5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா எட்டிப்பிடிக்க வழிகள்! - சேட்டன் பகத்

 










ரேஷன்கார்டில் வழங்கும் இருபது பொங்கல் பொருட்களை வாங்க அடிதடி நடக்கும் நேரம். தடுப்பூசி சான்றிதழை காட்டினால்தான் பொருட்கள் கிடைக்கும் என அரசு மக்களை மிரட்டிக்கொண்டிருக்கிறது. 

இதே நேரத்தில்தான் போரம் மால், எக்ஸ்பிரஸ் அவென்யூ என நாடு முழுக்க உள்ள பல்வேறு மால்களில் தடுப்பூசி சான்றிதழ்களை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். கூட்டமும் இரண்டு வருஷம் அடைச்சு வெச்சீங்களேடா என மால் முழுக்க சுற்றி வருகிறது. புத்தகங்களை படிக்க இல்லாமல் அடுக்கி வைக்க கூட வாங்குவார்கள் அல்லவா அதுபோல, குலாப் ஜாமூன், பஜ்ஜிமாவு மிக்ஸ் என மயிலை மாமா அள்ளிக்கொண்டு இருக்கிறார். உலகம் அழியப் போகிறதா இல்லை அடுத்த வைரஸ் வந்துவிட்டது. அதற்குள் எல்லாவற்றையும் செய்துவிடலாம் என மக்கள் நினைக்கிறார்கள். இதை அரசு லாபமாக பார்க்கிறது. அதாவது பொருளாதாரம் வளர்ந்துகொண்டிருக்கிறது ப்ரோ?

வேலைக்கு போகிறார்களா அல்லது இந்தியாவை விட்டு தப்பி யோடுகிறார்களா என்று தெரியாதபடி கூட்டம் விமானங்களில் அள்ளுகிறது. அங்கேயும் ஃபுட்போர்டு அடிக்கும், ஸ்டேண்டிங்கில் நிற்கும் சீட்டுகள் விற்றால் கல்லா கட்டலாம் போல. ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்ததும் நடந்த காட்சிகள் நினைவுக்கு வருகிறதா? நிச்சயம் அதெல்லாம் நினைவுக்கு வந்தாலும் வாய்விட்டு சொல்லிவிடக்கூடாது. உபா பாய்ந்து விடும்.

 பொருளாதார பஞ்சாயத்திற்கு வருவோம். 5 ட்ரில்லியன் பொருளாதாரம் என்று அரசு சொன்னது சொந்தக் கட்சிக்கான நிதி அல்ல. நாட்டிற்கானது என்றால் ஆண்டுக்கு 9 சதவீத வளர்ச்சி தேவை. அந்தளவு வளர்ச்சிக்கு கொள்கை, சட்டம் என நிறைய விஷயங்கள் தேவை. தனிநபருக்கு 3, 300 டாலர்களை சம்பாதிக்கும்படி சூழல் அமைந்தால் மட்டும்தான் அவரிடம் ஜிஎஸ்டி பிடுங்கி அரசு சம்பாதிக்க முடியும். வரி கட்டவாவது மக்கள் உயிரோடு இருக்கவேண்டும் என நிதியமைச்சர் கர்த்தரிடம் பிரார்த்தித்துக்கொண்டிருப்பார். 

வரி சீர்திருத்தம் 

ஒன்றிய அரசு சில ஆண்டுகளாக நிறைய சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகிறது. அவை சிறப்பான முறையில் நடைமுறைக்கு வரவில்லை. காரில் ஆக்சிலேட்டரும் பிரேக்கும் முக்கியம். வரி சீர்திருத்தங்கள் என்பது பிரேக்கைப் போல. ஆக்சிலேட்டரை பொருத்த காட்டும் வேகத்தை பிரேக்கை உருவாக்கவும் காட்டுவது அவசியம். 

சிறப்பு நிர்வாகப் பகுதி

பெரும்பாலான முதலீட்டாளர்கள் எதற்கு சிங்கப்பூர், ஹாங்காங், துபாய் ஆகிய நாடுகளை மட்டுமே நாடிப்போகிறார்கள்? அங்கு தொழில் நடத்துவதற்கான தனிப்பகுதிகள் உள்ளன. அங்கு, குறைந்த வரி, சிறப்பான நிர்வாகம், வணிகம் செய்வதற்கான சட்டங்கள் ஆகியவை சிறப்பாக உள்ளன. குஜராத்தில் இதுபோல சில பகுதிகள் உள்ளன. அதைப்போலவே நிறைய பகுதிகளை நாடெங்கும் உருவாக்க வேண்டும். அப்போதுதான் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து இந்தியா தொழில்வளர்ச்சியில் உச்சம் தொட முடியும். 

அடுத்த ஒரே ஆண்டில் இந்த சீர்திருத்தம் மூலமாகவே ஒரு ட்ரில்லியன் டாலர்களை சம்பாதிக்க முடியும். 

சீனாவின் இடம்

சீனாவில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக நிறைய பிரச்னைகள் உள்ளன. பல்வேறு உற்பத்திப் பொருட்கள் அங்கு உற்பத்தியாக வெளியே செல்வதில் தடுமாற்றம் உள்ளது. இந்த நிலையை இந்தியா சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.  குறைந்த வரி, இலவச நிலம், துறைமுக அனுமதி ஆகியவற்றை எளிதாக வழங்கி தொழில்துறைகளுக்கு வழங்கலாம். 

நீதித்துறை சீர்திருத்தம்

உலகளவில் இந்தியாவின் நீதித்துறை சிறப்பானது என்று பேசிவருகிறார்கள். அப்படித்தான் இருக்கிறதா என்று இப்போது பேசுவது முக்கியமல்ல. ஆனால் ஆமை போல இயங்குவதுதான் பிரச்னை. பெரும்பாலான வழக்கு விசாரணைகளை விர்ச்சுவல் முறையில் கொண்டு வரவேண்டும். வழக்கு ஆவணங்களை ஆன்லைனில் வெளியிட வேண்டும். இதனால் வழக்குகள் வேகமாக முடியும். 

ரூபாயை இன்னும் இந்திய அரசு கட்டுப்படுத்தி வருகிறது. இனிமேல் அப்படி எந்த கட்டுப்பாடுகளையும் வைத்திருக்க கூடாது. உலக வல்லசராகும் நாடு ஏகப்பட்ட விதிகளை கட்டிக்கொண்டு அழுதால் எப்படி? தாராளமயமாக்குவது அரசின் கடமை. 

உலகளவில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்தியாவில் வந்து முதலீடு செய்யும்படி நிலைமையை மாற்ற வேண்டும். அப்போதுதான் அவர்களின் நிதியும், தொழில்முயற்சிகளும் மக்களுக்கு பயன்படும். ஐஐடி, ஐஐஎம்களில் அரசு உதவித்தொகையில் படித்துவிட்டு அவர்கள் விமானம் ஏறி உலக நாடுகளுக்கு செல்கிறார்கள். அங்கு பெரு நிறுவனங்களின் இயக்குநர்களாக முன்னேறிவிடுகிறார்கள். இந்திய வம்சாவளி என்ற பெருமை மட்டுமே நமக்கு மிஞ்சுகிறது. அவர்களின் அறிவு இங்கு பயன்பட்டிருந்தால் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்குமே? 

சேட்டனின் கட்டுரையைத் தழுவியது. 

டைம்ஸ் ஆப் இந்தியா

கட்டுரை உருவாக்கம் ஹைபிரிட் தமிழன்

கேலிச்சித்திரம் - ஜீனியஸ் கலைஞர் பாலமுருகன்

படம் ஓவியரின் காப்புரிமைக்கு உட்பட்டது.

கருத்துகள்