விண்வெளியில் சத்தான உணவு!
விண்வெளியில் சத்தான உணவு!
விண்வெளி வீரர்கள், விண்கலத்தில் பயணிக்கும்போது சாப்பிடுவதற்கான உணவுகளை சரியான முறையில் தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
விண்வெளியில் ஈர்ப்பு விசை குறைவு. இதன் காரணமாக அங்கு பயணிக்கும் விண்வெளி வீரர்களின் உடல் எடை குறைவதோடு, எலும்புகளின் அடர்த்தியும் பாதிக்கப்படுகிறது. இதற்காக வீரர்களுக்கென சத்துக்கள் நிறைந்த உணவுகள் தயாரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு அதிக நாட்கள் தாங்கும்படி அனுப்பி வைக்கப்படுகின்றன.
பூமியில் ஒருவர் சாப்பிடும் அனைத்துப் பொருட்களையும் விண்வெளியில் சாப்பிட முடியாது. இவர்களுக்கென அமெரிக்காவின் நாசா அமைப்பு, சிறப்பு வகை உணவுகளை தயாரித்து வருகிறது. விண்வெளி வீர ர்கள் தினசரி 2,700 லிருந்து 3,700 வரையிலான கலோரிகளை உணவிலிருந்து பெறுவது அவசியம். அப்படி பெறமுடியாதபோது, அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும். இப்படி விண்கலனில் தயாரித்து அனுப்பப்படும் உணவு மாதங்கள், ஆண்டுகள் என கெடாமல் இருக்கும்.
பூமியில் நீங்கள் சாப்பிடுவது சிறப்பான உணவு என்றால் அது விண்வெளியிலும் சிறப்பான உணவாகவே இருக்கும் என்றார் நாசாவின் உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு ஆய்வாளர் கிரேஸ் டக்ளஸ். பழங்கள் மற்றும் காய்கறிகளிடமிருந்து வைட்டமின்களைப் பெற்று உணவு வகைகளை தயாரித்து வருகின்றனர். குறிப்பிட்ட உணவு வகைகளிலிருந்து சத்துக்களை முழுமையாக பெற முடியாது என நாசா கருதுகிறது.
உறையவைக்கப்பட்டும் உலர்த்தப்பட்ட நிலையிலும் உணவு வகைகள் பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்படுகின்றன. கலோரியும், எடையும் குறைவாக இருக்கும்படி இதனை தயாரிக்கின்றனர். அதேசமயம், உணவுவகைகள் சாப்பிடுவதற்கு சலித்துவிடாதபடி திருப்திகரமாக இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இப்படி உணவுகளை திட்டமிட்டு அமைப்பதன் மூலம் வீர ர்களின் மன, உடல் நலன் பாதுகாக்கப்படுகிறது. ”ஆய்வு செய்ய செல்லும் வீரர்களுக்கு, விண்வெளியில் அனைத்து விஷயங்களும் புதுமையாக இருக்கும். உணவு அப்படியன்றி, அவர்களுக்கு நன்கு அறிந்த பொருளாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம்” என்றார் ஆய்வாளர் டக்ளஸ்.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இலைத் தாவரங்களை வளர்ப்பதில் வெற்றி கண்டுள்ளனர். இதனால் உணவு வகைகளை நிறைய கொண்டு செல்லவேண்டிய அவசியம் இல்லை. ஊட்டச்சத்துக்களுக்காக டின் உணவுகளை மட்டும் கொஞ்சம் எடுத்துசென்றால் போதுமானது. செவ்வாய், நிலவு ஆகிய கோள்களுக்கான ஆராய்ச்சிக்கு போகும்போது வீரர்களுக்கான உணவுத்தேவையை இந்த முறையில் சமாளிக்கலாம். எதிர்காலத்தில் உணவுகளை விண்வெளிக்கு கொண்டு செல்லும் தேவை இருக்காது என்ற நிலையை எட்டுவோம் என்ற நம்பிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் உழைத்து வருகின்றனர்.
தகவல்
டிஸ்கவர் இதழ்
Building a astronaut diet, Discover 1.9.2021
கருத்துகள்
கருத்துரையிடுக