தாயுக்கும் சேயுக்கும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைப் போக்கும் அறக்கட்டளை!
அஸ்வினி, மகாராஷ்டிரத்தில் வசிக்கிறார். அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள திலக்நகரில் வாழும் இவருக்கு இப்போது அவரது குழந்தையின் வளர்ச்சி பற்றி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவே நேரம் போதவில்லை. ஒரு வயதாகும் அவரது பிள்ளையின் பெயர் சிவ்தேஜ். அவரது வயதுக்கு தோராயமாக இருக்கவேண்டிய எடை ஒன்பதரை கிலோ. ஆனால் அஸ்வினியின் பிள்ளையோ, பதினொன்றே முக்கால் கிலோ இருக்கிறான். உயரமும் அவனது வயதுக்கு கூடுதல். இதை எல்லாவற்றையும் விட அவன் ஆரோக்கியமாக இருக்கிறான்.
குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் உணவு உண்ண முடியாமல் வாந்தி எடுத்திருக்கிறது. மருத்துவமனையில் காட்ட அவர் தாயுக்கும் சேயுக்கும் உணவுத்திட்டத்தை வடிவமைத்து கொடுத்திருக்கிறார். அதன்பிறகுதான் குழந்தையின் வளர்ச்சி சிறக்கத் தொடங்கியிருக்கிறது.
ஒன்றிய அரசு குழந்தைகளுக்கு உணவில் இரும்புச்சத்து குறைந்து வருவதால் செயற்கை ஊட்டமேற்றிய அரிசியை பொது விநியோக முறையில் வழங்கத் தொடங்கியது. இது வெற்றியடையாமல் தோற்றுப்போனது ஒருபுறம் இருக்க, நடப்பாண்டில் அத்திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த இருக்கிறார்கள்.
அஸ்வினிக்கு குழந்தையின் நலம் காக்க ஸ்ரீமதி மாலதி தாகனுகர் டிரஸ்ட் எனும் அமைப்பு உதவியிருக்கிறது. இந்த அமைப்புதான் ஊட்டச்சத்து திட்டத்தை அஸ்வினிக்கு கொடுத்து உதவியது. இவர்கள் 2010 முதல் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க முயன்று வருகிறார்கள்.
பதினோராயிரம் கர்ப்பிணிகளுக்கு இந்த டிரஸ்ட் ஆலோசனைகளையும் கூடவே உணவு வகைகளையும் வழங்கி வருகிறது. குழந்தை பிறந்த ஆயிரம் நாட்களுக்கு தாயையும் சேயையும் கூட கண்காணித்து ஆலோசனைகளை வழங்குகிறார்கள். இதனால் யாருமே தீவிரமான ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு ஆளாகமாட்டார்கள்.
கூலித்தொழிலாளர்கள், கல்வி அறிவற்றவர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள். தினசரி பத்து குடும்பங்களை டிரஸ்டின் தன்னார்வலர்கள் சந்தித்து பேசுகிறார்கள். இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் உதவியோடு சார்ட்டுகளை தயாரித்து, ஆடியோ, வீடியோ வடிவிலும் பலருக்கும் ஊட்டச்சத்து பற்றி விழிப்புணர்வு செய்து வருகிறார்கள். மேலும் அரசு பணியாளர்களாக உள்ள ஆஷா பணியாளர்களுக்கும் இதுதொடர்பாக பயிற்சி அளிக்கிறார்கள். தாய்ப்பாலை குழந்தைக்கு ஆறுமாதம் தருவது பற்றியும் விழிப்புணர்வு ஊட்டுகிறார்கள்.
மேலும் வீட்டிலேயே வளர்க்கப்படும் காய்கறிகளை செயற்கை ஊட்டமேற்றிய அரிசியோடு சமைத்து சாப்பிடுவதற்கான ரெசிப்பிகளையும் கூட தயாரித்து வழங்கிவருகிறார்கள். மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், உத்தர்காண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஸ்ரீமதி டிரஸ்ட் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்தியா டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக