கள்ளக்காதல் கதையில் கொடூர கொள்ளை குழுவும் போதைப்பொருள் குழுவும் ஒன்றாக சேர்ந்தால்....
தகத்தே லே
தெலுங்கு
நவீன் சந்திரா, திவ்யா பிள்ளை, அனன்யா ராஜ், ரவிசங்கர்
க்ரைம் திரில்லர்
பவானி மூவிஸ் - யூட்யூப் சேனல்
ஏ பிளஸ் சான்றிதழ் வாங்கக்கூடிய பாலுறவு, தீவிர வன்முறை காட்சிகள் கொண்ட திரைப்படம். படத்தில் மூன்று கதைகள் உள்ளது. ஒன்று இன்ஸ்பெக்டர் போதைப்பொருட்கள் குழுவை தேடி அலையும் கதை. இதில் அவர், சில டபுள் ஏஜெண்டுகளை போதைப்பொருள் கேங்கில் இருந்து விலைக்கு வாங்கி தகவல்களை வாங்கி அவர்களை பிடிக்க முயல்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு சப் இன்ஸ்பெக்டர் மூலம் இன்னொரு வழக்கும் வருகிறது. அது ஒரு கொலை வழக்கு.
இரண்டாவது கதை, கொலைவழக்கு.இதில் நாயகன் வீட்டில் கொலை ஒன்று நடக்கிறது. அவரது வீட்டில் தங்கியிருந்த பெண் கொலை செய்யப்பட்டு ஹாலில் கிடக்கிறார். வயிற்றில் அலங்காரப் பொருள் ஒன்று துளைத்து சென்றிருக்கிறது. நாயகன், கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு அங்குள்ள கைரேகைகளை துடைக்கிறார். தடயங்களை அழிக்கிறார். பிறகு போலீசுக்கு போன் செய்து தகவல் கொடுக்கிறார். போலீசாரும் வந்து பெண்ணின் உடலை மீட்டு செல்கிறார்கள். தகவல் கொடுத்த நாயகன் மீது சந்தேகம் தோன்ற அவனை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்கிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர், கொலையான பெண்ணின் புகைப்படம், யார் சாட்சியோ இருவரது புகைப்படங்களையும் அனுப்பக்கூறி பிறகே நாயகனை அழைத்து வருகிறார்கள்.
புஜ்ஜம்மா என்ற பஞ்சாபி தாபாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருக்கிறார். அங்குதான் போதைப்பொருள் ஏற்றிவரும் லாரி வருவதாக தகவல். எனவே, அங்கு அவர் காத்திருக்கிறார். இடையில் இந்த கொலை வழக்கு பற்றியும் விசாரிக்க நாயகனை அழைத்துக்கொண்டு சப் இன்ஸ்பெக்டர் வந்துசேருகிறார். அங்கு நாயகனை உட்காரவைத்து இன்ஸ்பெக்டர் சாப்பிட்டுக்கொண்டு விசாரணையைத் தொடங்குகிறார்.
மூன்றாவது வழக்கு. பாரடைஸ் என்ற சாமியார் மடம் பற்றியது. மடத்தில் பெரிய பிரச்னை இல்லை. ஆனால், அங்கு ஓஷோ போல உள்ள சாமியார், கம்யூனிட்டி போல பக்தர்களை உள்ளே பெரும் பணம் வாங்கிக்கொண்டு வரச்செய்து கட்டற்ற பாலுறவு செயல்பாடுகளுக்கு வாசல் திறந்துவிடுகிறார். இவரைப் பற்றிய கதையை நாயகன் கூறுகிறார். காமத்தில் ஆர்வம் இல்லாத, எழுச்சி இல்லாத நண்பரை மீண்டும் எழுச்சி நாயகனாக்க, பெண்களின் நாயகனாக்க பாரடைஸ் செல்கிறார்கள். அப்போதும் கூட அந்த நண்பன் மட்டும்தானே செல்லவேண்டும். எதற்கான மாப்பிள்ளை தோழன் போல நாயகனும் இன்னொரு நண்பனும் உள்ளே செல்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? மென்பொருள் வேலை. காசு வங்கிக் கணக்கில் கொட்டிக் கிடக்கிறது.கருமம் அதை வைத்து பெண்களை தடவியாவது பார்க்கலாமே?
இப்போது நாயகன் தாபாவில் சொல்லும் கதை அடிப்படையில் கதை நடைபெறுகிறது. இடையில் சிறையில் உள்ள தீவிர கொலை, கொள்ளை, வல்லுறவு குழு ஒன்றுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அவர்களை வேறு சிறைக்கு மாற்ற கொண்டு செல்கிறார்கள். அவர்களுக்கு இன்ஸ்பெக்டர் சலபதி மீது பெரும் பகை உள்ளது. அவர்தான். எட்டுபேர் கொண்ட குழுவை பிடித்து சொறிநாயை அடிப்பது போல அடித்து உதைத்து கை, கால்களை உடைத்து சிறையில் தள்ளுகிறார். மரண தண்டனையும் வாங்கிக் கொடுக்கிறார். அவர்களுக்கு சாவும் முன்னர், தங்களை சிறையில் அடைத்த சித்திரவதை செய்த சலபதியைக் கொல்ல வேண்டும் என்ற ஒரே ஆசைதான். அந்த குழுவில் இருக்கும் ஒரே ஒருவன் மட்டுமே சிறையில் இருந்து தப்பித்தாலே போதும். எதற்கு திரும்ப சலபதியிடம் போகவேண்டும் என லாஜிக்கலாக கேள்வி கேட்கிறான். அதை குழுவில் உள்ளவர்கள் கோழைத்தனம் என்று சொல்லி மறுக்கிறார்கள்.
நாயகன் சொல்லும் அவனது கதையோடு, போதைப்பொருளை அனுப்பும் குழுவின் கதை, சிறையில் இருந்து தப்பிக்க முயலும் டி கேங்கின் கதையும் இடையிடையே காட்டப்படுகிறது. கமெண்டில் தண்டுபாளையம் கேங் என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். கன்னடத்தில் அதுபோல படம் உண்டு என நினைவு. அனைத்து கதைகளும் புஜ்ஜம்பா தாபாவில்தான் சந்திக்கின்றனர்.
இறுதியில் வரும் சண்டைக்காட்சியில் ரவிசங்கர், டி கேங் ஆட்கள் சண்டையில் பீதி ஊட்டியிருக்கிறார்கள். ரத்தம் க்வான்டின் டரன்டினோ படம் போல நம் மீதே பீச்சியடித்துவிடும் போல.. இப்படித்தான் எடுக்கப்போகிறார்கள் என்றால் இன்னும் ராவாகவே எடுத்திருக்கலாம். படத்தில் சலபதியாக நடிகர் ரவிசங்கர், நிறைய காட்சிகளில் வருகிறார். நாயகனுக்கு பதிலாக சண்டை போடுவது இவர்தான். நாயகனாக நடித்துள்ள நவீன் சந்திரா, உணர்ச்சிகரமான காட்சிகளில் திணறுகிறார். காதல் காட்சிகள் இவருக்கே சொந்தம். பெரும்பாலும் பாலுறவு காட்சிகள்... இவர்கள் இல்லாமல் நடிப்பில் பெரிதும் சாதிப்பவர் தேவியாக வரும் திவ்யா பிள்ளை கிடையாது. லிஸ்ஸியாக வரும் அனன்யா ராஜ். இவரை படத்தில் கட்டுப்படுத்த முடியாத பாலுறவு வேட்கை குறைபாடு கொண்டவர் என சித்திரிக்கிறார்கள். இவர், தேவியிடம் இறப்பதற்கு முன்பு கேட்கும் கேள்விகள் சரியானவைதான். ஆனால், தேவி பித்துப் பிடித்தாற்போல கணவனை காதலிக்கிறாள். லிஸ்ஸி பாத்திரத்தில் படம் நெடுக நம்மை ஈர்ப்பது அனன்யா ராஜ்தான். வெறும் உடல் அளவு மாத்திரமல்ல. மேடம் திறமையாக நடிக்கவும் செய்கிறார். அது படத்திற்கு பெரிய பலம்.
லிஸ்ஸி பாத்திரத்தில் ஒருவித எதிர்பாராத தன்மை உள்ளது. எப்போது என்ன செய்வாள் என யாருக்குமே தெரியாது. அதுதான் அந்த பாத்திரத்தின் பெரிய பலம். தேவியின் அன்பு என்பது முதலில் இருந்தே சந்தேகமாக இருக்கிறது. அப்படியென்ன பெரிய அன்பு என்ற புரிந்துகொள்ள எந்த காட்சியுமே இல்லை. அன்பு அந்தே... டோன்ட் கொஸிட் தி எமோஷன் என இயக்குநர் அப்படியே கதைக்கு போய்விடுகிறார். லிஸ்ஸி பாத்திரத்தை விட திகிலாக வக்கிரமானதாக அவளது அன்பு உள்ளது. கணவன்,அன்பை முழுமையாக பெற, தோழி என அழைத்து வீட்டில் தங்க வைத்தவளையே தேவி கொலை செய்யத் துணிகிறாள். அவளது கணவன் நிலையை நினைத்துப் பாருங்கள். தேவிக்கு இருப்பது அன்பா, அல்லது தனது சொத்து மீதுள்ள வெறியா?
லிஸ்ஸி பேசும் சில வசனங்கள் பொருந்தாது இருக்கிறது. அவர் ஆந்திரத்தில் வாழ்ந்தும் கூட அங்குள்ள சமூகம் அக்கா தனது பெண்ணை தன் தம்பிக்கு கல்யாணம் செய்து கொடுப்பது பற்றி தெரியாமல் கேள்வி கேட்கிறார். அவர் பாரடைசில் வாழ்கிறார் சரி, வேறு கோளில் இல்லையே? இதைக்கூடவா அறியாமல் இருப்பார். தேவி, நாயகன் இடையே உள்ள நெருக்கம், அன்பு ஆகியவற்றைக் காட்ட ஒற்றைக் காட்சி கூட இல்லை. நாயகன் உடலுறவுக்கு அடுத்த நாள் பேசும் காட்சியும் உரையாடல் பொருத்தமாக இல்லை. அதைக் கேட்க பார்க்க பெரிய ஆர்வமும் உருவாகவில்லை. பரிதாபம்.
காதல் காட்சிகளுக்கு தனியாக இரண்டு பாடல்களைப் பயன்படுத்தியிருக்கலாம். இரு நாயகிகளுக்கும் காதல் பாட்டு ஒன்றேதான். பட்ஜெட் பிரச்னையா என்ன? ஒன்று தீவிரமான காமம் மட்டுமே உள்ளது. அடுத்ததில் நாயகனே புரிந்துகொள்ள முடியாத மனைவியின் அன்பைக் கொண்டது.
காமம் பிளஸ் வன்முறை மட்டுமே போதுமா?
கோமாளிமேடை குழு
#anana raj #divya pillai #naveen chandra #telugu #crime #thriller #sex #compulsive sex disorder #drugs


கருத்துகள்
கருத்துரையிடுக