காதல் மீட்டர் - சமரசம் செய்து காதலிக்கலாமா?
காதல் மீட்டர்
4
இன்று பல்வேறு கலாசாரங்களை சேர்ந்தவர்கள் காதலால் வேறுபாடுகளை மறக்கிறார்கள். ஒன்றாக சேர்கிறார்கள். எனவே, நீங்கள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. எந்தளவு திறந்த மனது கொண்டவராக இருக்கிறீர்கள், நடந்துகொள்கிறீர்கள் என்பதே முக்கியம். இணையர்கள் சமூகத்திற்கு எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. அவர்களுடைய வாழ்வை முழுமையான திருப்தியோடு வாழ்ந்தால் போதும்.
டேட்டிங் செல்பவர்கள், திருமண வாழ்க்கைக்கு அந்த செயல்பாடு கூட்டிச்செல்லும் என ஈடுபடலாம். சிலர், அதில் பாலுறவிலும் கூட ஈடுபடுகிறார்கள். இதெல்லாம் சரியானதா இல்லையா என்றால் அதை தனிப்பட்ட இருநபர்கள்தான் முடிவு செய்யவேண்டும். இங்கு நான் பல்வேறு ஆலோசனைகளை அறிவுறுத்தல்களைக் கூறலாம். அவற்றை நீங்கள் பகுத்தாய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளலாம். அல்லது மறுக்கலாம். ஒருவர் கூறும் அறிவரையை அப்படியே நம்புவதும் தவறு. தன்னுடைய அறிவை முழுக்க புறக்கணிப்பதும் அழிவையே கொண்டு வரும்.
சமரசம் செய்துகொண்டால் சமாதான வாழ்க்கை என்று சில பழம்பெருச்சாளிகள் அறிவுரை கூறுவார்கள். உறவுகளைப் பொறுத்தவரை தரம், விதிகள் என எதிலும் பின்வாங்க கூடாது. ஒருமுறை சமரசம் செய்துவிட்டால் பிறகு அதில் இழப்பைத் தவிர எதையும் பார்க்க முடியாது. சமரசம் மூலம் தொடக்கத்தில் ஏதாவது கிடைப்பதாக தெரிந்தாலும் இறுதியாக இழப்பே மிஞ்சும். அதில் உறுதியாக வெற்றி கிடைக்காது. சுய கட்டுப்பாடு ஆணோ, பெண்ணோ இருவருக்குமே அவசியம். அதை இழந்துவிட்டால் பிறகு நடைபெறும் செயல்கள் வாழ்வை நிலைகுலைய வைப்பதாக இருக்கும்.
குடி, சிகரெட், பான் மசாலா, புகையிலைன்னு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. ஆனா, கொஞ்சம் முன்கோபி என்று சிலரைப் பற்றி கூறுவார்கள். அவரின் பிற நல்ல குணங்களை முன்கோபம் என்பது கெடுத்துவிடும். முன்கோபத்தை விட மோசமான விஷயம் ஒருவரின் வாழ்க்கையில் என்னவாக இருக்க முடியும்? விசாரணை செய்யாமல் முன்முடிவுகளோடு ஒருவர் மீது பாய்வதே முன்கோபத்தின் பணி. அதில் நல்லது என்ன விளைந்துவிடும்? தீராத பிரச்னைகள் முறையான தீர்வை கண்டறியும் வரை அப்படியே தொடர்ந்துகொண்டே இருக்கும். அது ஒரு மனிதர் மாற்றி இன்னொருவர் என பயணிக்கும்.
சில குடும்பங்களில் குழந்தையை வளர்க்கத் தெரியாமல் நாயை வளர்ப்பது போல வளர்ப்பார்கள். உணர்ச்சி இல்லாத பொருட்களைப் போல மனிதர்களை கருதுபவர்கள் உண்டு. கணவன் மனைவி இடையே எந்த அன்பும் இருக்காது. வெறுப்பும், பகையும் வன்மமும் மட்டுமே இருக்கும். சொத்துக்களுக்கான சண்டை எப்போதும் இருக்கும். சதி, பழிவாங்குதல், வஞ்சம், சூழ்ச்சி மட்டுமே உள்ள வீட்டில் ஒருவர் அதிலிருந்து தப்பிக்க நினைப்பது இயல்பானது. ஆனால், அதற்கான வழியாக காதலை, திருமணத்தை கருதக்கூடாது. இப்படியான நோயுற்ற சூழலில் ஒருவரின் உடல், மனம், புத்தி என அனைத்துமே செயலிழந்து போயிருக்கும். இச்சூழ்நிலையில் இருந்து மனதளவிலேனும் வெளியேறுவது முக்கியம். அப்போதுதான் புதிய உறவை நல்ல முறையில் பராமரித்து வளர்க்க முடியும்.
காதலிக்க ஸ்டார்பக்ஸோ, சூர்யா பேக்கரியோ கூட போதும்தான். ஆனால், திருமண உறவைத் தொடங்க இணையவர் இருவருமே வலுவான பொருளாதார பின்புலத்தைக் கொண்டிருக்க வேண்டும், மாதச்சம்பள வேலை அல்லது சுயதொழில், வளர்ச்சி பெறுவதற்கான முயற்சிகள் அல்லது திட்டத்தைக் கொண்டிருக்கவேண்டும். இதெல்லாம் இல்லாமல் காதல் மோகத்தல அவசரப்பட்டால் திருமண உறவு கசந்துபோய்விடும். கவனமாக இருங்கள்.
காதல், திருமணம் என உறவுகள் எப்படி பெயர் மாறினாலும் அடிப்படையில் இரு தனிநபர்களுக்கென தனி லட்சியம், கொள்கைகள், கனவுகள் இருக்கலாம். தவறில்லை. அதை குறிப்பிட்ட ஆண்டுகள் என இலக்கு வைத்து சாதிக்க முயலவேண்டும். திருமணம் செய்துகொண்டு சாதிக்கலாம் என்பது சாத்தியமில்லை. திருமணமாகிவிட்டால் அதற்கான வேலைகளை செய்யவேண்டும். அப்போது கல்லூரியில் சேர்ந்து மன அமைதியுடன் படிப்பது கடினம்.
#love #marriage #mind #life #blog #kadalmeter #goal #priority

கருத்துகள்
கருத்துரையிடுக