இருளர் குழந்தைகளுக்கு கல்விச்செல்வத்தை வழங்கும் ஆசிரியர் இளவரசன்! - அரியலூரில் புதிய முயற்சி

 











இன்று தேர்வு எழுதுவதும் அதில் தேர்ச்சி பெறுவதும் கடந்து நினைத்த லட்சிய படிப்பை படிப்பதற்கான வேட்கை அதிகம் உள்ளது. இதற்கு தடையாக ஒன்றிய அரசு பல்வேறு அரசியல் விளையாட்டுகளை விளையாடி ஏராளமான நுழைவுத்தேர்வுகளை புரியாத மொழியில் வைத்து சவால்களை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் மாணவர்களை ஜெயிக்க வைக்க சிலர் தங்களையே தீக்குச்சியாக எரித்துக்கொண்டு உழைத்து வருகிறார்கள்.

அரியலூரின் ஓலையூர், பாப்பன் குளம் பகுதியில் 67 இருளர் குழந்தைகள் உள்ளனர். இவர்களைப் போன்றவர்கள் வறுமையை சமாளித்து பள்ளிப்படிப்பை தாண்டுவதே கடினம். அதிலும் வென்று கல்லூரியில் காலடி எடுத்து வைப்பதெல்லாம் மனோரமா இயர் புக்கில் வெளிவந்தாலும் ஆச்சரியமில்லை. 

இவர்களுக்கு பயிற்றுவிக்க இளவரசன் முன்வந்து உதவி வருகிறார். தனியார் பள்ளி ஆசிரியரான இவர், மாலை நேரங்களில் இருளர் குழுந்தைகளுக்கு வகுப்புகளை எடுத்து வருகிறார். ஞாயிறு மட்டும் விடுமுறை. இப்பணியை கடந்த ஐந்து ஆண்டுகளாக செய்து வருகிறார். 

1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார் இளவரசன். இவரது கல்வி நிலையத்திற்கு பெயர் மகாத்மா காந்தி மாலைநேர படிப்பகம். இங்கு கல்வியோடு கூடுதல் திறன்களையும் வளர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பேனா, நோட்டு புத்தகம், பள்ளி சீருடைகளையும் வழங்கி வருகிறார். வாரம் மூன்று முறை ஊட்டச்சத்தான உணவுகளையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். 

இளவரசன் பாடம் கற்றுத்தருவதோடு சமூகம் சார்ந்த பணிகளையும் செய்துவருகிறார். இதற்கான ஸ்வீட் ட்ரஸ்ட் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதிலுள்ள தன்னார்வலர்கள்  பஞ்ச காலத்தில் மூன்று லட்சம் பனைவிதைகளை நடவு செய்துள்ளனர். ஒரு லட்சம் பிற மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இவரது சமூகப் பணியில் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை நூற்றுக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றுள்ளனர். 

தினசரி வகுப்புகளை நடத்துவதற்கான நிதியுதவியை என்டிஎஸ்கோ எனும் அமைப்பு வழங்குகிறது. இந்த அமைப்பு மாணவர்கள் உயர் கல்வி கற்கவும் தேவையான உதவிகளை செய்கிறது. கிராமத்தில் உள்ள பட்டதாரிகளை வகுப்புகளை கவனிக்கும் பணியை தந்திருக்கிறார் ஆசிரியர் இளவரசன்.

அடிப்படை கல்வியே கற்காத மக்கள் என்பதால் குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவது எப்போதும் நடக்கக் கூடிய ஒன்று. அதனை தடுத்து அவர்களை கல்வியின் பக்கம் கொண்டு செல்ல இளவரசன் மற்றும் அவரது குழுவினர் முயன்று வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் இதுபோன்ற திட்டத்தை கொண்டு சென்று கல்வியில் பின்தங்கிய மக்கள் இனக்குழுவினருக்கு உதவி செய்ய ஆசிரியர் இளவரசனுக்கு திட்டமுள்ளது. 

திருசெல்வம்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 



கருத்துகள்