காதல் மீட்டர் - உறவுகளை பாதுகாப்பது எப்படி?
காதல் மீட்டர்
2
ஒருவர் நண்பராக இருந்து அப்டேட் ஆகி காதலராக மாற வாழ்க்கையில் வாய்ப்பு உள்ளது. இதற்கும் அவர் நம்பிக்கையை சம்பாதித்து உழைக்கவேண்டும். ஒரு பதவி கொடுத்தால், முந்தைய பதவியை விட கூடுதலாக உழைக்கவேண்டும் என்றுதானே கொடுக்கிறார்கள். அந்த வேலையை செய்யாமல் அவர் உறங்கிவிட்டால் என்னாவது?
ஒருவருக்கொருவர் லட்சியங்களில் உதவிக்கொள்வது நண்பர்களுக்கு சாத்தியம். அதேசமயம், அவர்களில் ஒருவருக்கு மட்டும் வெற்றி கிடைக்கிறது. இன்னொருவருக்கு கெடுவாய்ப்புகளே அதிகம் என்றாலும் அந்த உறவு அதிக நாட்களுக்கு தாக்குப்பிடிக்காது. இருவர் வாழும் உறவில் ஒருவருக்கு மட்டுமே பயன் விளைகிறது என்றால் இன்னொருவர் மனதிற்குள்ளாக வருத்தமுறுவார். இங்கு யாரும் மகான் அல்லது துறவி கிடையாது அல்லவா? அகமணமுறையை எடுத்துக்கொள்வோம். சாதியைக் காப்பாற்றுவதுதான் அதன் ஆழத்தில் உள்ள நோக்கம். மேல்சாதி இந்துகள் தங்கள் அந்தஸ்து, பணம், அசையும் சொத்து, அசையா சொத்து என பலதையும் பார்த்துத்தான் மணம் செய்கிறார்கள். இதெல்லாம் இல்லாமல் வரதட்சணைப் பணம் வேறு இருக்கிறது. இதையெல்லாம் வைத்துத்தான் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். அவ்வளவு பணத்தை பெண் எதற்காக இன்னொருவரிடம் கொடுத்து பிள்ளையை வளர்க்கவேண்டும்? விந்தணுதானம் வாங்கி பிள்ளை பெற்று தானே வளர்க்கலாம் என்பது பெரியாரிய சிந்தனை. நம் சமூகத்தில் அந்தளவு இங்கு யாரும் சிந்திக்கத் தொடங்கவில்லை.
மேற்சொன்ன உறவில் முழுக்க பயன்களே அதிகம். ஒரு பெண் தனியார் பள்ளியில் குறைந்த கூலியில் வேலை செய்கிறார் என்றால், அங்கேயே பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்கலாம். சௌகரியம் இல்லையா? அசையா சொத்துகள், அந்தஸ்து கொண்ட வேலை, வளமிக்க செல்வாக்கு கொண்ட உறவுகள், நட்புகள் என பலதையும் மக்கள் தேடுகிறார்கள். அதை அடைய பாடுபடுகிறார்கள். வெற்றி என்பது உறவுகள், நட்புகள், தொடர்புகள் என்று மட்டுமே ஆகிவிட்டது. திறமை எங்கே என்று தேடாதீர்கள். அதெல்லாம் தொலைந்து வெகுகாலமாகிவிட்டது.
நண்பர்களாக இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வாய்ப்பு அதிகம். எனவே, அவர்கள் காதல் உறவில் ஈடுபட்டால், அந்த உறவின் ஆயுள் கூடுதலாக இருக்கலாம். இதெல்லாம் கூட ஒருவித நம்பிக்கை அடிப்படையில்தான் கூறுகிறோம். மனித வாழ்க்கையில் ஏதுமே நிச்சயம் கிடையாது.
உண்மையான நண்பர்கள் ஒருவருக்கொருவர் நலம் நாடுபவர்களாக இருப்பார்கள். பொதுவாக நீங்கள் ஒருவருடைய நட்புக்கு உண்மையாக இருக்கலாம். அதுதான் நடைமுறையில் சாத்தியமானது. இன்னொருவர் அப்படி இருக்கிறாரா இல்லையா என கண்காணித்து அவரை நட்பாக ஏற்றுக்கொள்ளலாம். சிலர், நட்பில் மிக வெளிப்படையாக விவகாரம் சிக்கலானால் வரும் ஆபத்துகளை கூறுவார்கள். உண்மையில்லாதவர்கள், வரும் ஆபத்துகளைப் பற்றி தெரிந்தாலும் பயல் மாட்டிக்கொண்டு விழிக்கட்டும் என ஏளன சிரிப்பை அடக்கிக்கொண்டு காத்திருப்பார்கள். இதை ஒருவர் தன் வாழ்க்கை ஓட்டத்தில் கண்டறிய முடியும்.
எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் கல்லூரி காலத்தில் இருந்தே பழக்கம். நூறுபேர் கொண்ட வகுப்பறையில் எனக்கு நண்பர் தைரியமாக கூறும் அளவுக்கு இருந்தவர் அவர்தான். பின்னாளில் அவர் காவல்துறையில் பணியாற்றினார். அவருடைய திருமணம் சற்று தொலைவில் நடந்தாலும் கூட குடும்பத்தில் உள்ளவர்களை சென்று வரக் கோரினேன். இன்று அவர் என்னோடு நட்போடு இல்லை. அதற்கு காரணம், அவருக்கு மரபுவழியாக வந்த நோய் பற்றி அறிந்து போனில் உரையாடியதே ஆகும். அதனால் நானறியாது மனம் புண்பட்டவர், பலமுறை போனில் அழைத்தும் அழைப்பை ஏற்கவில்லை.
அவருக்கு வந்த நோய் குடும்ப ரீதியானது. அதையும் அவர் சொல்லித்தான் அறிந்தேன். அந்த நோய் பற்றி பொதுவாக தெரிந்துகொள்ள சிலமுறை பேசினேன். ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நானேதான் அவருக்கு முதல்முறையாக அழைத்து பேசினேன். அந்த மூன்று ஆண்டுகளும் அவர் என்னோடு பேசவில்லை. போன் செய்ய நினைத்தேன் என்று கூறினார். இதுபோல வாக்குறுதிகளை பேச்சுகளை நிறைய கேட்டாயிற்று. ஒருவர் இன்னொருவரை அழைக்காமல் இருக்க வேலை, திருமணம், நோய் என பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், நோய் பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் நான் பேசியது, அவரை காயப்படுத்திவிட்டது போல. அதற்காக மின்னஞ்சலில் அவரிடம் மன்னிப்பு கோரினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. நாங்கள் இருவரும் பெரிதாக ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டவர்கள் அல்ல. வாய்ப்பு கிடைக்கும்போது நான் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவரை பார்க்கச் செல்வேன். வெறுமனே பார்த்து பேசத்தான். இன்று பார்த்தால் அந்த உறவு கண்முன்னே நொறுங்கிப்போய்விட்டது. உடற்பயிற்சிகளை செய்துகொண்டே இருப்பவருக்கு திடீரென முழு உடலையும் முடக்கிப்போடும் தீர்க்கமுடியாத நோய் வந்ததுதான் அவரது மனநிலை இறுக்கமானதற்கு காரணம். என்னுடைய நட்பு முறிந்தாலும் பரவாயில்லை. தன்னுடைய மனதை வலிமையாக்கிக் கொண்டு நம்பிக்கையோடு மனைவி குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே போதும்.
நண்பர்களே நட்பைப் பொறுத்தவரை நிறைய சமயங்களில் நாம் யாருக்கும் ஆறுதல் சொல்லவேண்டியதில்லை. சிலர் சொல்லும் சோக கதைகளை டெட் டாக் நிகழ்ச்சி போல கேட்டுக்கொண்டிருந்தாலே போதும். சமாதானம் ஆகிவிடுவார்கள். தேவைப்பட்டால் தேறுதல் சொல்லலாம். நண்பர் போல தீராத நோய் வந்தவருக்கு தேறுதல் பயன்படாது. அதை அவர் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. புரிந்துகொள்ளும்போது மனநிலை மாறும். இன்று நண்பர்கள் சோகத்தை வலியை மட்டுமே வெளியில் பகிர்கிறார்கள். சந்தோஷத்தை அவர்களுடனே வைத்துக்கொள்கிறார்கள் அதென்ன மனநிலையோ? இரண்டையும் பகிரக் கூடியவர்கள் கிடைத்தால் மகிழ்ச்சிதான்.
நண்பர்களே நீங்கள் நட்பில் இருக்கும்போது நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும். உள்ளொன்று புறமொன்று பேசாமல் இருந்தாலே நல்ல விஷயம்தான். மற்றபடி பலாபலன்களை எதிர்பார்த்து இருந்தால் ஏமாற்றம்தான். உதவி செய்தால் நன்றி உணர்வோடு பிறர் இருப்பார்கள் என எதிர்பார்க்காதீர்கள். அதுவே ஏமாற்றத்தை தவிர்க்கும்.
நட்பை கடின உழைப்பு மூலமே காப்பாற்றி்க்கொள்ள முடியும். நிலைமை அப்படி மாறிவிட்டது. நல்ல நட்பை உருவாக்கிக்கொள்ள சில அம்சங்களை கடைபிடிக்கவேண்டும். நேர்மை - நட்போ, காதலோ எடுத்துக்கொண்ட ஈடுபடும் உறவுகளில் நேர்மை தேவை. பேச்சு செயல்பாடு என இரண்டுமே பொருத்தமாக இருக்கவேண்டும். அரசியல்வாதிகள் போல மாறுபாடாக அமைந்துவிட்டால் உறவு அழிந்துவிடும்.
மனமுவந்த செயல்கள் - விருப்பத்தோடு செயல்களை செய்வது. வேண்டாவெறுப்பாக ஒன்றை செய்வது தீங்கையே கொண்டு வரும். நட்பில் விருப்பத்தோடு ஈடுபட்டால் மட்டுமே நண்பருக்கான கௌரவத்தைக் காக்க நலம் பேண செயல்களை செய்ய முடியும்.
அர்ப்பணிப்பு உணர்வு - எந்த செயலை செய்தாலும் அர்ப்பணிப்பு உணர்வு அவசியம். அது இல்லாதபோது அந்த செயல்கள் சிறக்காது. தவறான உள்நோக்கம் நட்பை அழிக்கும்.
நட்பில் இருக்கும்போது ஒருவரின் பேச்சு, செயல்பாடு காயப்படுத்தினால் அதை மன்னிக்கும் குணம் தேவை. சிலர் உடனே உறவை முறித்துக்கொண்டு போய்விடுகிறார்கள். வாழ்க்கையை உறவுகள் அழகாக்குகின்றன. எனவே, அதில் மகிழ்வாக இருக்கவேண்டும். பாரமாகவோ, அதில் இருந்து விடைபெறுதலாகவோ மாறுவது உறவில் சிக்கல் உள்ளது என்று அர்த்தம். மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையோடு இருத்தல் நலம். பொதுவாக ஒருவரின் வாழ்க்கை, நம்பிக்கை, சிந்தனைகள் பற்றி எதிர்மறையாக பேசுவது நல்லதல்ல. ஊக்கம் இல்லாதபோதும் எதிர்மறை சிந்தனை நன்மை தராது.
உறவுகளில் மென்மையான குரலில் கோபம் இல்லாமல் பேசுவது முக்கியம். அனைத்து நேரங்களிலும் சாத்தியம் இல்லை என்றாலும் அதை முயலவேண்டும். எந்த சூழல்களிலும் இருதரப்பையும் ஆராய்ந்து பாகுபாடு இன்றி செயல்படவேண்டும். பேச வேண்டும்.
காந்தி கூறியதுபோல, பொதுநலத்தில்தானே தன்னுடைய நலனும் உள்ளது என ஒருவர் புரிந்துகொண்டால் உறவுகள் எளிதாக உடையாது. சிக்கல்கள் சிடுக்குகள் குறையும்.
1.2
ஒருவரையொருவர் புரிந்துகொள்ளசெல்லும் டேட்டிங் என்பது வேறு. அதே உறவு நன்றாக வளர்ந்து திருமணமானால் அதற்குப் பிறகு உறவு வேறு திசைக்கு செல்லும். இதைப்பற்றி முன்னமே புரிந்துகொண்டால் தேவையான விஷயங்களை அறிய முயன்றால் உறவுகளுக்குள் சிக்கல் குறையும். வராது என்று சொல்ல முடியாது. குறைக்கலாம். தவறான தகவல்களை அறிந்துகொண்டு அதன் வழியாக இயங்குவது, அல்லது தகவல்களே அறியாமல் இருப்பது என இரண்டுமே உறவுகளுக்கு ஆபத்து ஏற்படுத்துவதுதான்.
திருமண உறவு முறிந்தால் அந்த சமூகத்தில் ஏராளமான விவாகரத்தானவர்கள் உருவாவார்கள். குழந்தைகள் இருந்தால், அவர்கள் யாரோ ஒருவரிடம் வளரும்படி அல்லது மாதம் குறிப்பிட்ட நாட்கள் தந்தை, தாயிடம் வளரும் சூழல் உருவாகும். இப்படியான சூழ்நிலை குழந்தைகளின் மனநிலைக்கு நல்லதல்ல. திருமண உறவு கசந்து அந்த உறவில் இருக்கும்போதே இன்னொரு உறவுக்குள் ஆணோ, பெண்ணோ ஈடுபடும்போது அது மற்றொரு பெரும் பிரச்னையை உருவாக்குகிறது.
காதலுக்கு, திருமணத்திற்கு சிறந்த ஒருவரை நூறு சதவீதம் பொருத்தமானவரை கண்டுபிடிக்க பலரும் முயல்கிறார்கள். அதெல்லாம் குறிப்பிட்ட சாதி, குலத்திற்கான வரன் பார்க்கும் வலைத்தளங்களில் தேடினாலும் ஏஐ சாட்பாட் மூலம் முயன்றாலும் கிடைக்காத விஷயம். மனிதர்களில் யாருமே குண இயல்பில் நூறு சதவீதம் செய்நேர்த்தி கொண்டவர்கள் அல்ல. பலவீனங்களும் தவறுகளும் கொண்டவர்கள்தான். அதை சிலரால் சிறப்பாக பொதுவெளியில் மறைக்க முடிகிறது. சிலரால் முடிவதில்லை. ஆனால், அப்படியான இயல்பான குணங்கள் வெளியே வந்துதான் ஆகும். எனவே சரியான துணையை தேடும் விவகாரத்தில் நூறு சதவீத பொருத்தம் என்ற கீவேர்டை கைவிட்டுவிடுவது நல்லது. சரியான பொருத்தமுடையவர் கிடைக்கவேண்டும் என காத்திருப்பதும் முட்டாள்தனமானது. பொறுமை சகிப்புத்தன்மையால்தான் நிறைய உறவுகள் உலகில் பிழைத்திருக்கின்றன. பராமரிக்கப்பட்டும் வருகின்றன.
சிலருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் திருப்தி இருக்காது. உடல் உள்ளம் என இரண்டிலுமே கூறுகிறேன். அப்போது அவர்கள் வெளியில் வேறு காதல் உறவுகளை தேட முயல்கிறார்கள். திருமணமாகாதவர்களை விட திருமணமானவர்கள் ஈடுபடும் தவறான உறவுகளே அதிகம். ஆனாலும் உலகம் திருமணத்திற்கு பெரிய கௌரவத்தை அந்தஸ்தை தருகிறது. அது ஒரு வகையில் ஒருவருக்கு சமூக பாதுகாப்பாக அமைகிறது. எனவே, சரியான பொருத்தம் என்பது காதல் உறவில் கிடையாது. அப்படி இருப்பதாக பிறர் கூறினால் அதை நம்பாதீர்கள். அது மூடநம்பிக்கையே. திருமணம் கடந்த காதல், பாலுறவு தவறானது. ஒரு உறவை முறித்துக்கொண்டால் இன்னொரு உறவுக்கு முயலலாம். தவறில்லை. ஒரு உறவில் இருந்துகொண்டே இன்னொருவருடன் காதலோ, பாலுறவோ கொள்வது சட்டப்படியும், அறத்தின்படியும் தவறானது.
திருமண விவகாரத்தில் குடும்பம் தேர்ந்தெடுக்கிற வரன் அல்லது நீங்களே தேர்ந்தெடுக்கிற ஒருவர் அல்லது ஒருத்தி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எதை செய்தாலும் செய்த செயலுக்கு பொறுப்பேற்றுக்கொள்வது முக்கியம். கடவுள் சொன்னார், கனவு வந்தது என பரபரக்கும் ஆட்கள் தங்களுக்குத் தாங்களே சிக்கலை வரவழைத்துக் கொள்கிறார்கள். உங்கள் வாழ்க்கையை இன்னொருவர் கையில் ஒப்படைக்காதீர்கள். நீங்களே துணைவர் பொருத்தமா இல்லையா என ஆராய்ந்து பார்த்து முடிவெடு்ங்கள். வாழ்க்கையில் தலையிட சாமியாரோ, கடவுளோ, வேறு தரகர்களோ யாரையும் அனுமதிக்காதீர்கள்.
#காதல் #நட்பு #டேட்டிங் #உறவு #மனம் #திருமணம்
#friendship #help #dating #love #marriages #realtionship #hurdles #god #decision

கருத்துகள்
கருத்துரையிடுக