நூல்களை தடை செய்வது என்றால் நாம் நாஜி ஜெர்மனி திசையில் நகர்கிறோம் என்று அர்த்தம்! - வினய் லால், பேராசிரியர்

 


பேராசிரியர் வினய் லால்







வினய்லால் 

பேராசிரியர், வரலாற்றுத்துறை கலிபோர்னியா பல்கலைக்கழகம்


சங் பரிவார் அமைப்புகள் வரலாற்றைத் திருத்தி எழுதுகின்றனர் என்ற பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். என்சிஇஆர்டி யில் கூட பாடத்திட்டங்களை மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஏன் இதனை யாருமே பெரியளவு எதிர்க்கவில்லை?

இதை கொஞ்சம் விரிவான பார்வையில் பார்க்க வேண்டும். வரலாற்றை திருத்தி மாற்றி எழுவது புதிதான விஷயமல்ல. அதிகாரத்தில் உள்ளவர்கள் காலம்தோறும் செய்து வரும் விஷயம்தான் இது. உலகம் முழுக்க நடைபெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் நடந்துள்ளது என நினைத்து அதிர்ச்சியாகவேண்டாம். நான் இதைப்பற்றி பல்லாண்டுகளுக்கு முன்னரே கேள்விகளை எழுப்பியுள்ளேன்.  2003இல் எழுதிய தி ஹிஸ்டரி ஆப் ஹிஸ்டரி பாலிடிக்ஸ் அண்ட் ஸ்காலர்ஷிப் இன் மாடர்ன் இந்தியா வரலாற்றை எழுதுவதில் உள்ள அரசியலைப் பற்றியது இந்த நூல். 

உலக நாடுகளில் உள்ள வரலாற்றுப் பாடல் என்பது எப்போது விவாத த்திற்குரியதாகவே இருந்து வருகிறது. இது நாம் சிந்திக்கும் முறையில் உள்ள பிரச்னை. இந்திய பத்திரிகையாளர்கள், உலகின் பிற பகுதிகளில் உள்ள விஷயங்களைப் பற்றி புரிந்துகொள்ள மாட்டேன்கிறார்கள். இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் நடந்துகொண்ட முறை, மன்னிப்பு கேட்டது என அனைத்துமே வரலாற்றில உள்ளது. ஆனால் அவர்களின் நூலில் அந்த நிகழ்ச்சி எப்படி குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பற்றிய சர்ச்சைகள், விவாதங்கள் இன்றும் நடந்து வருகின்றன. இதைப்போலத்தான் ஜெர்மனியும் கூட. 

இந்த நாடுகள் உலக நாடுகளிடம் மன்னிப்பு கோரியது அதன் பின்னால் உள்ள அரசியல் பற்றி நான் பேசப்போவதில்லை. மேலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அப்படித்தான் செய்வார்கள். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்ற நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு பேசவிரும்பவில்லை. நான் அதற்கான காரணங்களை மட்டுமே இங்கு சொல்லுகிறேன். இதுபோல வரலாற்றை திருத்தி எழுதி மாணவர்களுக்கு வழங்கும்போக்கு ஆபத்தானது. இதனை கவனமாக பார்ப்பது அவசியம். 

சங் பரிவாரங்கள் ஆர்யர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வரவில்லை என்பதை நிரூபிக்க வரலாற்றை மாற்றி வருகிறார்கள். ஆர்யர்கள் இடம்பெயர்ந்ததே இந்தியாவிலிருந்துதான் என்பதை நிரூபிக்க முயல்கிறார்கள். ஆனால் என்ன பிரயோஜனம் ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆர்யர்கள் பற்றி பேசும்போது முஸ்லீம்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அந்நியர்கள் என்று பேசுகிறார்கள், வன்முறையே ஏற்படுத்துகிறார்கள். 

இப்படி அவர்கள் பேசும்போது அறிவுஜீவிகள் ஏன் எந்த பதிலும் சொல்லுவதில்லை?

இந்தியாவில் உள்ள அறிவுசார் மக்கள் இதுபற்றி ஏதும் சொல்லவில்லை என்று கூற முடியாது. அவர்கள் கருத்துகளை கூறுகிறார்கள். ஆனால் அதனை இன்றைய ஒன்றிய அரசு கருத்தாக பார்ப்பதில்லை. சகித்துக்கொள்வதில்லை. அப்படி பேசுபவர்களை வேலையை விட்டு நீக்குகிறார்கள். சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புகிறார்கள். 

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைப் பாருங்கள். அங்கு இடது சாரி அமைப்புகளும், வலதுசாரி அமைப்புகளும் இரண்டுமே செயல்பட்டு வருகின்றன. ஆனால் அதனை இந்துத்துவ வாதிகள் இடதுசாரிகளின் கூடாரம் என்று சொல்லுகிறார்கள். இந்த பல்கலையில் நிறைய முக்கியமான தலைவர்கள் படித்து வந்தார்கள். அங்குள்ள இடதுசாரி வரலாற்று அறிஞர்கள், எழுத்தாளர்களை புறக்கணிக்கிறார்கள் அல்லது முடக்குகிறார்கள். கேரளத்தின் கண்ணூரில் இந்துத்துவ வாதிகள் பற்றிய பாடம் வைக்கப்பட்டதும் இந்த கண்ணோட்டத்தில்தான். 

அண்மையில் ஜவகர்லால் நேரு பல்கலையில் தீவிரவாதம் பற்றிய படிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதைப்பற்றி அறிந்தவுடனே அனைவருக்கும் தெரியும். இது முழுக்க இஸ்லாமியர்களின் தீவிரவாதம் பற்றி மட்டுமே பேசக்கூடியதென்று. இதில் வேறு ஒன்றையும் மாணவர்கள் கற்க முடியாது. இப்பாடத்தை கௌன்சிலும் துணை வேந்தரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆபத்தான கருத்துக்களை இதில் முன்வைக்கிறார்கள். 

துரதிர்ஷ்டவசமாக சங் பரிவார் அமைப்புகளின் செயல்பாடுகளில் இந்திய பல்கலைக்கழகங்கள் உலகமே பார்த்து சிரிக்கும் இடமாக மாறிவருகிறது. வயர், ஸ்க்ரோல் ஆகிய வலைத்தளங்கள் மட்டுமே இங்கு அதிகாரத்தை கேள்வி கேட்கும் ஊடக நிறுவனங்களாக மிஞ்சியுள்ளன. 

யாரும் எதிர்த்து இதனை கேள்வி கேட்கவில்லையே என்கிறீர்கள்? அப்படி பேசியர்களுக்கு என்ன நடந்தது என்பது முக்கியம். அவர்களை கடுமையாக சமூக வலைத்தளங்களில் சாடுகிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள். வீடுகளில் புகுந்து குண்டுவீசுகிறார்கள். தடை கலாசாரத்தை கொண்டு வருகிறார்கள் என வலது சாரி அமைப்புகள் தீவிரவாத தன்மையோடு செயல்படுகின்றன. 

இந்திய அரசு, ஒரே விதமான கல்வித்திட்டத்தை உருவாக்குவதாக செய்தி கிடைத்து வருகிறது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் என்றால் அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

ஒரேவிதமாக பாடத்திட்டம் என்பது மாணவர்களின் கல்விக்கு பேரிடராகவே முடியும். இந்த கல்விமுறையில் நாம் ரோபோட்டுகளைத்தான் உருவாக்க முடியும், மனிதர்களை இயல்பான முறையில் சிந்திக்க வைக்கமுடியாது. 

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்ததற்கும், நாம் சுதந்திரமடைந்ததற்கும் வேறுபாடுகள் உண்டு அல்லவா? இப்படி ஒரே விதமாக கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அந்த வேறுபாடே இருக்காது. சுயாட்சி என்பதே கேலிக்கூத்தாகிவிடும். 

இர்பான் ஹபீப், ஆர்.எஸ். சர்மா, ரோமிலா தாப்பர் ஆகியோர் நூல்களை பல்கலைக்கழகத்தில்  ஒதுக்குகிறார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது. இதைப்பற்றிய உங்கள் கருத்து?

பல்கலை நூலகங்களில் இருந்து மேற்சொன்ன எழுத்தாளர்கள், வரலாற்று அறிஞர்களின் நூல்களை அகற்றுவது என்பது நாஜிக்கள் ஜெர்மனியில் நூல்களை நெருப்பிட்டு எரித்தார்களே அதற்கு நிகரானது. நாம் நாஜிக்களின் திசை நோக்கி பயணிப்பது தவறானது. வரலாற்று அறிஞர்களின் நூல்களை பல்கலையிலிருந்து அகற்றுவது, நூலகங்களிலிருந்து விலக்குவது ஆகியவை தணிக்கை முறை சார்ந்த தவறு மட்டுமல்ல. நாஜிக்கள் ஹிட்லர் காலத்தில் நூல்களை குளிர்காய்வது போல குவித்து வைத்து எரித்தனர். அந்த திசை நோக்கி நாம் நகர்வதையே காட்டுகிறது. 

மத்திய கால வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கத் தொடங்கியிருக்கிறது அரசு. சில கல்வி நிறுவனங்கள் அவர்களாகவே இக்காலகட்ட வரலாற்றை பயிற்றுவிக்க கூடாது என்று உத்தரவிட்டு வருகிறார்கள். இதைப்பற்றி உங்கள் கருத்து?

இந்த விஷயங்கள் உண்மையாக நடந்தால் நாம் மற்றொரு பெரும் பிரச்னையில் சிக்கியுள்ளோம் என்றே அர்த்தம். முஸ்லீம் மன்னர்கள் ஆண்ட வரலாற்றை பாடநூல்களிலிருந்து அகற்ற முயல்கிறார்கள். அக்காலகட்ட வரலாறு முழுமையாக மறைக்கப்பட்டால், மாணவர்களுக்கு அந்த காலகட்டம் பற்றிய கேள்வி எழும். அப்போது என்ன நடந்தது என்று அவர்களுக்கு வரலாறு சார்ந்த குழப்பங்கள் எழுவது உறுதி. 

ஆர்எஸ்எஸ், பாஜக ஆகிய அமைப்புகள் இப்போதுதான் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களை நிர்வாகம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஐரோப்பிய காலகட்ட மத்திய காலம் இருண்டகாலம் என்பதால் அதனை அப்படியே நம்பியுள்ளனர். அதை காப்பியடித்து இந்தியாவிலும் அதே போல மாற்றுகிறார்கள். மத்தியகால இந்தியா என்பது ஐரோப்பா போல அல்லாமல் இங்கு கலை ,கல்வி என அனைத்துமே சிறப்பான வளர்ச்சிப் போக்கில்தான் இருந்தது. அதை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் கூறவேண்டும். 





பிரன்ட்லைன்

டிசம்பர் 3, 2021

அபிஷ் கே போஸ்

கருத்துகள்