ஜெர்மனியின் அம்மா! - ஏஞ்சலா மேர்கல்

 



ஏஞ்சலா மேர்கல்




ஏஞ்சலா மேர்கல்

முன்னாள் ஜெர்மனி அதிபர்


தமிழ்நாட்டில் அம்மா எப்படியோ ஜெர்மனிக்கு ஏஞ்சலாதான் அம்மா. அந்தளவு செலவாக்கு பெற்றவர். ஐரோப்பிய யூனியன் என்ற அடையாளத்திற்கு ஜெர்மனியின் ஏஞ்சலாவும், பிரான்சின் மேக்ரானும்தான் தூதுவர்களாக இருந்தார்கள். 

1954ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று ஏஞ்சலா மேற்கு ஜெர்மனியின் ஹாம்பர்க் என்ற இடத்தில் பிறந்தார். 2005ஆம் ஆண்டு ஜெர்மனியின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரர். 

இவரது பெற்றோர் பெயர் ஹார்ஸ்ட், ஹெர்லிண்ட் காஸ்னர். கணிதம், ரஷ்யமொழி ஆகியவற்றில் தேர்ந்தவர். கார்ல்மார்க்ஸ் பல்கலையில் இயற்பியல் படிப்பில் பட்டம் பெற்றார். 1986ஆம் ஆண்டு பிசிக்கல் கெமிஸ்ட்ரி பாடத்தில் முனைவர் பட்டம் வென்றார். 1989ஆம் ஆண்டு பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. அந்த சமயத்தில் டெமோக்ரடிக் அவேக்கனிங் என்ற கட்சியில் சேர்ந்தார். 1990ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று, பண்டேஸ்டாக் எனும் நாடாளுமன்றத்தில் உறுப்பினரானார். 

பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான துறையின் அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு ஏஞ்சலாவுக்கு சூழல் அணு பாதுகாப்பு துறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. பின்னாளில் அதாவது 2000ல் கிறிஸ்டியன் டெமோக்ரடிக் யூனியன் என்ற கட்சியின் பொதுசெயலாளரானார். 

2005ஆம் ஆண்டு தொடங்கி நடப்பு ஆண்டு வரை நான்கு முறை ஜெர்மனியின் அதிபராக பதவி வகித்திருக்கிறார் ஏஞ்சலா. அங்கு அதிபரை சான்சலர் என்று அழைக்கின்றனர். பொருளாதார இடர்ப்பாடுகளிலிருந்து நாட்டை வலிமையான பொருளாதார பாதைக்கு அழைத்துச் சென்றவர் என்று இவரைக் கூறலாம். கரிம எரிபொருட்களை கைவிட்டு மாற்று சக்தியை தேடுவதற்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தினார். மேலும் 1.7 மில்லியன் அகதிகளுக்கு அன்போடு அடைக்கலம் கொடுத்த கருணையாளர். இன்று ஐரோப்பிய நாடுகள் பலவும் அகதிகளை தடுக்க எல்லையில் கம்பி வேலிகளை அமைத்து வருகின்றன. அப்போதும் ஏஞ்சலாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அதைப்பற்றி அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. 

கடந்த பத்தாண்டுகளாக உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் முதல் இடத்தில் இருப்பது இந்த ஜெர்மனி அம்மாதான். வரலாறுக்கு கருணை இருந்தால் நிச்சயம் உங்களை மறக்காது ஏஞ்சலா மேர்கல் அம்மா. 

டெல் மீ வொய் இதழ் 



கருத்துகள்