ஆய்வகத்தில் தயாரிக்கலாம் பாலை....

 























பால் மற்றும் முட்டை ஆகிய உணவுப்பொருட்களை ஆய்வகத்தில் தயாரித்து விற்பனை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.  

அமெரிக்காவிலுள்ள பர்ஃபெக்ட் டே என்ற நிறுவனத்தைத் தொடங்கிய உயிரி பொறியாளர் ரியான் பாண்டியா, சோயாவிலிருந்து பால் பொருட்களைத் தயாரித்து வருகிறார். இந்த பாலில் எதிர்பார்க்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இப்போது வரை க்ரீம் சீஸை தயாரிக்க முடியாவிட்டாலும் ஐஸ்க்ரீமை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இந்த வகையில் விலங்குகளுக்கு மாற்றாக தாவரங்களின் புரதங்களிலிருந்து உணவுப்பொருட்களைத் தயாரிப்பது புதிதல்ல. ரியானின் நிறுவனத்தைப் போலவே அங்கு வேறு பல நிறுவனங்களும் பால் பொருட்களைத் தயாரித்து வருகின்றன. 



இதில் புதுமையான விஷயம்,நொதிக்க வைக்கும் முறையில்  நுண்ணுயிரிகளிடமிருந்து குறிப்பிட்ட வேதிப்பொருளை பெற்று அதிலிருந்து பால் போன்ற பொருட்களை தயாரிக்கும் முயற்சிதான்.  இதனை புதிய முறை என்று கூறமுடியாது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரொட்டி, யோகர்ட், சீஸ், மதுபானங்கள் நொதிக்க வைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.  தொண்ணூறுகளில் அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு(FDA), நுண்ணுயிரிகளிடமிருந்து என்சைம்களை பெற்று உணவுப்பொருட்களைத் தயாரிக்க அனுமதி வழங்கியது. இப்போட்டியில் ஃபைசர் நிறுவனம் வென்று, பாக்டீரியாவிலிருந்து சீமோசின் எனும் என்சைமை உற்பத்தி செய்தது. இன்று உலகில் நடைபெறும் 90 சதவீத சீஸ் தயாரிப்பு, இம்முறையில்தான் நடைபெறுகிறது. 

நுண்ணுயிரிகளிடமிருந்து புரதங்களைப் பெறுவதை பிரிசிஷன் ஃபெர்மன்டேஷன்  என்று குறிப்பிடுகின்றனர். பெரும்பாலான உணவுப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பர்ஃபெக்ட் டே நிறுவனத்தின் மாதிரியைப் பின்பற்றி வருகின்றனர். ”புதிய தயாரிப்பு முறையில் பாலை உற்பத்தி செய்வது எளிதுதான் ” என்றார் இங்கிலாந்திலுள்ள ஷெஃபீல்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்  ஜோஸ் மில்பர்ன்.  டிரிச்சோடெர்மா ரீசி (Trichoderma reesi) என்ற பூஞ்சையிலிருந்து வே புரதம் பெறப்படுகிறது. பாலிலுள்ள இரண்டு முக்கிய புரதங்களில்(கேசின், வே புரதம்) இதுவும் முக்கியமானது. அமெரிக்காவில் இதனைப் பயன்படுத்தி செய்யப்படும் வீகன்  ஐஸ்க்ரீம்களை சாப்பிடத் தொடங்கியுள்ளனர்.  குறிப்பிட்ட புரதத்தைப் பிரித்தெடுத்து உணவுப்பொருட்களை தயாரிப்பதால் அதற்கு நிறுவனங்கள் விண்ணப்பித்து அனுமதி பெற்றுவருகின்றன. 

வெளிநாடுகளின் சந்தையில் தாவர புரதங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஐஸ்க்ரீம்கள் வந்துவிட்டாலும், சீஸ் தயாரிப்பு வேகம் பெறவில்லை. இப்பொருட்களில் ஆன்டிபயாட்டிக், லாக்டோஸ் ஆகியவை இல்லாத காரணத்தால் அலர்ஜி பிரச்னை உள்ளவர்களும் இதனை சாப்பிட வேண்டும். தாவர புரதங்களால் தயாரிக்கப்பட்ட பால் பொருட்களுக்கான மாற்று பொருட்களின் தேவை ஆசியாவில் அதிகரித்து வருகிறது. 

மரபான பால் உற்பத்தி நிறுவனங்கள், தாவரங்களிலிருந்து பெறப்படும் பாலை பால் என்று விளம்பரப்படுத்தக்கூடாது என அரசிடம் வலியுறுத்தி வருகின்றன. பால் உற்பத்திக்காக பசுக்களை கொடுமைப்படுத்துவதாக விலங்கு நல நிறுவனங்கள் புகார்களை எழுப்பி வருகின்றன. பால் உற்பத்திக்காக செலவிடப்படும் இயற்கை ஆதாரங்கள் அதிகமாகி வருவதோடு, பசுமை இல்ல வாயுக்களின்  அளவும் கூடி வருகிறது. இதன்  காரணமாக தாவர புரதங்களின் மீது பலரின் கவனமும் திரும்பி வருகிறது. 

பால் உற்பத்தித்துறை மட்டுமல்லாது, விலங்குகளின் தோல்களுக்கு பதிலாக அதன் செல்களிலிருந்து செயற்கையாக தோலை தயாரிக்கும் முறையும் சோதனையில் உள்ளது. இந்த சோதனையில் வைட்ரோலேப்ஸ் என்ற நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வணிகரீதியாக இப்பொருட்கள் வெற்றி பெற்றால், மரபான துறைகள் தம்மை புதுப்பித்துக்கொள்வது அவசியமாகிவிடும். 


தகவல்

நியூ சயின்டிஸ்ட் 14.9.2021

brewing milk, graham lawton New scientist, 14.9.2021  

https://www.newscientist.com/article/mg25133470-900-real-milk-no-cows-needed-lab-made-dairy-products-are-now-a-reality/

கருத்துகள்