மணல் சிற்பங்களை செய்து அசத்தும் கோவை அரசுப்பள்ளி மாணவர்கள்!

கடற்கரையில் சாதாரண மணல் வீடு கட்டும்போது அதற்கு வாசல், கதவு வைக்க அரும்பாடு படவேண்டியிருக்கிறது. இதில் அதனை சிற்பமாக வடித்தெடுக்க எந்தளவு நேரத்தை உழைப்பை போட வேண்டியிருக்கும். இதில்தான் கோவை மாணவர்கள் சாதித்துள்ளனர். கோவையில் உள்ள கிணத்துக்கடவு அரசுப்பள்ளி மாணவர் லோகநாதன், 2018ஆம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற மணல் சிற்ப போட்டியில் வென்றார். இதுதான் அந்த பள்ளியில் உள்ள கலை ஆசிரியர்களின் மதிப்பை பலருக்கும் தெரிய வைத்தது. ஏளனமாக பார்த்தவர்களை மதிக்க வைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பள்ளி ஆசிரியர்களான கௌசல்யா, ராஜ லட்சுமி ஆகியோர்தான், மாணவர்களை பெண்டு நிமிர்த்தி கலைப்பாடங்களை சொல்லித்தந்து கொண்டிருக்கிறார்கள். கல்வி அமைச்சகம் நடத்தும் கலா உத்சவ் போட்டிகளில் மாணவர்களை பயிற்றுவித்து படைப்புகளை சமர்ப்பித்து ஏராளமான பரிசுகளை பெற்று வந்திருக்கிறார்கள். படித்து மாத சம்பளத்திற்கு வேலைக்கு போனால் பரவாயில்லை என்ற நினைத்த மாணவர்களை கலைகளைப் படித்து ஆசிரியராக அதனை சொல்லிக்கொடுக்கலாம் என்று நினைக்க வைக்கும் அளவு இரு ஆசிரியர்களின் உழைப்பும் இருந்தது. 2018ஆம் ஆண்டு, நாங்கள் மாணவர்களுக்கு வரையக் கற்றுக்கொடுத்துக்கொண்டு இருந்தோம். அப்போதுதான் தமிழக அரசு கலை அருவி என்ற திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்தில் எட்டு போட்டிகள் உண்டு. இதில் மணல் சிற்பங்களும் ஒன்று. நாங்கள் அப்படித்தான் லோகநாதனை அதில் பங்கேற்க ஊக்குவித்தோம். அதில் கூட ஓவியம் வரைவான் என்பதற்காக பரிந்துரைத்தோம். முதலில் நான் மணல் சிற்பங்களை முக்கியமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றார் கௌசல்யா. மரத்தை வெட்டாதீர்கள் என்ற தலைப்பில் மணல் சிற்பங்களை லோகநாதன் உருவாக்கி மாநில அளவில் முதல் இடம் பிடித்தார். மணலில் சிற்பம் என்பதால், ஆற்றில் அல்லது கடற்புரம் சென்று வரைந்துவிட முடியாது. நேர்த்தியான ஒரு மணல் சிற்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதுவரை மாணவர்களின் பயிற்சிக்கென ஆசிரியர்கள் ஒரு லட்சம் ரூபாய் செலவழித்துள்ளனர். ஏழு மாணவர்களை இப்படி உருவாக்கியுள்ளனர். 2020ஆம் ஆண்டு இப்பள்ளி மாணவி கிருத்திகா, தேசிய அளவிலான போட்டியில் மூன்றாவது இடம் பிடித்தார். இவரது பயிற்சிக்கு கௌசல்யாவே செலவு செய்திருக்கிறார். முதலில் பயிற்சிக்கு மறுத்தாலும் பின்னாளில் கிருத்திகா அதன் மேல் ஈடுபாடு கொண்டிருக்கிறார். தெருக்கூத்து, மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆகியவற்றை சிற்பங்களாக உருவாக்கி மூன்றாவது பரிசு வென்றிருக்கிறார். மணல் சிற்பக்கலையில் ஆர்வம் இருந்தால் அவர்கள் நுண்கலைக்கல்லூரியில் பட்டம் பெற முடியும். இதில் நல்ல வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என கருத்துகளை சொல்லுகிறார் ராஜலட்சுமி. மாணவர்களை கலையின் பக்கம் கவனத்தை திரும்ப வைத்ததில் பள்ளி தலைமை ஆசிரியர் கே கிருஷ்ணமூர்த்தியின் பங்களிப்பு முக்கியமானது. மணல் சிற்ப தயாரிப்பு பொருட்களை இவரே பொறுப்பெடுத்து வாங்கிக் கொடுத்துள்ளார். பள்ளியில் படித்து வெளிநாட்டில் இருக்கும் முன்னாள் மாணவர்கள் மணல்சிற்ப மாணவர்களுக்கு நிதியுதவியை வழங்கி வருகிறார்கள். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தாமோதரன்

கருத்துகள்