ஐந்து ஆண்டுகளில் ஐம்பது லட்சம் சம்பாதித்தால் ஹாரிகா பரிசு! - பணம் - எண்டமூரி வீரேந்திரநாத்
பணம்
எண்டமூரி வீரேந்திரநாத்
தமிழில்
கௌரி கிருபானந்தன்
அல்லயன்ஸ் வெளியீடு
நூலின் அட்டையைப் பார்த்து அதனை பற்றி முடிவெடுக்க கூடாது என்பதற்கு இந்த நூல் சாலப் பொருத்தமானது. அட்டை கண்ணாடிக்கல் மாறி தெரிந்தாலும் கதை வைரம்தான். நாவலின் தொடக்க காட்சியை வாசித்துவிட்டாலே உங்களால் அதனை கீழே வைக்கமுடியாது. இத்தனைக்கும் இது தெலுங்கில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நாவல் ஒரு மொழிபெயர்ப்பு என்பதையே உங்களால் நினைவில் வைத்திருக்க முடியாது. அந்தளவு வேகம்.
நாவலின் முதல்காட்சியே காந்தி, மருந்துக்கடையை தேடுவதும். அவனது அவசரத்தை பயன்படுத்தி ஆட்டோக்காரர், மருந்துக்கடைக்காரர் ஆகிய இருவரும் பணத்தை சுரண்ட நினைப்பதுதான். மருந்தை வாங்கிக்கொண்டு போயும் கூட அதற்கான பயன் இருக்காது. அவனது அம்மா இறந்துபோய்விடுவார். அப்போது காந்தி கேட்கும் கேள்வி, மனதை அறுக்க கூடியது. அவனைப் பார்க்கும் நர்ஸ் கூட சற்று கலங்கிப்போய்விடுவாள். எண்டமூரி வீரேந்திரநாத்தின் சிறப்பே எழுதும் எழுத்துகள் உங்களுக்கு அப்படியே மனக்கண்ணில் காட்சியாக ஓடுவதுதான். இதனால் நாவலை உணர்வுப்பூர்வமாக வாசிக்கத் தொடங்கிவிடுகிறோம்.
காந்தியைப் பொறுத்தவரை அவன் ஏழை. ஒற்றை அறையில் அவனும் அம்மாவும் வசித்து வருகிறார்கள். அம்மா இறந்ததும் அவன் சற்றே சுதந்திரமாகிறான். இனி எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம். மன அழுத்தம் இல்லாமல் பிளாட்பாரத்தில் தூங்கி எழுந்து வாழ்கிறான். அவன் ஆசைப்பட்டது போல வேலையை சம்பாதிக்க முடியவில்லை. கையில் நாலணா கூட பணமில்லாத நிலையில் அவனது அம்மாவையும் இழக்கிறான். பணமே இல்லை என்றாலும் அவனது கணித அறிவு யாரையும் வியக்க வைக்க கூடியது. ஆனால் அதை வைத்து அவன் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கவில்லை.
இந்த நிலையில் அவன் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறான். அப்போது தான் ஒரு பெண்ணும் நீரில் குதித்து மூழ்கும்போது இவனைப் பற்றி பிடிக்கிறாள். அவள்தான் லஷ்மி. சேரிக்குடிசையில் கௌரவமாக வாழ நினைக்கும் அவளை வல்லுறவு செய்ய நினைக்கும் ஆட்களிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதிக்கிறாள். லஷ்மியை காந்தி காப்பாற்றுகிறான். தன்னைப் பற்றி சொல்லுகிறாள். அவள்தான் காந்தியின் வாழ்க்கை முழுக்க அவன் அநீதியின் பக்கம் போகவிடாமல் தடுக்கும் அந்தரங்க மனசாட்சியாக இருக்கிறாள்.
எண்டமூரி வீரேந்திரநாத் |
நாவலின் முக்கியமான சம்பவம், காந்தி போடும் சவால். வேலை வேண்டி போகும் இடத்தில் ராஜாராம் என்ற பணக்காரருடன் பூசல் ஏற்படுகிறது. அப்போது, ஐந்து ஆண்டுகளில் ஐம்பது லட்சம் சம்பாதித்து காட்டுகிறேன் என காந்தி சவால் விடுகிறான். ராஜாராம் பதிலுக்கு யோசிக்காமல் எனது மகள் ஹாரிகாவை உனக்கு பரிசாக தருகிறேன்... நீ சொன்னபடி நடந்தால் என்று ஆணவத்தோடு சொல்லிவிடுகிறார்.
இதில் முக்கியமான விதி... சட்டத்திற்கு உட்பட்டு ஐம்பது லட்சம் சம்பாதிக்க வேண்டும். காந்தி தனக்குத்தானே விதித்துக்கொள்ளும் விதி இது. ஆனால் ராஜாராம் தன்னைப் பற்றிய பெருமை பேசிக்கொள்ளும் யாரிடமிருந்தும் பணத்தை பிடுங்கும் மோசமான ஆள் என்பது காந்திக்கு பின்னர்தான் தெரிய வருகிறது.
மூன்று நாட்களாக சாப்பிடாமல் கிடைக்கும் காந்திக்கு வயதான பிச்சைக்கார கிழவி நாலணாவை சாப்பிடக் கொடுக்கிறாள். அதை வைத்து சூதாட்ட கிளப், பொழுதுபோக்கு பூங்கா நடத்தும் கிச்சாவுடன் பந்தயம் வைத்து விளையாடுகிறான். முதலில் தோற்றாலும் லஷ்மி, ஹாரிகாவின் உதவியால் வியாபாரத்திற்கான அடிப்படை விஷயங்களை தெரிந்துகொண்டு கிச்சாவை தோற்கடித்து நூறு ரூபாயை சம்பாதிக்கிறான்.
இதில் வரும் பாத்திரங்களின் சுபாவங்களும், வசனங்களும் பிரமாதமாக இருக்கின்றன.
லஷ்மி, மூச்சு விடுவதற்கு நிகராக ஏன் அதற்கு மேலாகவே பேசுபவள். எந்த இடத்திலும் தனது மனசாட்சிக்கு விரோதமாக அவள் செயல்படுவதே இல்லை. இதனால் நிறைய இழப்புகளை சந்தித்தாலும் கூட. காந்தியைப் பொறுத்தவரை பணம் சம்பாதிப்பதற்கான பெரிய ஊக்கம் கிடையாது. ஆனால் ராஜாராமால் அவமானப்படுத்தப்பட்ட பிறகு அவன் மூளை வேகமாக யோசிக்கிறது. பணம் சம்பாதிப்பதையே முக்கியமான நோக்கமாக கொள்கிறான். இதில் நேர்மை என்பது காணாமல் போகிறது. குறைவாக பேசும் காந்தி மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அதைப்பற்றிய யோசனையில் மூழ்கிவிடுபவன்.
பேசுவதை விட செய்யும் செயல்கள் அதிகம். பந்தயமாக வைக்கப்படும் ஹாரிகாவிற்கு காந்தியைப் பற்றி முதலில் ஏதும் தெரியவில்லை என்றாலும் மெல்ல அவனை விரும்பத் தொடங்குகிறாள். அவனுக்கு அப்பா செய்யும் பல்வேறு சதிகளிலிருந்து மீள்வதற்கு உதவுகிறாள். அடக்கமான பெண்ணாக இருக்கும் ஹாரிகா, காந்திக்கு நிகரான புத்திசாலியும் கூட. லஷ்மி, ஹாரிகா என இரண்டு பேருமே காந்திக்கு நிகரான சில சந்தர்ப்பங்களில் அவனை விட நேர்மையானவர்களாக திறமையானவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் பாத்திரம் நாயகனை விட வலிமையாக இருக்கிறது.
பணம் சம்பாதிக்கும் வேகத்தில் நான் என்னென்ன விஷயங்களை இழந்துவிடுகிறோம் என்பதை நாவலின் இறுதியில் காட்டுவது அற்புதம். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மனிதர்கள் மாறுவார்கள்தான். அனுமந்துவின் மனைவி பிரியம்வா இறுதியில் செய்யும் செயல்கூட நம்பிக்கை தருகிறது. வார்டுபாய் பாத்திரம் கூட காந்தியை உசுப்பும் , உண்மையை கைவிடாதே என்பதை எச்சரிக்கும் பாத்திரமாக ஆசிரியர் காட்டியுள்ளார்.
லஷ்மிக்கும் காந்திக்கும் நெருக்கமான காதல்காட்சிகள் கிடையாது. ஏன், அவனை ரகசியமாக வீடு தேடி வந்து பார்க்க முயலும் ஹாரிகாவுக்கும் கூட கிடையாது. ஆனால் இந்த பந்தயத்திலும் லஷ்மிதான் தனது பிரியத்தை அவனுக்கு காட்டுகிறாள். அவனும் பதிலுக்கு காட்ட தூண்டுகிறாள். ஆனால் காந்தி அப்போது தனது ஆசையை வெளிப்படுத்துவதில்லை.
பணத்தை வெல்லும் மனிதம்
கோமாளிமேடை டீம்
நன்றி
கே.என்.சிவராமன், பத்திரிகையாளர்
image pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக