2021 ஆம் ஆண்டு இந்தியாவில் புழங்கிய வார்த்தைகள் ஒரு பார்வை!

 










2021 ஆம் ஆண்டு திகைப்பு, அதிர்ச்சி, பயம், தைரியம், நம்பிக்கை, நிம்ம்மி என ஏராளமான உணர்ச்சிகளை அடைந்திருப்போம். அதனை இப்போது திரும்பி பார்க்கும் நேரம். அதில் நாம் அதிகம் பயன்படுத்திய சில வார்த்தைகளை இப்போது பார்க்கலாம். 

கேலா ஹோப்

மேற்கு வங்கத்தின் அக்கா அதாவது தீதி சொன்ன ஸ்லோகன் இது. சொன்ன மாதிரியே அடித்து விளையாடினார். ஆனால் அவரை தேர்தலில் தோற்றதாக சொல்லி உளவியல் ரீதியான பாதிப்பை பாஜக ஏற்படுத்த முயன்றது. ஆனால் மீண்டும் நடந்த தேர்தலில் தீதி மாஸ் காட்டி வென்று தாமரையை பொசுக்கினார். பாஜகவிற்கு எதிரான போராட்டமாக இப்போது கட்சியை பல்வேறு மாநிலங்களிலும் விரிவாக்கி வருகிறார். காங்கிரஸூக்கு மாற்றாக திரிணாமூல் காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் பரவுகிறது. கோவாவில் பாஜகவிற்கு எதிராக இதே ஸ்லோகன் சற்று மாற்றம் பெற்று கேல் ஸட்லோ என்று மாற்றம் பெற்றிருக்கிறது. 

டூல்கிட்

விவசாயிகளின் போராட்டம், இயற்கையைக் காக்கும் போராட்டம், அதற்கான செயல்முறை, எப்படி போராடுவது என்ற திட்டங்களைத்தான் டூல் கிட் என்று சொல்லுவார்கள். இதனை தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து என்ற வகையில் பாஜக பார்த்தது. இப்படி தான் செய்வதை எதிர்த்த பெங்களூருவைச் சேர்ந்த இயற்கை செயல்பாட்டாளர் திஷாவை டெல்லியிலிருந்து காவல்துறையை அனுப்பி கைது செய்து, இயற்கை செயல்பாட்டாளர்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்தியது பாஜக அரசு. 

ஆனால் இயற்கை செயல்பாட்டாளர்கள் எதற்கு அஞ்சவில்லை. திஷா வை விடுதலை செய் என தெருவில் களமிறங்கி போராடினார்கள். 

இன்டர்மீடியேட்டரி

தரகு வேலை என மக்கள் அதிகார எழுத்தாளர்கள் எழுதுவார்கள். இருந்தாலும் நாம் நாகரிகமாக பேசவேண்டுமே? சமூக வலைத்தள நிறுவனங்கள் தங்களை இப்படி சொல்லிக்கொண்டன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களின் கருத்துகளை நாங்கள் இடைமுகமாக இணைக்கிறோம் என பூசி மெழுகினார்கள். ரவுண்டானாவைச் சுற்றி பஸ் ஓட்டினாலும் காசு சம்பாதிப்பதில் கருத்தாக இருந்தனர் மெட்டா நிறுவனத்தினர். 

செடிஷன்

அரசின் சட்டத்திற்கு எதிராக செய்யும் செயல்பாடுகளை பிரிட்டிஷ் அரசு செடிஷன் என்ற பிரிவில் சேர்த்து, போராடியவர்களை அடித்துப் பிரித்து சிறையில் தள்ளியது. அதேமனநிலையில் உள்ள பாஜக அரசினரும் தனது கருத்துகளுக்கு எதிராக மாற்றுக்கருத்துகளை முன்வைப்பவர்கள் மீது, அமைதி வழியில் போராடியவர்கள் மீது தேச துரோக குற்றச்சாட்டை சுமத்தி சிறையில் தள்ளி வருகிறது. கார்ட்டூன், ஜோக் சொன்னால் கூட இதேசட்டம் என அரசு நேரடியாகவே மிரட்டி வருகிறது. பாகிஸ்தான் வீர ர்கள் நன்றாக விளையாடியதைப் பாராட்டினால், கோவிட் -19 கோளாறுகளை புட்டு வைத்தால், அவ்வளவு ஏங்க... அரசின் செயல்பாடு இப்படி இருக்கிறதே விகடன் லெவலில் வருத்தப்பட்டு ஆலோசனை சொன்னால் கூட கை காப்புதான். 

ஒமிக்ரான்

புது வருஷத்தில் நாம் என்ன செய்யலாம் என ஸ்பார் மார்க்கெட்டில் டைரி வாங்க யோசிக்கும்போது, அந்த வருஷம் இந்த மனுசனை என்ன செய்யலாம் என யோசித்து வைத்திருக்கும். அப்படி ஒரு வெர்ஷன்தான் ஒமிக்ரான். கொரோனாவின் அடுத்த பதிப்பு. பூஸ்டர், ஜெனோம் சீக்வன்ஸ், வேரியன்ட் என இன்ன பிற வார்த்தைகளையும் தந்தி முதல் குங்குமம் வரையிலான நாளிதழ்களும், வார இதழ்களும் எழுதி சலித்தன. 

சிறப்பு ஆயுதப்படை சட்டம்

யாரை வேண்டுமானாலும் துப்பாக்கி உயர்த்தி சுடலாம், பெண்களை இழுத்துச்சென்று புணரலாம் என ராணுவத்தினருக்கு ஏராளமான அதிகாரங்களைக் கொடுத்த சட்டம். வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ளது. இதில் மக்கள் பாதிக்கப்பட்டு இறந்தபோது கூட இந்து ஆங்கிலம் போன்ற நாளிதழ்கள் ராணுவ வீரர்கள் சிலர் இறந்ததை அய்யோ பாவம் என்று கண்ணீர் வடித்தன. இந்தவகையில் தினத்தந்தி கூட அப்பாவி மக்கள் சுடப்பட்டனர் என்ற எழுதியது. இதனை நீக்கலாமா வேண்டாமா என்பதைப் பற்றி தேசிய அளவில் விவாதங்கள் நடந்தன.

கிரிப்டோகரன்சி

இதைப்பற்றி என்னவென்றே தெரியாமல் நிறைய கட்டுரைகளை தமிழ் நாளிதழ்கள் எழுதின. அரசு தனி டிஜிட்டல் கரன்சி தொடங்குவதாக செய்திகள் வந்தன. இதில் ஏழு கோடிக்கும் அதிகமாக இந்தியர்கள் முதலீடு செய்துள்ளதாக இந்தியா டுடே தனது இதழில் அட்டைப்பட கட்டுரையை வெளியிட்டது. வரி பிரச்னைக்காக எல்லோரும் கிரிப்டோகரன்சியை நாடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. தேசிய நாளிதழ்களில் கிரிப்டோகரன்சி கம்பெனிகள் முழுப்பக்க விளம்பரங்களை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினர். 


க்வாட்

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டுறவு வார்த்தை. இவர்கள் ஒன்றாக சேர்ந்து சீனாவை எதிர்க்கிறார்கள். நிலப்பரப்பு ரீதியான அரசியல் வார்த்தை இது. 

டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரையைத் தழுவியது. 






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்