டெக் நிறுவனங்கள் எப்படி தனி மனிதர்களை உளவு பார்க்கின்றன தெரியுமா?

 











உளவு பார்க்கும் ஆயிரம் கண்கள்!


உலகம் முழுக்க செயல்படும் பன்னாட்டு டெக் நிறுவனங்கள், தகவல் சுதந்திரத்திற்கு ஆதரவாக நின்றாலும் பல்வேறு வழிகளில் அவர்களை கண்காணிக்கத் தொடங்கியுள்ளன. 

ப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே குறிப்பிட்ட நாடுகளிலுள்ள தகவல் பாதுகாப்பு சட்டப்படி தங்களை வடிவமைத்து வருகின்றன. இதில் வாடிக்கையாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு கொஞ்சம் உத்தரவாதமான நிறுவனம் என  மக்கள் நினைப்பது ஆப்பிளைத்தான். ஆப்பிள் இயக்குநர் டிம் குக், பாட்காஸ்ட் ஒன்றில் பேசியபோது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தள மாடலில் விளம்பரங்கள் மூலமாக வருமானம் அதிகம் கிடைக்கிறது. எனவே அவர்களால் மக்களின் தகவல்களைப் பாதுகாக்க முடியாது என்று கூறினார். இப்படி நேரடியாகவே விமர்சிப்பதை ஜனநாயகம் என ஏற்கலாம். ஆனால், ஆப்பிள் தகவல் பாதுகாப்பு கொள்கைகளை உலகம் முழுக்க மாற்றியமைத்துள்ளது. மக்களை கண்காணிப்பதை ஆப்பிள் இன்னும் மறைமுகமாகவே செய்யத் தொடங்கியுள்ளது. ஆப்பிள் ஐஓஎஸ் 15இல் புகைப்படத்தில் உள்ள எழுத்துகளை நகல் எடுத்து இன்னொரு இடத்தில் பதியமுடியும். படத்திலுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ள முடியும்.  குறிப்பிட்ட இடத்தை ஸ்கேன் செய்தால், ஐபோன் நீங்கள் உள்ள இடத்தை கண்டுபிடித்து செல்லவேண்டிய இடம் பற்றிய தகவல்களைச் சொல்லும். 

வீடியோவில் உள்ள  பொருட்களை எளிதாக அடையாளம் காணுவதோடு, அதனை 3டி மாடலாகவும் மாற்றலாம். இதனை ஆக்மென்ட் ரியாலிட்டி முறையில் பயன்படுத்தலாம். இதற்கும் மேல் கூடுதலாக  ஆப்பிள் போன், வாட்ச் ஆகியவற்றின் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை எளிதில் சேகரிக்க முடியும். இதிலுள்ள முக்கியமான தகவல்களை குடும்ப உறுப்பினர்களுக்கு பகிர முடியும். இத்தகவல்கள் வெளியே கசிந்தால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாது. முகமறிதல் தொழில்நுட்பத்தை ஃபேஸ்ஐடி மூலமும், ஏர் டேக் மூலம் வாடிக்கையாளர்கள் எங்கு செல்கிறார்கள் என்றும் ஆப்பிள் கண்காணிக்கிறது. 

குழந்தைகளை தாக்குவதைத் தடுக்க மென்பொருளை உருவாக்கியுள்ளது. இதன் வழியாக ஒருவரின் கருவிக்கு உள்ளே உள்ள புகைப்படங்களை பார்க்க முடியும். ஆண்ட்ராய்டை விட  ஆப்பிள் ஐஓஎஸ் பாதுகாப்பானது என  வாதிடப்படுகிறது. ஆப்பிள் மக்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்துவதோடு, அவர்கள் மீதான கண்காணிப்பையும் அதிகரித்து வருகிறது. போனில் பதிவாகும்  அழைப்புகள், பயோமெட்ரிக் தகவல்கள் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுமட்டுமே ஆப்பிளின் சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு நிம்மதி தரக்கூடிய செய்தி. ஆப்பிள் என்பது எடுத்துக்காட்டாக கூறப்பட்டாலும் பிற டெக் நிறுவனங்களும் இதே பாதையில் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கின்றன. 

தகவல் பாதுகாப்புடன், தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமெனில் கேமரா, மைக்ரோபோன் ஆகியவற்றை நாமே  மறைக்க அல்லது அனைத்து வைக்கும் வசதி தேவை. அதற்கான வசதிகளை பற்றி பேசாதபோது, டெக் நிறுவனங்களின் உள்நோக்கங்கள் வணிகத்தின் மீதே உள்ளது என புரிந்துகொள்ளலாம். 


தகவல்

Big tech preaches privacy it doesnot actually practise by carissa veliz

wired november 2021

கருத்துகள்