ஆக்டோபஸை எதிர்க்கும் சூசைட் ஸ்குவாட்! - ரத்தம் தெறிக்கும் அவல நகைச்சுவைப் படம்!

சூசைட் ஸ்குவாட் 2021 இயக்குநர் ஜேம்ஸ் குன் முதல் படத்தில் வில் ஸ்மித் நடித்திருப்பார். இந்த படத்தில் இட்ரிஸ் எல்பா அந்த கேரக்டரை எடுத்துக்கொண்டு அட்டகாசப்படுத்தியிருக்கிறார். படத்தில் நினைத்து நெகிழ எந்த காட்சிகளும் கிடையாது. அனைத்து காட்சிகளுமே கொண்டாடியபடி பார்க்கவேண்டியதுதான். சூசைட் ஸ்குவாட்டிற்கு இம்முறை ஒரு நாட்டுக்கு சென்று அங்கு நடைபெறும் ஸ்டார்ஃபிஷ் என்ற திட்டத்தை அழிக்க வேண்டிய திட்டம் வழங்கப்படுகிறது. எப்போதும் போல தேசியவாத தலைவர், கைதிகளை மிரட்டி இந்த திட்டத்தில் இணையச்செய்கிறார். பிளட்ஸ்போர்ட், பீஸ்மேக்கர், டாட் மனிதன், கிங் ஷார்க், ராட் கேட்சர் 2 என்ற பெண் என வினோதமான பழக்கம், திறன்களைக் கொண்டவர்கள் இணைகிறார்கள். இவர்கள் எல்லோரும் கார்ட் மால்டிஷ் என்ற தீவுக்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு முன்னர் சென்றவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். இதற்கு ஸ்குவாட்டில் உள்ள துரோகியே முக்கியமான காரணம். அதில் பிழைக்கும் கேப்டன் பிளேக் என்பவரும் பிளட் ஸ்போர்டும் இணைந்து மால்ட்டிஷ் தீவுக்கு போய் திங்கர் என்ற ஆய்வாளரை மிரட்டி எப்படி ஸ்டார்ஃபிஷ் திட்டத்தை அழிக்கிறார்கள் என்பதை ரத்தம் தெறிக்க அவல நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்கள். ஜாவ்லின் சூப்பர் ஹீரோ இறக்கும்போது ஈட்டி ஒன்றை ஹார்லி குயினுக்கு கொடுக்கிறான். நெகிழ்ச்சியான காட்சி போல எடுத்து காமெடி செய்து சிரிக்க வைக்கிறார்கள். இப்படி படம் நெடுக ஏராளமான ஆக்சன் காட்சிகளோடு சிரிப்பும் வரும்படி காட்சிகள் உள்ளன. அமெரிக்காவின் தேசியவாத கருத்தையும் கூட கடையில் காமெடி செய்து மனிதநேயம் முக்கியம் என சொல்லி தீர்வு சொல்லியிருக்கிறார்கள். உண்மையில் டிசியின் தைரியமே அதன் அரசியல் நிலைப்பாடுகள்தான். மார்வெல் புனைவாக படங்கள் எடுப்பதற்கும், டிசி இப்படி அரசியல் கலந்து எடுப்பதற்கும் வணிகம்தான் காரணம் என சிலர் கூறலாம். ஆனால் அது உண்மையல்ல. குரூரமான காட்சிகளை கூட அழகியலாக காட்ட இயக்குநரும், சிஜி குழுவும் மெனக்கெட்டிருக்கிறது. தீவில் மாளிகையிலிருந்து ஹார்லி குயின் தப்பிக்கும் காட்சி இதற்கான உதாரணம். ரத்தம் பூக்களாக மாறிவரும். மார்வெல்லை விட டிசி காமிக்ஸ், படங்களில் பாத்திரங்கள் கொஞ்சம் இயல்பாக இருக்கிறார்கள். அதுதான் இந்த படத்தையும் பார்க்கும்படி செய்கிறது.

கருத்துகள்