வளம் தரும் மரங்கள் பாகம் - 1 - விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவும் மரங்களைப் பற்றிய கையேடு
நூல் விமர்சனம்
வளம் தரும் மரங்கள்
பாகம் 1
தோட்டக்கலை இயக்குநர் மணி , கமலா நடராஜன்
என்சிபிஹெச் வெளியீடு
விவசாயம் செய்யும் நண்பர் வளம் தரும் மரங்கள் ஐந்து பாகங்களை வாங்கி வைத்திருந்தார். என்சிஹெச் புக் இப்படியெல்லாம் நூல்களை வெளியிடுகிறதா என ஆச்சரியப்பட்டு அவர் வாசித்த முதல் பாகம் மட்டும் இரவல் வாங்கி வந்து படித்தேன். நூல் சிறப்பான கருப்பொருளைக் கொண்டுள்ளது. நூலில் முப்பது வகையான பல்வேறு தாவரங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
நூலை தோட்டக்கலை இயக்குநராக பணிபுரிந்த மணி என்பவரும், அவருடைய மகளும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். நூலிலுள்ள தகவல்கள் ஆச்சரியப்படுத்தும் விதமாக உள்ளன. ஏராளமான அறிந்திராத தகவல்கள் உள்ளன என்பது உண்மை. அதை வாசிக்கும் யாருமே ஒப்புக் கொள்வார்கள். ஆனால் காலத்திற்கு ஏற்ப நூலில் மரங்கள் பற்றிய வண்ணப்புகைப்படம் ஏதும் இணைக்கப்படவில்லை. நூலின் விலை ரூ.230 என நினைவு. இந்த விலையில் கூட சிறிது தொகை கூடுதலாக சேர்ந்தாலும் நூலில் வண்ண புகைப்படங்களை இணைத்திருந்தால் மரங்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியுமே? கருப்பு வெள்ளையில் இலையை, மரக்கன்றுகளை வரைவது எதற்கு? அதில் எந்த பயனும் இருப்பது போல தெரியவில்லை. விவசாயம் செய்பவர்கள் தவிர்த்து வேறு யாரும் நாற்றுப்பண்ணையில் சென்று மரக்கன்றுகளைப் பெற்று வர முயன்றால், நூல் அதற்கு உதவுமா என்றால் ஓரளவுக்கு ஆனால், பெயரை வைத்து கேட்கலாம். ஆனால், உறுதியாக பார்த்து வாங்க உதவாது.
நூலில் ஆச்சரியமூட்டிய மரங்களாக இலவு, இலந்தை, ஒதியம் ஆகிய மரங்களைக் கூறலாம். இந்த மூன்று மரங்களுமே வளரும்போது பல்வேறு சவால்களை சந்தித்து வளருகின்றன. இலவு என்பது இலவம்பஞ்சு மரத்தை குறிப்பது. இதில் சிங்கப்பூர், ரஷ்யா என இலவு மர வகைகள் தனியாக உள்ளன. இலந்தையில் மூன்று வகை உள்ளது. பொதுவாக இலந்தையை தனியாக யாரும் நடவு செய்வதில்லை. தானாக முளைத்து அப்படியே வளருவது அதிகம். அதன் இலந்தை பழம், அதை வைத்து செய்யும் இலந்தை வடை, அதன் பயன் என நிறைய விஷயங்களை அறிய முடிகிறது. இலந்தைப் பழம் புளிப்பும் துவர்ப்புமாக பசியை தூண்டுகிறது என்று மட்டும் அறிந்திருந்தேன். ஆனால், அதை சரியானமுறையில் பக்குவப்படுத்தி உண்டால் ரத்தத்தை சுத்திகரிக்கிறது என்ற தகவல் புதிது. ஒதிய மரம் சற்று பலவீனமான மரம். இதன் விதையைக் கூட புழுக்கள் குடைந்துவிடுகின்றன. எனவே, எளிதாக முளைப்பதில்லை. வளர்வதற்கு பெரிய போராட்டம் உள்ளது.
மரங்களைப் பற்றி கூறியிருப்பதோடு அவற்றை எப்படி விதைப்பது என்றும் அறிவுரை கூறப்பட்டுள்ளது. எந்தமுறையில் நட்டால் வேகமாக முளைக்கும் என நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மரங்கள் எல்லாம், உடனே முளைத்து மாதம் பல லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டலாம் என்றெல்லாம் கூறுபவர்களுக்கு எதிரான நூல்களாக, விவசாயிகளுக்கு உண்மையில் ஏதேனும் பயன்தரவேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர், மரங்கள் பற்றிய நூலை எழுதியிருக்கிறார். இதை அவர் தனது முன்னுரையில் கூட குறிப்பிட்டு இருக்கிறார்.
நூலில் குறிப்பிட்டுள்ள என்சிபிஹெச் பதிப்பகத்தின் மின்னஞ்சல் முகவரி நடப்பில் இல்லை. புதிய வலைத்தளம் சென்று பார்த்தால் அங்கும் கூட மின்னஞ்சல் வசதி இல்லை. அதை நீக்குவதற்கு என்ன காரணமோ, தெரியவில்லை. நூலைப் படிக்கும் வாசகர்களின் கருத்துகள் இனி தங்களுக்கு தேவையே இல்லை என்ற தோழர்கள் முடிவுக்கு வந்துவிட்டார்களா?
-கோமாளிமேடை குழு
நன்றி - செந்தில்குமார்
கருத்துகள்
கருத்துரையிடுக