தாரகை - சிறையில் தள்ளியவர்களை பழிவாங்கும் இளம்பெண்ணின் துணிச்சல்- ரா.கி.ரங்கராஜன் நாவல்

தாரகை ரா.கி.ரங்கராஜன் அல்லயன்ஸ் 624 பக்கம் இந்த முறை ஆசிரியர் முழுக்க வெளிநாட்டில் கதையை நடத்திச் செல்கிறார். கதையின் நாயகி, ட்ரேசி. வங்கியில் வேலை செய்து வருகிறாள் ட்ரேசி. அவளது வாழ்க்கையில் அம்மா துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்துகொள்கிறாள். அந்த சம்பவம் நடந்தபிறகுதான் ட்ரேசியின் வாழ்க்கை மாறுகிறது. அவளது பணக்கார காதலன், மெல்ல விலகிப்போகிறான். வேலையை விட்டு நீக்கப்படுகிறாள்.ரொமானோ என்ற குற்றவாளிதான் அவளது அம்மாவின் தற்கொலைக்கு காரணம். அதற்கு பழிவாங்கும் முயற்சியில், மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறாள். அதிலிருந்து விலகி வரும்போது வாழ்க்கை வெகுதூரம் தள்ளிப்போயிருக்கிறது. தனது வாழ்க்கையை, அவள் எப்படி மீட்கிறாள் என்பதுதான் கதை. மொத்தகதையும், பரபர வேகத்தில் செல்கிறது. ட்ரேசியின் வாழ்க்கையில் துயரமான சூழலில் தனக்கு உதவும் மனிதர்கள் யார், ஆறுதல் சொல்பவர்கள் யார் என தெரிந்துகொள்கிறாள். அப்படித்தான் அவளது வாழ்க்கையில் சிறுமி ஆமி, மார்சன், கந்தர், ஜெஃப் ஆகியோர் வருகின்றனர். சிறையில் நடக்கும் சம்பவங்களை வாசிக்கும் ஒருவரால் எளிதாக கடப்பது கடினம். வல்லுறவு செய்யப்பட்டு மணிக்கட்டு, எலும்பு உடைந்துபோகிறது ட்ரேசிக்கு. பிறகுதான் தன்னை வலுவாக்கிக்கொண்டு சிறையில் எர்னியை நட்பாக்கிக்கொள்கிறாள். அங்கிருந்து தப்பவும் முயல்கிறாள். எர்னிக்கு, ட்ரேசியின் ஆளுமை மிகவும் பிடித்துப்போகிறது. அவளின் கண்ணியமான நடத்தைதான் காரணம் என அவள் ட்ரேசியிடம் சொல்லுவது சிறப்பான இடம். வார்டனின் குழந்தை ஆமியை ட்ரேசி பார்த்துக்கொள்கிறாள். அங்கு ஆமிக்கும், ட்ரேசிக்கும் ஆழமான உறவு உருவாகிறது. இதை ட்ரேசி தவிர்க்க முயல்கிறாள். அவளது குழந்தை வல்லுறவால் இறந்துபோயிருக்கும் சூழலில், ஆமியை மனதிலிருந்து அகற்ற முடியாமல் போகிறது. தான் சிறையிலிருந்து தப்பிக்க போட்ட திட்டத்தை கூட ட்ரேசி மாற்றிக்கொள்கிறாள். அதற்கும் ஆமியின் அன்புதான் காரணம். சிறையிலிருந்து வந்தவுடன் தனது வாழ்க்கையை குலைத்தவர்களை போட்டு பொளக்கிறாள். அடியாள் ரொமானோ, தலைவன் ஆர்செட்டி, வழக்குரைஞர், நீதிபதி என அனைவருக்கும் அவரவருக்கு ஏற்றபடி தண்டனைகளை திட்டமிட்டு செய்கிறாள். பிறகுதான் தனது வாழ்க்கையை வாழ நினைக்கிறாள். ஆனால் வாழ்க்கை அதுவரைக்கும் காத்திருக்குமா என்ன? சமூகத்தால் செல்லும் இடங்களில் எல்லாம் புறக்கணிக்கப்படுகிறாள். இதனால் சிறையில் இழந்த வாழ்வை மீட்க திருடி ஆகிறாள். அதுவும் புத்திசாலித்தனமான பெண்ணாக. இவளுக்கு எதிரியாக இவளை கண்டுபிடித்து சிறையில் தள்ள முயல்பவனாக இன்சூரன்ஸ் கம்பெனி டிடெக்டிவ் கூப்பர் வருகிறான். ஆனால் இவனுக்கு அதிக இடம் நாவலில் இல்லை. தாரகை என்ற தலைப்புக்கு ஏற்ப கதை முழுக்க ட்ரேசியைத்தான் முன்னிலைப்படுத்துகிறது. இதனால் கூப்பருக்கு நாவலின் இறுதிப்பகுதியில் சிறிய இடம் கிடைக்கிறது. ஆனால் அதிலும் தடுமாறி தோற்றுப்போகிறான். தனது வாழ்வுக்கு உண்மையான உறவான ஜெஃப்பை அவள் மெல்ல கண்டுபிடிக்கிறாள். அந்த உணர்வுகளை அவள் உணரும் இடம் அழகாக இருக்கிறது. இருவரும் பேசும் உரையாடல்களும் தொனிக்கும் காதலும் இதயத்தை எகிற வைக்கிறது. இறுதியில் மேக்ஸ்மிலியனை எதிர்பாராமல் சந்திக்கும் இடம்தான் ரா.கி. ரங்கராஜனின் ஸ்பெஷல் மாயாஜால எழுத்துக்கு சான்று. தாரகை - மாயாஜாலக்காரி கோமாளிமேடை டீம் நன்றி கே.என். சிவராமன் , பத்திரிகையாளர்

கருத்துகள்