பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானாக முன்வந்து உதவும் ஆனந்த்! - திருச்சி தன்னார்வத் தொண்டர் கதை!

 







சூரியன் வானில் வெளிச்சம் காட்டியபோதும் கூட சிகே ஆனந்தின் பணி நிற்கவில்லை.  அவரது போன் அழைப்புகள் வந்துகொண்டு இருந்தன. மழைப்பொழிவால் நீரில் மூழ்கிய பல்வேறு இடங்களிலிருந்து உதவி கேட்டு அழைக்கும் அழைப்புகள்தான் அவை. படகு வேண்டும், உணவுக்காக காய்கறிகள் வேண்டும் என குரல்கள் ஏதேனும் உதவிகளை கோரியபடி இருந்தன. 

அத்தனை அழைப்புகளையும் சமாளித்து காய்கறிகளை தேவையான உதவிகளை ஆனந்த் வழங்கிக்கொண்டே இருந்தார். முப்பது வயதான ஆனந்த், தன்னையொத்த உதவும் மனம் கொண்ட தன்னார்வலர்களின் குழுவை ஒருங்கிணைத்து மேற்சொன்ன அழைப்புகளுக்கு வரும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார். வெள்ள பாதிப்பு பிரச்னை ஏற்பட்டபோது காலை ஏழுமணி தொடங்கி நள்ளிரவு வரை பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தது இக்குழு. 

கருமேகங்கள் திருச்சி நகரை சூழ்ந்தபோது, லிங்கம் நகர், அருள் நகர், செல்வம் நகர், ராஜலட்சுமி நகர் ஆகிய இடங்களிலிருந்து உதவி கோரி அழைப்புகள் வந்தன. உடனே தன்னுடைய பகுதியை சேர்ந்த சில இளைஞர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றார் ஆனந்த்.

முதலில் முக்கொம்பு பகுதிக்கு போனவர், அங்கு மக்களுக்கு தேவையான தினசரி வாழ்க்கைக்கான பொருட்களை சேகரித்து வழங்கினார். பால், கோதுமை, நூடுல்ஸ், சேமியா, பிரெட் உள்ளிட்டவற்றை வழங்கினார். முடிந்தவரை அதிக மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே ஆனந்தின் கொள்கையாக இருந்தது. 

கேபிள் தொழிலை நடத்தி வரும் ஆனந்த் சமூகம் சார்ந்த பணிகளில் அக்கறையாக ஈடுபட்டு வருகிறார். இதனாலே அங்குள்ள மக்களின் மனதில் எப்போதும் அவருக்கென தனியிடம் உண்டு. கஜா புயல் வந்தபோது, ஆனந்தின் மக்கள்சேவை தொடங்கியது. அதற்குப் பிறகு எப்போது மக்களுக்கு இயற்கைப் பேரிடர்கள், ஆபத்துகள் ஏற்பட்டாலும் ஆனந்தின் தன்னார்வக்குழு அங்கு வந்துவிடும். 

சில மாதங்களுக்கு முன்னர் டெங்கு மலேரியா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியபோது மக்களின் வீடுகளுக்கு கொசுவலையை தன்னுடைய சொந்தப் பணத்திலேயே அடித்துக்கொடுத்துள்ளார் ஆனந்த். வெள்ள பாதிப்பில் பாதிக்கப்பட்ட மக்களில் 500 பேரை தனது குழுவினர் மூலம் மீட்டுள்ளார். 

பத்திரிக்கைக்காக பேட்டி கொடுப்பதற்கு கூட ஆனந்த் நிற்கவில்லை. அந்தளவு உதவி கோரி ஏராளமான குரல்கள் அவருக்கு போனில் வந்துகொண்டிருந்தன. கூடுதலாக அவரை நேரில் சந்தித்து உதவிகளைக் கேட்கவும் மக்கள் வந்துகொண்டிருக்கின்றனர். சிலர் அவரை வாழ்த்தவும் வருகிறார்கள். 



 


 


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

சௌம்யா மணி




கருத்துகள்