லினக்ஸை இயக்குவதற்கு ஓரளவேனும் அறிவு தேவை! - மனம் தளராத விக்கிரமாதித்தன்
லினக்ஸ் இயக்கமுறைமையைக் கொண்ட அரசு வழங்கிய மடிக்கணியை ஓராண்டாக பயன்படுத்தி வருகிறேன். டெக் நணபர் ஒருவரிடம் பணம் கொடுத்து ஒரு 8,500க்கு வாங்கினேன்.முதலில் விண்டோஸ் இயக்கமுறைமை மட்டும் பயன்படுத்திினேன். வெகு சில மாதங்களிலேயே அதுவும் மென்பொருள் பிரச்னைகளால் பழுதானது. அப்போது எனக்கு இருந்த ஒரே வழி லினக்ஸ் இயக்கமுறைக்கு மாறுவதுதான். அந்த கணினியில் அந்த இயக்கமுறையும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
லினக்ஸ் இயக்கமுறை பற்றி அடிப்படையான சில விஷயங்களே தெரியுமே தவிர, அதில் கோப்புகளை எப்படி தேடுவது, புரோகிராம்களை இன்ஸ்டால் செய்வது பற்றி முதலில் ஏதுமே தெரியாது. பிறகு இதனை டெக் நண்பரே சொல்லிக்கொடுத்தார். எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. விண்டோசை விட சில புரோகிராம்களே மாறியிருந்தன. நிறைய அம்சங்கள் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் இருந்தன. ஆனால், அதனை புரிந்துகொண்டு செயல்படுவதுதான் கடினமாக இருந்தது.
விண்டோசில் பிரச்னை என்றால் சிபியூவை ஒரு எத்து எத்தி, ரீஸ்டார்ட் செய்தால் போதும். ஆனால் இந்த பார்முலா லினக்ஸில் செல்லுபடி ஆகாது.
லாக்டௌன் காலத்தில் முழுக்க அலுவலகப் பணிகளுக்கு ஈடுகொடுத்து உழைத்தது லினக்ஸ் இயக்கமுறைமைதான். அதற்கு என்றுமே நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஆனால் லினக்ஸை கொஞ்சம் பயன்படுத்தக் கற்றுக்கொண்டு இருக்கவேண்டும். இப்படி சொன்னாலே பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்றுதானே அர்த்தம். அதேதான். லினக்ஸ் இயக்கமுறையில் லினக்ஸ் மின்ட் சற்று எளிதாக இருக்கும் என டெக் நண்பர், அதனை மேம்படுத்தித் தந்தார். தினசரி கணினியில் இணையத்தை இணைக்கும்போது ஏகப்பட்ட அப்டேட்டுகள் வந்துகொண்டே இருக்கும். அத்தனையும் இன்ஸ்டால் செய்தும் கூட கணினி திடீரென செயல்படாமல் போய்விட்டது.
லினக்ஸ் மின்டை நம்பி, நான் எழுதி வந்த ஒவ்வாமை பற்றிய நூலைக் கூட வேறு இடத்தில் சேமித்து வைக்கவில்லை. முதல்நாள் கோப்பை சரிபார்த்துவிட்டு அடுத்தநாள் செம்மையாக்கம் செய்ய எடுத்தேன். கணினியில் ஏகப்பட்ட ஆங்கில வரிகள் 0.1 போல வேகமாக ஓடியது. பிறகு, கணினியை ரீஸ்டார்ட் செய்து பார்த்தால் நான் முன்தினம் செம்மையாக்கம் செய்து வந்த கோப்பைக் காணவில்லை. அதனை எப்படி எங்கு தேடுவது என்று கூட எனக்குத் தெரியவில்லை.
பிறகு எதேச்சையாக ட்ராஷ்ஷில் தேடினேன். அங்கு இதுவரை எழுதிய நூலின் கோப்பு கிடைத்தது. ஆனால் அதனை ரீஸ்டோர் கூட செய்ய லினக்ஸ் மின்ட் விடவில்லை. உடனே அழித்துவிடலாமா என்று செய்தி வந்தது. அதனை கேன்சல் செய்யும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.
இடதுகையை தரையில் வலது கையில் ஆன்மசக்தியை முழுக்க செலுத்தியும் கூட கேன்சல் பட்டனை அழுத்த முடியவில்லை. லாகிடெக் மௌஸ் அழுததே தவிர, பயன் ஒன்றுமில்லை. எனது கோப்பை தேட வேறு வழியின்றி அதற்கு பல்வேறு உதவிகளை வழங்கிய டெக் நண்பரை அழைத்தேன். அவரும் நிறைய விஷயங்களை வழிமுறைகளை கையாண்டார். இறுதியில் அப்படியொரு கோப்பு கணினியில் இல்லை என்று கூறினார்.
உண்மையில் ஃப்ரீ கய் படத்தில் ரியான் ரினால்ட்ஸ் போல என்னை உணர்ந்தேன். அதில்தான் அவர் காதலிக்கும் பெண் அவரை நீ ஒரு மனிதனே கிடையாது. கணினி அல்காரிதம் என்று கூறுவார். அவர் தன்னை முழுமையான மனிதனாகவே உணர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பார். திடீரென அல்காரிதம் என்றதும் விரக்தியடைந்து அங்கிருந்து ஓடிவிடுவார். எனக்கும் அதே போன்ற மனநிலை ஏற்பட்டது.
சில மாதங்களாக ஆங்கில நூல்களை வாசித்து அறுபது பக்கம் எழுதிய நூலைக் காணோம் எனும்போது, நான் அந்த நிலையை அடைந்தேன். வேறு என்ன செய்வது? உண்மையில் நான் அந்த நூலை எழுத நினைக்கவேயில்லை. அப்படி ஒரு விஷயம் எனது வாழ்க்கையில் நடக்கவேயில்லை என நினைத்துக்கொள்வது உத்தமமான விஷயமாக அமையலாம்.
இங்கு நான் யாரையும் குறை சொல்லவில்லை. இனிமேல் யாரேனும் லின்க்ஸ் இயக்கமுறைமைக்கு மாற விரும்பினால், கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராவதைப் போல பயிற்சி செய்யவேண்டும். அந்த கட்சியில் உள்ளே நுழைய அடிப்படையான நூல்களைப் படிக்கவேண்டும். பிறகு போராட்டங்களில் பங்கேற்ற வேண்டும். பிறகுதான் உறுப்பினராக்க யோசிப்பார்கள். லினக்ஸும் கூட அப்படித்தான். பற்பல நூல்களை படித்து உங்களை தகுதியாக்கிக்கொண்டு அதில் வேலை செய்யுங்கள். இல்லையெனில் கோப்புகளை இழந்துவிட்டு அனுபவப் பகிர்தலை எழுதி விரக்தியை தீர்த்துக்கொள்ளவேண்டியதிருக்கும்.
இனி கணினியை மட்டும் நம்பி கோப்புகளை பாதுகாப்பாக வைப்பது பதற்றத்திலும் விரக்தியிலும்தான் தள்ளும்., எனவே முடிந்தவரை இணையத்தில் உள்ள கூகுள் டாக்ஸ் அல்லது ஜோகோ டாக்ஸை பயன்படுத்தினால் கோப்புகள் பாதுகாப்பாக இருக்கும். இதிலும் கோப்புகளுக்கு குறிப்பிட்ட வரம்புகளுண்டு. அதைத் தாண்டி பயன்படுத்தினால் கட்டணம் செலுத்தவேண்டும். எனவே கவனமாக கணினியைப் பயன்படுத்துங்கள் தோழர்களே
அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக