எதிர்காலத்தை சொல்லும் சிறுவனால் தீரும் கொலை மர்மம்!
மறுவாசிப்பு 2(2025)
சித்திரமும் கொல்லுதடி
டிடெக்டிவ் ராபின் - மார்ட்டின்
முத்து காமிக்ஸ்
க்ரைம் திரில்லர் காமிக்ஸ்
விலை ரூ.10
கருப்பு வெள்ளை காமிக்ஸ். அமெரிக்காவின் நியூயார்க்கில் மழைபெய்யும் நாளன்று ஒரு பெண் கதவைத் திறக்கிறாள். யாரோ ஒருவர் உள்ளே நுழைகிறார். அத்தோடு அந்த காட்சி முடிந்துவிடுகிறது. மர்மக் கதைக்கு பொருத்தமான காட்சி. அடுத்த நாள், பின்னி என்ற கட்டை குட்டை தோற்றத்தோடு தொழிலதிபர், கிம் என்பவளைப் பார்க்க பூங்கொத்தோடு வருகிறார். லாஸ்கி என்ற கார் மெக்கானிக், கிம் காசுக்காக என்னவேண்டுமானாலும் செய்வாள், உங்களிடம் உள்ள காசுதான் அவளை மயக்குகிறது என வன்மத்தோடு பேசுகிறான். பின்னியைப் பொறுத்தவரை அவர் நியூயார்க்கிற்கு தொழில் விஷயமாக வந்தாலும் கிம் என்ற பெண்ணோடு கொண்டுள்ள காதல், பாலுறவு ஒரு போதையாக மாறியிருக்கிறது. அவளை மணந்துகொள்ளலாமா என்று கூட யோசித்துக்கொண்டே நடைபோடுகிறார்.
அவர் கிம்மின் வீட்டுக்கு படியேறுகிறார். லாஸ்கி பொறாமையில் பேசுவதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. திறந்திருந்த கதவை தள்ளியபடி உள்ளே நுழைகிறார். படுக்கை அறைக்கு சென்று பார்த்தால் கிம் தலையில் அடிபட்டு இறந்து கிடக்கிறாள். பின்னி அதிர்ச்சியாகி, பதற்றத்துக்குள்ளாகி குடியிருப்பை விட்டு வெளியேறி வந்து லாஸ்கியின் காரேஜில் தஞ்சமடைகிறார். போலீசில் புகார் கொடுக்கிறார். இங்கிருந்துதான் கதை தொடங்குகிறது.
கதை க்ரைம் திரில்லர் என்றாலும் அமானுஷ்ய திரில்லர் என்றுதான் கூறவேண்டும். கதையை மாற்றும் நபரே கிம் இறந்து கிடந்த குடியிருப்புக்கு அருகில் குடியிருக்கும் எப்ரம் என்ற உடல் மன வளர்ச்சி குன்றிய சிறுவன்தான். அவன், தான் கிம் இறந்த விவகாரம் தொடர்பாக போலீசிடம் பேச விரும்புகிறான். அவனது அம்மாவிற்கு மகனை யாராவது சிக்கலில் மாட்டிவிட்டுவிடுவார்களோ என்று கவலை. அதற்கும் காரணம் இருக்கிறது. எப்ரம், எதிர்காலத்தை முன்னரே கூறும் திறன் கொண்டவன். ஒருவரின் கைகளைத் தொட்டாலே போதும் அவர்களின் எதிர்காலம் அவனுக்கு மனக்கண்ணில் தெரியும். உடல் மனம் வளரவில்லை. குழந்தை மனம்தான். ஆனால் வயது இருபத்தைந்து ஆகிவிட்டது.
தனது மகன் கூறியதால் டிடெக்டிவ் ராபினிடம் அம்மா திருமதி பெர்ஜன் வந்து பேசுகிறாள். முதலில் ராபினுக்கு எதற்கு மகனின் ஈஎஸ்பி பவர் பற்றி தன்னிடம் பேசுகிறார்கள் என குழம்புகிறார். எப்ரம் சொன்ன தகவல்களிலிருந்து கிம் என்ற பெண் விலைமாது. அவள் ராண்டால்ப் என்ற தொழிலதிபரிடம் மிகுந்த நெருக்கம் கொண்டிருந்தாள் என அறிகிறார். அதேசமயம் அவளின் கார் காணாமல் போயிருந்த தகவலும் இன்னொரு காவல்நிலையம் வழியாக தெரிய வருகிறது. ராண்டால்ப் பற்றி விசாரிக்கையில் அவரது கூட்டாளி சாலை விபத்தில் குறிப்பாக நடைபயிற்சி செய்யும்போது கார் மோதி இறந்துபோனார் என்ற தகவலும் கிடைக்கிறது. குறிப்பாக மோதிய கார் திரும்ப வந்து மேலேறி நசுக்கிவிட்டு செத்தாரா என உறுதி செய்துவிட்டு போனது வித்தியாசமாக தோன்றுகிறது.
கிம்முடைய வீட்டுக்கு எப்ரம் அடிக்கடி போவதுண்டு. மனவளர்ச்சி இல்லாத பையன் என்பதால் கிம்மும் பெரிதாக அவனை கண்டுகொள்வதில்லை. அப்படி போகும்போது நிலைமை மாறுகிறது. காதலர் ராண்டால்ப் செய்யப்போகும் கூட்டாளியின் கொலை பற்றி எப்ரம் படம் வரைந்து கொடுக்கிறான். அதுவே ராண்டால்ப்க்கு பதற்றம் கொடுத்து கோபமூட்ட கிம்மிடம் சண்டை போடுகிறார். எப்ரம் சொன்ன தகவல், அவன் வரைந்த படங்கள் ராபினுக்கு குழப்பத்தை உருவாக்குகிறது. கிம்மைக் கொன்றவன் பெரிதாக இருந்தான் என்று எப்ரம் கூறுகிறான். அவன் வரைந்த படங்களில் கிம், அவளின் கார், கூட்டல் குறி இருக்கிறது. இன்னொரு படத்தில் சவப்பெட்டி, ராண்டால்ப், கைவிலங்கு உள்ளது. இதெல்லாமே மெல்ல ராபினுக்கு புரிபடுகிறது.
ஆனால் தொழிலதிபர், கிம்மின் காதலர் ராண்டால்பை நெருங்க ஆதாரம் இல்லை. அதற்கு முன்னால் பின்னிக்கு பதிலாக லாஸ்கி பேசும் பேச்சு ஒருவித சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. ஆனால் ராபினுக்கு எரிச்சல் மட்டுமே வருகிறது. அங்கு அவருக்கு சந்தேகம் வந்தால் கதை அத்தோடு முடிந்துவிடுமே? எப்போதும் போல இந்தக் கதையிலும் ஆப்பிரிக்க அமெரிக்க மார்வின் அசட்டு காமெடிக்குத்தான் பயன்படுகிறார். எதையும் கண்டுபிடிப்பதாக காட்டவில்லை.
துப்பறிவாளர்கள் ராண்டால்பை சென்று பார்க்கிறார்கள். ஆனால், அவர் கிம்மை விலைமாதாகவே பார்க்கிறார். காதல் என்ற வலையில் வீழ்த்தி தன் கையை கறைபடாமல் வைத்து இருட்டு காரியங்களை செய்துகொள்கிறார். அவர் கௌட்ரி என்ற கூட்டாளியை கொன்றால் கிடைக்கும் லாபம் பற்றி முன்னமே ராபின்- மார்வின் அறிந்திருக்கிறார்கள். தொடக்கத்திலேயே ராண்டால்ப் சட்டத்தை மீறி வணிகம் செய்பவர். ஆனால், அவர் தான் கிம்மை கொல்லவில்லை. நண்பரும் கூட்டாளியான கௌட்ரியையும் கொல்லவில்லை என்று சாதிக்கிறார். இதற்கான ஒரே ஆதாரம். கௌட்ரியை காரை ஏற்றிக் கொன்றது யார் என்பதற்கான பதில்தான். ஆனால் கார் கிடைத்த பாடில்லை.
விலைமாது கிம் காரை கொண்டுபோய் கொலை செய்துவிட்டு காரை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டு, உள்ளூரில் கார் காணாமல் போனதாக புகார் கொடுத்தால் காவல்துறை என்ன செய்யும்? அங்குதான் ராபினுக்கு பொறிதட்டுகிறது. கௌட்ரியை கொலை செய்த காரும், காணாமல் போன கிம்மின் காரும் ஒன்றாக இருக்குமோ என யோசிக்கிறார். பிறகுதான் காரை போலீசார் கண்டுபிடித்து தகவல் சொல்கிறார்கள். அதைப் போய் பார்த்தால் எப்ரம் சொன்ன விஷயங்கள் நினைவுக்கு வருகிறது. ராபின் ஒரு டயர் மட்டும் பிற டயர்களோடு ஒப்பிடுகையில் தேய்மானம் அடைந்திருப்பதில் சந்தேகம் கொள்கிறார். பிறகு, அந்த நேரத்தில் இன்னொரு மனநலம் சரியில்லாத குற்றவாளி தான்தான் பாவம் செய்த கிம்மை கொலை செய்தேன் என்கிறான். வசதியாக போயிற்று என நாளிதழ் நிருபர் பெண்ணை அழைத்து, இப்படிக்கு கிம்மின் கொலையாளி பிடிபட்டுவிட்டான். அதை தலைப்பு செய்தியாக போடுங்கள் என்கிறார் ராபின்.
பழைய ட்ரிக்தான். ஆனால் இங்கே ஒர்க்அவுட் ஆகிறது. ராண்டால்ப் காரை போலீஸ் கண்டுபிடித்திருப்பதைக் கூட புரிந்துகொள்ளாமல் காரை டிஸ்போஸ் செய்ய முயல்கிறார். அதற்காக காத்திருக்கும் ராபின் - மார்வின், ராண்டால்பை தாக்கி வீழ்த்துகிறார்கள். கௌட்ரியை கிம்மை வைத்து கார் ஏற்றி கொன்ற திட்டத்தை தான்தான் போட்டு்க்கொடுத்ததாக ஒப்புக்கொள்கிறார். ஆனால் கிம்மை தான் கொல்லவில்லை என சாதிக்கிறார். அங்கு கார் டயரை மாற்றிக் கொடுத்தது யார் என்று ராபினுக்கு யோசனை வருகிறது.
இதில், அவள் வீட்டுக்கு யார் வந்தாலும் கீழே இருந்து பார்த்துக்கொண்டிருப்பேன் என லாஸ்கி சொல்வது நமக்கே நினைவுக்கு வருகிறது. ஆனால் ராபினுக்கு நினைவுக்கு வருவதில்லை. பிறகு சந்தேகம் ஏற்பட்டு அவர், லாஸ்கியின் காரேஜூக்கு போகிறார். அங்கு பழைய டயர்களை தேடிப் பார்த்தால் ஒரு டயரில் உடைந்த கண்ணாடித்துண்டு இருக்கிறது. அதற்குள் அந்த இடத்திற்கு லாஸ்கி ரென்சுடன் வந்துவிட அதகள ஆக்சன் என்று எஸ் விஜயன் போல சொல்ல ஆசை. படுமோசமான ஆக்சன் அது. ராபின் அடிவாங்கி கீழே விழுகிறார். லாஸ்கியின் ஷூ கால்களில் உதைபடுகிறார். இறுதியாக எப்ரம் உதவியால் உயிர் தப்புகிறார். இதுதான் கதை.
கதையை நடத்திச் செல்வது எப்ரம் என்ற உடல், மன வளர்ச்சி இல்லாத சிறுவன்தான். தெளிவும், தெளிவும் இல்லாத பாத்திர வடிவமைப்பு கொண்டதுதான் எப்ரமுடையது. அவனுக்கு கிம்மின் பாசம் தேவைப்படுகிறது. ஆனால் அதைப்பெற கரன்சி தாளை நீட்டுகிறான். அம்மா அவனுக்கு கிம்மை பற்றி தவறாக கூறியதால் அப்படி பேசுகிறான். அதேநேரம் லாஸ்கி மூலம் ஆபத்து வருகிறது என்பதை அவனால் நேரடியாக சொல்லமுடியவில்லை என்றாலும் ஓவியமாக வரைந்து காட்டுகிறான். இறுதியாக அவன்தான் லாஸ்கியை கொல்கிறான். ஒருவகையில் அவனுக்கு பிடித்த கிம் என்ற இளம்பெண்ணை கொன்றவனை பழிவாங்குகிறான்.
விலைமாது கிம், தனது பழைய கடந்த காலத்தை விட்டுவிட்டு திருமணம் செய்துகொள்ள முயல்கிறாள். அப்படி முயல்கிறாள். அதுவும் கூட அவளை தவறாக பயன்படுத்திக்கொள்ள முயலும் ராண்டால்ப் மூலம் நடக்கிறது. அவனது இரட்டை முகத்தை அவளால் புரிந்துகொள்ள முடிவதில்லை. லாஸ்கி, கிம்மை அனுபவிக்க துடிக்கும் ஆள். டயரை மாற்றிவிட்டு வந்தவனை திருப்திபடுத்த காசு கொடுக்கிறேன் என்ற கிம் சொல்கிறாள். அவனோ, உன் உடம்புதான் வேண்டும் என மிரட்டுகிறான். இறுதியில் கிம் ஸ்பேனரால் தலையில் அடித்து மண்டை பிளந்து கொல்லப்படுகிறாள்.
சித்திரமும் கொல்லுதடி தலைப்பு எழுத்துரு தெளிவாக இல்லை. எப்ரம் வரைவது போலவே தலைப்பை உருவாக்க நினைத்த நோக்கம் சரி. ஆனால், அது எடுபடவில்லை. கதையில் ஆக்சன் குறைவு. புலனாய்வு மட்டும்தான் இருக்கிறது. தலைவர், கேப்டன் ஆகியோருடனான அலுவலக உரையாடல் பரவாயில்லை. சமர்த்தோல்லியோ என பிராமண உரையாடல்கள் திடீரென காமிக்ஸில் எதற்கு வருகிறது? மொத்தத்தில் சுமாரான கதை.
-கோமாளிமேடை குழு
#டிடெக்டிவ் ராபின் #மார்வின் #க்ரைம் திரில்லர் #கொலை #புலனாய்வு #முத்துகாமிக்ஸ் #லயன்காமிக்ஸ் #பிரகாஷ் பப்ளிஷர்ஸ் #சிவகாசி #ஈஎஸ்பி
#detective robin #marvin #crime thriller #murder #investication #lionmuthucomics #muthucomics #tamil #comics #bookfair #prakash publishers #sivakasi
கருத்துகள்
கருத்துரையிடுக