குத்தான் இருக்கும். இதில், பெரிய வேறுபாடு உருவாகாது. மேற்சொன்ன விஷயங்களைப் பற்றிய கேள்விகள் உரையாடும் இருவரையும் பாதிக்காதவை. இப்படி உரையாடத் தொடங்குவது நல்லது.
நட்பு ஏற்படுத்திக்கொள்ள முயலும் முயற்சிகள் முக்கியம். எங்கும் யாரையும் கவனிப்பது வேறு. வெறித்துப் பார்ப்பது தவறு. பேசும்போது குரலில் உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டு பேசுவது அவசியம். ஒருவரைச் சுற்றி அதிக நபர்கள் இருந்தால் குறைவாக பேசுவது சிறப்பானது. கும்பலில் ஒருவர் என்பதை விட தனிநபராக மனிதர்கள் முக்கியமானவர்கள். எனவே, ஒருமுறை அவர்களது பெயர் குறிப்பிட்டுவிட்டால், அதை மறக்காமல் இருக்கவேண்டும். அடுத்தமுறை பேசும்போது பெயரைக் குறிப்பிட்டு பேசவேண்டும். பிறரை கவனிப்பதோடு, அவர்கள் கூறுவதை கவனம் கொடுத்து கேட்கவேண்டும்.
நீங்கள் ஒருவரை நண்பராக்கி கொள்ளவேண்டுமென்றால், அவருக்கும் உங்களுக்கும் உள்ள பொதுவான ஆர்வங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். விளையாட்டு, உடற்பயிற்சி நிலையம், நடைப்பயிற்சி, ஓவியம் வரைவது, இலக்கிய கூட்டங்களுக்கு செல்வது, நீச்சல், சதுரங்களம், ஸ்னூக்கர் என நிறைய விஷயங்கள் இடைமுகமாக அமையலாம். அப்படி அமைந்தால், அதை வைத்து ஒருவரின் ஆசை, கனவுகளை பேச்சு வழியாக அறியலாம். நிறைய பிரச்னைகளை ஒருவர் தீர்க்க முடியாதபோது அதை காதுகொடுத்து கேட்டாலே போதுமானதாக இருக்கும்.
சில சமயங்களில் உரையாடல்களில் நம்மை அறியாமல் பிறரை காயப்படுத்திவிடுவதுண்டு. அப்படியான சூழல்களில் நீங்கள் உங்களிடம் தவறு இருப்பதாக உணர்ந்தால் மன்னிப்பு கேட்கலாம். அதன் மூலம் உங்கள் நேர்மை பிறருக்கு புரியும். உண்மையான நண்பர் என்பவர், பிறரைப் பற்றி கிசுகிசுக்களை கூறிக்கொண்டு இருக்க மாட்டார். வதந்திகளை பரப்பவும் மாட்டார். ஒருவர் நேர்மையாக இருப்பது, அவரது நண்பர்களையும் அதே வழிக்கு மாற்றும். நேர்மையான குணம், அனைவருக்கும் நன்மையைத் தேடித் தரக்கூடியது.
#நட்பு #காதல் #உறவு #திருமணம் #கல்வி #வாழ்க்கை #சமூகம் #தனிமை #உறவுச் சிக்கல்கள்
#friends #lives #goals #relationship #marriages #society #loneliness #love #lovetogether #personal #enrich
கருத்துகள்
கருத்துரையிடுக