உடலின் ஆரோக்கியத்தைக் கணிக்கும் நடைபாணி!
உடலின் ஆரோக்கியத்தைக் கணிக்கும் நடைபாணி!
ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை அவர் நடக்கும் நடையை வைத்து கணிக்க முடியுமா என உலக நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
நடந்துசெல்வது ஆரோக்கியத்தைக் காக்கும் என்று முன்பிருந்தே மக்களுக்கு கூறப்படுகிறது. ஆனால் மனிதர்களின் கையிலுள்ள கைரேகை எப்படி தனித்துவமானதோ அதேபோல ஒருவரின் நடந்துசெல்லும் பாணியும் வேறுபட்டது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நடக்கும்போது உடலிலுள்ள பலநூறு தசைகள் இயங்குகி்ன்றன.
பிரெஞ்சு நாவலாசிரியர் ஹானர் டி பால்சாக், 1832ஆம்ஆண்டு எழுதிய தி விகார் ஆப் டூர்ஸ் நாவலில், பெண்ணுடைய நடைக்கும் அவளது ஆளுமைக்கும் இடையில் உள்ள தொடர்பை எழுதியிருப்பார். இவரின் தியரி ஆஃப் வாக்கிங் என்ற நூலும் இந்த வகையில் முக்கியமானது. ’’ஒவ்வொரு மனிதரின் நடைபாணியும் பிறரிடமிருந்து மாறுபட்டது. அவர்களின் கை அசைவு, மூட்டுகளின் நகர்வு ஆகியவற்றை ஆராய்ந்து வருகிறோம்’’ என்கிறார் ஜெர்மனியின் கீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செபாஸ்டியன் ஹெய்ன்செல். சிசிடிவி கேமரா மூலம் ஒருவரின் நடைபாணியை பார்த்து குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளும் ஆய்வில் உள்ளன.
பெருந்தொற்று காரணமாக முகமறிதல் சோதனைகள் இனி பயன் அளிப்பது கடினம். முக கவசங்கள் இனி அனைத்து மக்களிடமும் இருக்கும். இந்நிலையில் ஒருவரின் நடை பாணியை கண்டறிவது பிரச்னையாக இருக்காது. இதற்கு முகத்தை தெளிவாக அறியும் துல்லியமும் தேவையில்லை. ஸ்காட்லாந்து அரசு, பயோமெட்ரிக் சோதனைகளில் ஒன்றாக இதனையும் இணைத்து மசோதாவை தயாரித்து வருகிறது.
சீனாவிலுள்ள வாட்ரிக்ஸ் என்று நிறுவனம், நடைபயிற்சி சார்ந்த ஆய்வில் இறங்கி, 94 சதவீத துல்லியத்தை எட்டியுள்ளது. மாஸ்டர் கார்டு நிறுவனம் போக்குவரத்து சேவையில் டிக்கெட் பெற்ற பயணிகளை அறிய நடை ஆய்வுகளை பயன்படுத்தி ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இந்தோனேஷியாவில் உள்ள அணுஉலை நிறுவனம், பாதுகாப்புக்காக ஒருவரின் நடை சார்ந்த வீடியோக்களை பதிவு செய்து வருகின்ற்ன. இதில் தனியுரிமை சார்ந்த சிக்கலும், ஒருவரின் அடையாளத்தை இன்னொருவர் பயன்படுத்தும் ஆபத்தும் உள்ளது.. அரசு முன்கூட்டியே இதற்கான சட்டங்களை உருவாக்குவது முக்கியம்.
ஒருவரின் நடைபாணியை வைத்து அவருக்கு ஏற்படும் நோய் பாதிப்பு அறியவும் மருத்துவமுறையில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் ஒருவரின் நடைபாணியை வைத்து பார்கின்சன் நோயைக் கண்டறிய முயன்று வருகின்றனர். நடக்கும்போது உடலில் ஏற்படும் தசைகளின் அசைவு வீடியோக்களாக பதியப்பட்டு நோயின் தன்மைகள் கண்டறியப்படுகின்றன.
தகவல்
NS
Walk this way
david adam
New Scientist
கருத்துகள்
கருத்துரையிடுக