பிடித்த விஷயம் பின்னாளில் தொழிலாக மாறியது!

 




அன்பரசு சண்முகம்

மொழிபெயர்ப்பாளர்


பிழைப்புக்கான தொழில்!


மொழிபெயர்ப்பை பாடமாக பயின்றீர்களா?


அப்படி பயின்றிருந்தாலும் சிறப்புதான். எனக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பு, தமிழாக்கம் ஆகியவற்றை நான் சுயமாக கற்றவன். தாளில் எழுதி அதில் உள்ள தவறுகளைக் கண்டுபிடித்து மீண்டும் அத்தவறு நடக்காமல் பார்த்துக்கொண்டுதான் மின்னூல்களை எழுதி வருகிறேன். சுயமாக மொழிபெயர்ப்பை கற்கும் முயற்சியில் வெளியில் இருந்தும் சிலர் உதவி புரிந்தனர். என்னுடைய மொழிபெயர்ப்புகள் புனைவல்ல(சிறுகதை, கவிதை, நாவல்). கட்டுரைகள் சார்ந்தது. அபுனைவு. அதுவே பின்னாளில் பிழைப்புக்கான தொழிலானது. இது பலமா, பலவீனமா என்றால் இரண்டுமே உள்ளது. 


இதற்கான தொடக்கம் எது?


நெ.2 இதழான குமுதம் வார இதழ்தான். இளமை புதுமை முதன்மை என ஏகத்துக்கும் புதுமை செய்யும் இதழ் இன்றைக்கு வாராவாரம் பக்க எண்களை மட்டும் மாற்றிப்போடும் நிலைக்கு வந்துவிட்டது. ஆனால், அன்றைக்கு வார இதழ் தனது கதைகள், சிறுகதைகள், பேட்டி என அனைத்திலும் அவர்களின் கேப்ஷனுக்கு ஏற்றாற்போலவே புதுமையாக இருந்தது. 


குமுதம் இதழின் அட்டையைப் பார்த்து காப்பியடித்துத்தான் ஆனந்தவிகடன் கூட நடிகைகளின் புகைப்படங்களை அட்டையில் போட்டு விற்கத் தொடங்கியது. என்னுடைய தந்தை அதிகம் கல்வி கற்றவர் கிடையாது. ஆனால் உலகில் நடக்கும் நடப்புகளின் மீது திரைப்படங்களின் மீது ஆர்வம் கொண்டவர். உணவு, திரைப்படம் சிறிதே அரசியல் கொண்டவர்கள் தமிழர்கள் என எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். அதே வகையானவர். அந்தளவில் அவருக்கு குமுதம் வார இதழ் போதுமானதாக இருந்தது. அவர் படிப்பதைப் பார்த்து நானும் இதழை படித்தேன். இப்போது அவர் இதழின் பற்றாக்குறையை உணர்ந்து நெ1, 2,3 என மூன்று வார இதழ்களை வாங்குகிறார். முதலில் குமுதம் மட்டும்தான். 


குமுதம் ஒரு சினிமா இதழ்.. அதில் உள்ள கட்டுரைகளைப் படித்தால் மொழிபெயர்ப்புகளை செய்துவிடலாமா?


அதில் எழுத்தாளர்கள் ரா.கி ரங்கராஜன், சுஜாதா, பிரபஞ்சன் என பலரும் கதை, கட்டுரை,தொடர் எழுதினார்கள்தானே? அதில் உள்ளது இலக்கியத்தரம் கொண்டதல்ல. வணிக மேலோட்டமான எழுத்து. ஒருவருக்கு எழுதவேண்டும் என்ற உந்துதல் தானாக ஏற்படவேண்டும். அதற்கு நீங்கள் வார இதழ்கள், மாத இதழ்கள், புதினங்கள், மொழிபெயர்ப்பு நாவல்கள் என நிறைய வாசிக்கவேண்டும். ''கண்டதையும் வாசிக்கவேண்டும். அவை எழுத்தாளனின் மனதில் ஆழச்சென்று பின்னாளில் படைப்பாக மாறும்'' என எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார். இதுபற்றி சகோதரர்கள் போன்றவர்களான திரு.முருகானந்தம், திரு.ஶ்ரீராம் ஆகியோர் அறிந்திருந்தார்கள் என நினைக்கிறேன். தங்களது சொந்த நூலக சேமிப்பில் இருந்து எனக்குத் தேவையான நிறைய நூல்களை இரவலாக படிக்க அளித்தனர். குமுதத்திற்கு பிறகு ராணி காமிக்ஸ்கள், க்ரைம் நாவல்கள், மாலைமதி, ராணிமுத்து, கண்மணி என படித்தேன். பிறகு நூலகத்தில் சகோதரர் எடுத்து வரும் நூல்களை வாசிக்கத் தொடங்கினேன். அவர் அவரது மெல்லுணர்ச்சி வாசிப்பு நிலைக்கு ஏற்றவாறு நூல்களை எடுத்து வருவார். கல்லூரி காலத்தில் கவிதைகளை எழுதினார். கையெழுத்து பிரதி இதழ்களில் கூட எழுதியிருக்கிறார்.  அந்த நூல்களை, புரியாவிட்டாலும் கூட பரவாயில்லை என முடிந்தவரை வாசித்து பார்ப்பேன். அந்த வகையில் படித்தவுடன் ஈர்ப்பாக இருந்தது டிராகுலா என்ற நாவல். அதன் அட்டைப்படமே பிரமாதமாக இருக்கும். 


பள்ளிப்படிப்பு, என்ன கற்றீர்கள்?


பள்ளி என்பது உங்களைச் சுற்றியுள்ள சாதி சமூகம் எப்படி உள்ளதோ அப்படியேதான் தன் மலிவான நகலாக இருக்கும். அங்கே செல்வது உங்களது சமூக வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கான பாடங்களை வழங்கும். பல்வேறு சாதி, மத பிரிவினரை அனுசரித்து செல்வதற்கான படிப்பினைகள் கிடைக்கும். கல்வி என்றால், தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுக்கான மொழிப்பயிற்சிகளை பள்ளி வழங்கும். அடிப்படையாக தாய்மொழியைக் கற்பதற்கான ஆழமான பயிற்சிகள் முக்கியம். உங்களுக்கு தமிழைக் கற்பிப்பவர்கள் சிறந்த ஆசிரியர்களாக அமைந்தால் இலக்கிய வாழ்க்கை நன்றாக இருக்கும். இல்லாவிட்டாலும் நீங்களாக சுயமாக கற்கலாம். ஆனால், அந்தப்பாதை சற்று போராட்டமாக இருக்கும். உலகில் பிழைக்க உள்ளூரில் தமிழ், வெளியில் உலகில் ஆங்கிலம் என இருமொழிகள் முக்கியம். இருமொழிகளையும் குறைந்தபட்சம் படித்து புரிந்துகொள்வது அவசியம். அவற்றை நீங்கள் பள்ளியை விட வெளியில் இருந்து நூல்களை படித்து ஆழமாக கற்று இலக்கணத்தை உறுதியாக்கிக் கொள்ளலாம். எனக்கு வாசிக்க தமிழ்நூல்கள் அருகிலிருந்த நூலகம் வழியாக கிடைத்தது. சிறுவயதில் சகோதரர் என்னை அழைத்து சென்று நூலக உறுப்பினராக்கிவிட்டார். அதன் வழியாக மாதம் ஒரு நூலைப் பெற்றுவந்து வாசிப்பேன். அப்போதெல்லாம் நிறைய படிக்கவேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே இருந்தது. வழிமுறையெல்லாம் தெரியாது.  


எழுதவேண்டும் என்ற ஆர்வம் எப்போது உண்டானது?


சென்னையில் தங்கி படித்தபோது, நூல்களை இரவல் வாங்கும்போது சகோதரரான திரு.ஶ்ரீராம் நீ வேண்டுமானால் பார். எதிர்காலத்தில் எழுதப்போகிறாய் என்று கூறினார். அதை நான் நம்பவில்லை. ''படிக்க ஆசை இருக்கிறது. எழுதுவது பற்றி முடிவாக தெரியவில்லை'' என மழுப்பினேன். புத்தக வடிவமைப்பு பற்றி படித்தேன். ஆனால், அதில் வேலை தேடும்போதுதான் அதற்கான அறிவோ, தெளிவோ எனக்கில்லை என புரிந்துகொண்டேன்.  2014ஆம் ஆண்டு தொடங்கி வலைப்பூ உருவாக்கி எழுதத் தொடங்கினேன். அதிலும் தொடக்கத்தில் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. இக்காலத்தில் நான் பால் ஒரு உயிர்க்கொல்லி என்ற நூலை மொழிபெயர்த்தேன். அதை அச்சில் வெளியிட்டு உதவியவர், அறச்சலூரைச் சேர்ந்த கவிஞர் சிவராஜ். அவரது அறிமுகம், ஊக்கம் எனக்கும் மாற்றத்தை விதைத்தது. கோவாவில் வாழ்ந்த பள்ளி செல்லும் சிறுவன் பற்றிய நூலொன்றை எனக்கு வாசிக்கக் கொடுத்தார். அதைத்தான் தடுமாறி பள்ளிக்கு வெளியே வானம் என்ற பெயரில் மொழிபெயர்த்தேன். அந்த நூலை ஃப்ரீதமிழ் இபுக்ஸை சேர்ந்த த.சீனிவாசன் அவர்கள் வலைதளத்தில் வெளியிட்டார். அந்த நூலை இப்போது பார்த்தாலும் தவறுகளை அதிகம் தெரிகின்றன. பரவாயில்லை. முயற்சி செய்தேன். எதிர்பார்த்தது போல தரம் கைகூடவில்லை. 


தமிழுக்கு உங்களுக்கு எளிதாக நூல்கள் கிடைத்துவிட்டன. ஆங்கிலத்தில் எப்படி நூல்களை தேடினீர்கள்?


நூலகத்தில் தி இந்து ஆங்கிலம், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய நாளிதழ்கள் வரும். அதைப் படித்து புரிந்துகொண்டு செய்திகளை மொழிபெயர்க்க முயன்றேன். இன்றைக்கும் அதுதான் குறைந்த செலவில் கற்கும் வழி. தமிழ் நாளேடுகள் எட்டு ரூபாய்க்கு விற்கும்போதும் ஆங்கில தேசிய நாளேடுகள் நான்கு ரூபாய்க்கு விற்கின்றன. எனவே காசும் குறைவு. டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற இதழ்கள் மொழிபெயர்க்க சற்று எளிய ஆங்கிலத்தைக்கொண்டுள்ளன. ஆனால், ஆங்கிலத்தில் வலிமையாக தி இந்து நாளேட்டை வாசிக்க முயலவேண்டும். என்னைச் சுற்றியுள்ளோர் அப்படித்தான் சொன்னார்கள். சவாலில்தான் ஆபத்தும் வாய்ப்பும் இருக்கிறது. ஒவ்வொரு நாளேடும் தனக்கென தனி இலக்கண அமைப்பு, சொற்களை கொண்டுள்ளன. ஆங்கில நூல்களை பழைய புத்தக கடையில் தேடி வாங்கி மொழிபெயர்ப்பு பயிற்சி செய்யலாம். புதிய நூல்களை வாங்க முயன்றால் விலை அதிகமாக இருக்கும். அது அனைவருக்கும் ஏற்றதல்ல. 


மொழிபெயர்ப்பு பற்றி கூற கற்பிக்க யாரேனும் அழைத்திருக்கிறார்களா?


ஒரே ஒரு நண்பர் அழைத்தார். அவருக்கு அப்படி அழைக்க தோன்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என்று இன்றுவரைக்கும் எனக்குத் தெரியவில்லை. அழைப்பை மறுத்துவிட்டேன். நானே கற்றுக்கொண்டிருக்கும் நிலையில், பிறருக்கு என்ன கற்றுத்தருவது என்று எனக்கு தெரியவில்லை. மனதில் நம்பிக்கையும் இல்லை. நான் ஆங்கில நாளேடுகளைப் படித்துத்தான் மொழிபெயர்ப்பைக் கற்றேன். நானாக கற்றதுதான். இதை எப்படி பிறருக்கு கற்பிப்பது அல்லது வழிகாட்டுவது? ஆங்கில நூல்களை கருத்தை புரிந்துகொள்ள முயல்கிறேன். அதன் சாராம்சத்தை தமிழில் என்னுடைய மொழி அறிவைக் கொண்டு எழுதுகிறேன். பெரும்பாலும் தமிழாக்கம். சொல்லுக்கு சொல் என மொழிபெயர்ப்பதில்லை. துறை சார்ந்து ஒரே சொல் பலவிதமான பொருளைக் கொண்டிருக்கும். நேரு ஒருமுறை கேலியாக கூறிய விஷயமுண்டு. சாம்ராஜ்ய முன்னுரிமை என பொருள் வரவேண்டியதை ஒரு மொழிபெயர்ப்பாளர் சக்ரவர்த்திக்கு பிடித்தமான தின்பண்டம் என மாற்றி எழுதினார். இதுபோல பொருள், எந்த இடம், எதற்கு என கேள்வி கேட்காமல் மொழிபெயர்க்கக்கூடாது.  இப்படியான தவறுகள் எல்லாம் தொழிலில் வரக்கூடாது. கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 



நன்றி - செந்தமிழ் இலக்கியச் சங்கம்(அபுனைவு மின்னூல்களுக்கானது)


#மொழிபெயர்ப்பு #தமிழ் #தமிழாக்கம் #குமுதம் #தந்தை #எழுத்து #தொழில் #வாசிப்பு #இரவல் புத்தகங்கள் #ஆரா பிரஸ் #நூலகம் #நாவல்கள் #டைம்ஸ் ஆப் இந்தியா #தி இந்து ஆங்கிலம் #செந்தமிழ் இலக்கியச் சங்கம் #அபுனைவு #ஆங்கிலம் வழி தமிழ்


#translation #tamil #kumudam #weekly #writing #money #flashback #anbarasushanmugam #ara press #library #books #novels #toi #the hindu #senthamizh literature society #english #nonfiction 







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!