சூழல் சார்ந்த கவனம் கொள்ளும் இளைய தலைமுறை - ஆதித்ய தாக்கரே- மகாராஷ்டிரம்

தாக்கரே குடும்பத்தில் அடுத்த அரசியல் வாரிசு, ஆதித்ய தாக்கரே. தேர்தலில் வென்றுவிட்டு சுற்றுச்சூழல் அமைச்சராகியிருக்கிறார். குடும்ப அரசியல் என்றாலும் கூட சூழல் குறித்த அக்கறை கொண்டவராக இருக்கிறார். அதுவே இவரைப் பற்றி நாம் இங்கே எழுதுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கடந்த டிசம்பர் 13 முதல் சூழல் சார்ந்த பாடத்தை பள்ளிக்கல்வியில் கொண்டு வர முயற்சிசெய்து வென்றிருக்கிறார். மஜிதி வசுந்தரா என்பது இதன் பெயர். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருந்தபோது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்யவேண்டும் என கோரிக்கை எழுப்பியவர் ஆதித்யா. பின்னர், அப்பா முதல்வர் ஆன பிறகு சூழல் அமைச்சகத்தின் தலைவராக ஆனார். பிறகுதான் தனது ஆட்டத்தைத் தொடங்கினார். மின் வாகனங்களை மும்பை சாலைகளில் ஓட்டுவதை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டார். கவிதை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். கவிதை நூல் ஒன்றை பதிப்பித்துள்ளார். தனியாக ஆல்பம் ஒன்றை தயாரித்தவர், அதில் எட்டு பாடல்களையும் தானே எழுதியுள்ளார். சுற்றுலாவை அதிகரிக்கவும் ஏராளமான திட்டங்களை மனதில் வைத்திருக்கிறார். ஹோட்டலை தொடங்க இதற்கு முன்னர் 70 முதல் 100 அனுமதிகளை வாங்க வேண்டும். இப்போது அதனை ஒரே அனுமதியாக மாற்றியுள்ளார். விவசாய சுற்றுலா, சாகச சுற்றுலா என பிரித்து வைத்து பல்வேறு முயற்சிகளை செய்வதால் சுற்றுலா தொடர்பான மாநிலத்தில் அடிப்படை கட்டமைப்புகள் முன்னேற வாய்ப்புள்ளது. துறைமுகங்களை அமைப்பது, கடற்புரங்களை, காடுகளை மேலும் மேம்படுத்துவது ஆகியவற்றை சுற்றுலா அதிகாரிகளுக்கு வலியுறுத்தி பேசியிருக்கிறார். சுற்றுலா இடங்களை குறைந்த மாசுபாடுடன் சுற்றிப்பார்க்க ரயில்களைப் பயன்படுத்துவது என பசுமை திட்டங்களாக வகுத்து வருகிறார். 2023ஆம் ஆண்டுக்குள் மும்பையை போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக மாற்ற பல்வேறு கட்டுமானப் பணிகளை நேரில் சென்று பார்த்து வருகிறார். அவரின் ஆல்பத்தின் பெயர் உமீத். அதைப்போலவே ஆதித்யா மீதும் நிறைய நம்பிக்கை வைக்கலாம். அந்தளவு அவரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. இந்தியா டுடே கிரண் டி டாரே

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்