டாடா - தேசத்தை வளர்ந்த நிறுவனத்தின் கதை - ஆர்எம் லாலா தமிழில் பிஆர் மகாதேவன்
மறுவாசிப்பு நூல்கள்
டாடா - நிலையான செல்வம்
ஆங்கிலத்தில் ஆர்எம் லாலா
தமிழில் பிஆர் மகாதேவன்
கிழக்கு பதிப்பகம்
மூல நூல் -கிரியேஷன்ஸ் ஆப் வெல்த்
வணிக நூல்
டாடா குழுமம், நூறாண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் இயங்கி வருகிறது. அதாவது அதன் குழுமத்தில் உள்ள பல நிறுவனங்கள் நூற்றாண்டுகளாக இந்தியாவில் தொழிலை நடத்தி வருகின்றன. பார்சி இனத்தவர்களே டாடா குழுமத்தின் இயக்குநர்கள், தலைவர்கள்.
365 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை ஒருவர் வாசிக்கும்போது முதல்முறையிலேயே டாடா குழுமத்தினர் எந்தளவு உயரிய கொள்கை கொண்டு உழைக்கிறார்கள், வணிகம் செய்கிறார்கள் என்ற எண்ணத்திற்கு ஆட்படுவார்கள். நூலை எழுதிய நூலாசிரியர் லாலாவின் நோக்கமும் கூட அதுதான். ஆனால், அவர் டாடா நிறுவனத்தில் வேலையைப் பெற்றுள்ளதும், இந்த நூலுக்கு ரத்தன் டாடா உரை எழுதிக் கொடுத்ததும் நூலை சற்று பின்னுக்கிழுப்பது போல தோன்றுகிறது. இதை நூலை வாசிப்பவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
ஒரு பத்திரிகையாளராக லாலா நூலை எழுதி இருந்தால் அந்த நூலில் டாடா குழுமத்தில் உள்ள பிரச்னைகள், செயல்பாட்டில் உள்ள தவறுகள், அவர்கள் மீது மக்கள் கூறிய புகார்கள், வழக்குகள் என பலவும் பதிவாகி இருக்கும். ஆனால், நிலையான செல்வம் நூலில் டாடாக்கள் அரசு மீது பெரிய குறை ஏதும் சொல்லவில்லை. அரசுகள், அதில் உள்ள அதிகாரிகள் டாடாவினரின் தொழில்முயற்சிகளை தடுத்தனர், அனுமதி தரவில்லை என்பது மாதிரியான தோற்றமே உள்ளது. நாம் இந்த நூல் விமர்சனத்தை எழுதும்போது டாடாவினர் தாங்கள் இழந்த விமான சேவையை மீண்டும் பெற்றுவிட்டார்கள். அவர்களின் ஏர் இந்தியா விமானசேவையில் விபத்தும் நடந்து பல உயிர்கள் பலியான செய்தியை இந்திய மக்கள் படித்தும் இருப்பார்கள். இன்று இந்தியாவுக்கு அரசு விமானசேவை என்பது அதிகாரப்பூர்வமாக இல்லை. ஏர் இந்தியா விபத்தைக் கூட தொழில்விபத்து என கருத்திக்கொள்ளலாம்.
டாடா, முன்னர் அரசால் தேசியமயமாக்கப்பட்ட விமான சேவையை மீண்டும் தனியார்மயமாக்கி தங்கள் வசமாக்கிக் கொண்டனர். இதற்கு மக்களாகிய நாம் வருந்துவதா, டாடா குழுமம் வளர்கிறது என சந்தோஷப்படுவதா?
நிலையான செல்வம் என்ற நூல் தொழில் முனைவோர்களுக்கானது. இதை வாசிக்கும் ஒருவர், தொழிலை தொடங்குவது, அதில் சந்திக்கும் சவால்கள் ஆகியவற்றை பற்றி கவனம் கொள்வார். கூடவே, டாடா தலைவர்கள் பலரின் மேற்கோள்கள் நூலில் பலம் சேர்க்கின்றன. அவற்றை படிக்கும்போது பெரும் ஊக்கம் மனதில் தோன்றுவது உண்மை. இதை லாலா, மொழிபெயர்ப்பாளர் பிஆர் மகாதேவன் ஆகியோரின் வெற்றியாக கூறலாம்.
நூலில் ஜம்சேட்பூர் நூலில் எஃகு உருக்காலை தொடங்குவதே முக்கியப்படி. அதற்கு அடுத்து டாடா ஸ்டீல், டெல்கோ, சோப்பு, சமையல் எண்ணெய் விற்பனை, அழகு சாதனப் பொருட்கள் உருவாக்கம் என பல்வேறு தொழில்களை தொடங்கி இயங்குகிறார்கள். அதில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள், அதிலிருந்து மீண்டது என நிறைய சம்பவங்கள் கூறப்படுகின்றன.
டாடாவினர் தொடங்கும் தொழில்கள், தொழிலாக வளர்ந்து லாபம் ஈட்டுவதோடு தொடங்கும் இடத்தையும் சற்று மேம்படுத்த முயல்கிறார்கள். பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுகிறார்கள். மண்ணின் வளத்தை மேம்படுத்த ஏரிகளை வெட்டுவது, மரக்கன்றுகளை வைப்பது, நோய்களை தீர்க்க தடுப்பூசி போடுவது, கல்வியறிவை மேம்படுத்த இணைய வழியில் பயிற்சி என செயல்பாடுகள் புதுமையாக உள்ளன. முழுக்க லாபத்தை சம்பாதிப்பதை மட்டுமே டாடாவினர் லட்சியமாக கொள்ளவில்லை. அதனால்தான் அவர்களால் டாடா நினைவு மருத்துவமனை, புற்றுநோய் மருத்துவமனை, தேசிய அறிவியல் கழகம் ஆகியவற்றை உருவாக்க முடிந்திருக்கிறது.
டாடாவினர் உருவாக்கிய பல்வேறு நிறுவனங்களைப் போல இன்னொரு வணிக நிறுவனம் உருவாக்க முடியாது. அது உண்மை. நிர்வாக பயிற்சி, தொழில் பயிற்சி நிறுவனங்கள் உண்மையில் அவசியமானவை. வணிக லாபத்தை மட்டுமே கருத்தாக கொண்டிருக்கும் ஒரு நிறுவனம், இதுபோன்ற நிறுவனங்களை தொடங்க மாட்டார்கள். டாடாவினர், தொழிலாளர்களின் வேலைநேரத்தை எட்டுமணிநேரமாக மாற்றியது முக்கியமான சீர்திருத்தம். அதாவது அரசின் தொழிலாளர் அமைச்சு கூறாததற்கு முன்னதாகவே அவர்கள் தங்களை எட்டுமணி நேர வேலைக்கு மாற்றிக்கொண்டுவிட்டனர். இதற்கு டாடாவினர் அயல்நாட்டில் படித்து அங்குள்ள விஷயங்களை புரிந்துகொண்ட அனுபவம் என கொள்ளலாம்.
டாடாவினர் வேலைக்கு எடுக்கும் முக்கிய ஆட்கள் பலரும், டாடாவின் கல்வி உதவித்தொகையைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் நிறுவன இயக்குநர் தேர்வும், பணியாளர் தேர்வும் எளிமையாக இல்லை. தர அளவுகோல் துல்லியமாக உயர்ந்தும் உள்ளது. டாடாவினர் தங்களது தொழிலை சிறப்பாக செய்ய முனைந்தனர். அதற்கு தேவையாக உள்ள பல்வேறு சிறு நிறுவனங்களை உருவாக்க வேண்டியிருந்தது. எனவே, அதற்காகவே பொறியாளர்கள், வல்லுநர்களை வைத்து பயிற்சி கொடுக்கத் தொடங்கினர். இதுதான் அவர்களது முக்கியமான வழிமுறை. இதன் வழியாக திறமை மிக்க தொழில் வல்லுநர்கள் உருவாயினர்.
தமிழ்நாட்டில் டைட்டன் நிறுவனம் தொடங்கப்பட்ட செயல்பாடு படிக்க நன்றாக உள்ளது. அரசு - தனியார் நிறுவன கூட்டில் நிறுவனம் சிறப்பாக லாபம் பெற்று வளர்ந்து வருகிறது. இதற்கு அன்றைக்கு டிட்கோவின் தலைவராக இருந்த திரு ஐராவதம் மகாதேவன் உதவியிருக்கிறார். இன்று டாடா நிறுவனம் பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தி டாடா நியூ என சூப்பர் ஆப்பை அறிமுகப்படுத்தி முன்னேறி வருகிறது.
லாலா எழுதிய நூல் டாடாவினரை மக்கள் நல்ல முறையில் நேர்மறையான வகையில் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது. எனவே, டாடா இயக்குநர், தலைவர்கள் கூறிய அனைத்து கருத்துகளும் நூலில் பதிவாகவில்லை. நூலை வாசிப்பவர்கள் டாடா பொருட்களை வாங்கவேண்டும், அவர்களை நல்லவிதமாக எண்ணவேண்டும் என்பதே நூலாசிரியர் நோக்கம். அவரின் எழுத்தும் அதை மொழிபெயர்த்த பிஆர் மகாதேவன் அவர்களும் அதை உறுதி செய்கின்றன. ஆனால், டாடாவினர் செய்த தொழில், அதற்கு மக்களின் எதிர்வினை பற்றியும் அறிவது உண்மையின் இன்னொரு கோணத்தைப் பார்க்க உதவும். டாடாவினர் பற்றிய நூலை டாடா குழுமம் ஏற்கவேண்டுமென்ற அவசியம் இல்லை. அவர்களின் வரலாறு பற்றிய நூலில் நல்லவை அல்லவை என இரண்டுமே இடம்பெற வேண்டும். அப்போதுதான் அந்த குழுமத்தைப் பற்றி வாசகர்கள் முழுமையாக அறிய முடியும்.
நூலாசிரியர் டாடா குழுமத்தில் வேலை செய்தவர் என்பதை கவனத்தில் கொண்டே நூலை வாசிக்க வேண்டியதிருக்கிறது. அதுதான் நூலின் பெரிய பலவீனம். டாடா குழுவினர், நாட்டில் நிலவிய அரசியல் நிலைமைகளுக்கு என்னவிதமாக எதிர்வினை புரிந்தனர் என்பதை முழுமையாக எழுதாமல் விட்டுவிட்டனர். அரசியலுக்கும் தொழிலுக்கும் நிறைய தொடர்பு உண்டு அல்லவா? அதை எழுதினால் ஏதாவது சிக்கல் வரும் என நினைத்தார்களோ என்னவோ?
வணிக ரீதியாக நூலை எழுதுவது எப்படி, குறிப்பிட்ட நிறுவனத்தை ஊக்கம் கொண்டதாக காட்டுவது, பலரின் ஊக்கமூட்டும் மேற்கோள்களை சரியான இடத்தில் அமைப்பது என தொழில்முறையான எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது. வாசகர்களைப் பொறுத்தவரை டாடா குழுவினர் எப்படி சவால்களை சந்தித்து முன்னேறினர் என்பதை அறிவதே வியப்பாகவும், ஊக்கமூட்டுவதாகவும் இருக்கும். நூலில் சில இடங்களில் டாடாவினர் செய்த சமூகப்பணிகள், ஆனால், அதற்கு மக்கள் காட்டிய எதிர்மறையான செயல்பாடு பற்றி கூறப்படுகிறது. டாடா குழுமம், தனது நோக்கம் பற்றி எப்படி கூறினாலும் அடிப்படையில் லாபத்தை அடிப்படையாக கொண்ட தனியார் நிறுவனம். கல்வியறிவு போன்ற விவகாரங்களை அரசு செய்வது போல செய்வது கடினம். இதுபோல சம்பவங்களைக் கூறி டாடாவினர் தங்களது புத்திசாலித்திறன், தொலைநோக்கு, திட்டமிடுதல் ஆகியவற்றை அரசு அமைப்போடு ஒப்பிடுவது எதற்கு? ஒப்பீடுகள் அர்த்தமில்லாத ஒன்று. நிறுவனத்தை நிர்வாகம் செய்வது போல நாட்டை அரசு நிர்வாகம் செய்ய முடியாது என்பதை டாடா குழுவினர் அறியமாட்டார்களோ?
டாடாவினர் பற்றி மக்கள் நல்லவிதமாக அறிந்துகொள்ள உதவும் நூல்.
கோமாளிமேடை குழு
நூலை அன்பளிப்பாக வழங்கிய பத்திரிகையாளர் கேஎன்எஸ் அவர்களுக்கு நன்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக