விவசாயிகள், மத, ஜாதி வேறுபாடுகளை களைந்து ஒன்றாக இணைந்து வென்றிருக்கிறார்கள்! - சதேந்திரகுமார்

 
















சதேந்திர குமார்

சமூகவியலாளர்

இவர் ஜிபி பான்ட் சமூக அறிவியல் கழகத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இக்கழகம் அலகாபாத் பல்கலையின் ஓர் அங்கமாக உள்ளது. 



வேளாண்மை சட்டங்கள் மூன்றுமே திரும்ப பெறப்பட்டுள்ளன. விவசாய அமைப்புகளின் போராட்டம் வெற்றி பெற என்ன காரணம்?

 இந்த வெற்றிக்கு காரணம் இயக்கங்களின் பல்வேறு போராட்ட முறைகள்தான். அமைப்பை நிர்வாகம் செய்த தலைவர்களின் அணுகுமுறை, தகவல் தொடர்பு ஆகியவை முக்கியமான காரணம். நகரம் மட்டுமன்றி, கிராமப்புற  விவசாயிகளையும் போராட்டத்தில் பங்கெடுக்க வைத்தது முக்கியமானது. இந்த போராட்டத்தில் இளைஞர்களும் பெண்களும் பங்கெடுத்தனர். விவசாயிகள் போராட்டங்களில் இருந்தபோது, வீட்டிலுள்ள பிற குடும்ப உறுப்பினர்கள் நிலங்களில் விவசாயம் செய்துகொண்டிருந்தனர். இதுதான் போராட்டத்தை பெரும் ஊக்கமாக எடுத்துச்செல்ல உதவியது. பல்வேறு குரல்கள் ஒலிக்கும்படியான தேசிய அளவிலான இயக்கமாக விவசாயிகளின்போராட்டம் மாறியது இதனால்தான். 

கொரோனா பெருந்தொற்று போராட்டத்தை பாதித்ததா?

நகரங்களில் வேலை பார்த்து வந்த இளைஞர்கள், பெருந்தொற்று காரணமாக வேலைகளை இழந்தனர். இவர்களுக்கும் விவசாயத்திற்கும் நேரடியாக தொடர்பு கிடையாது. ஆனாலும் கூட இவர்கள் தங்களது குடும்ப பாரம்பரிய நிலங்களை நம்பியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். எனவே இவர்களும் விவசாய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதில் பங்கெடுத்தனர். அரசின் சட்டங்களால் தங்கள் நிலம் தங்களுக்கு கிடைக்காது என்பதை அறிந்த இளைஞர்கள் கடும் கோபம் கொண்டனர். இதன் காரணமாகவே நிலங்களில் விவசாயம் செய்யாவிட்டாலும் கூட போராட்டங்களில் பங்கெடுத்தனர். 

உத்தரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதியில் மக்களிடையே நிறைய பிரிவினைகள் உள்ளது. மதம், ஜாதி ஆகியவற்றைக் கடந்து எப்படி விவசாயிகள் என்ற அடையாளம் உருவானது?

2013ஆம் ஆண்டு அங்கு நிறைய எதிர்பார்க்காத துரதிர்ஷ்டமான சம்பவங்கள் நடைபெற்றது உண்மைதான். அங்கு கிராமப்புறத்தில் வாழும் மக்கள் மதவாத கருத்துகளாலும் சம்பவங்களாலும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முதலில் முஸ்லீம், இந்து ஆகியோர் தினசரி தேவைகளுக்காக ஒருவரையொருவர் சார்ந்து இருந்தனர். ஆனால் இப்போது மிஞ்சியிருப்பது பயம் மட்டுமே. ஆனால் 2016ஆம் ஆண்டு இரு மதத்தினருக்கும் இடையில் சிறிய அளவிலான சந்திப்புகள் நடைபெற்றன. கரும்புகளுக்கான தொகை வழங்கப்படாதது, விவசாய மின் கட்டணம் உயர்வு, பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் விவசாயிகள் என்ற அடையாளத்தில் ஒன்றாக அணிதிரண்டனர். 

சௌத்ரி சரண்சிங், மகேந்திர சிங் திக்கத் ஆகியோர் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நின்று வெற்றியை சாதித்து கொடுத்துள்ளனர். இதில் ஜாதி, மதம் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி வென்றுள்ளனர். 

இப்போது விவசாயி என்ற அடையாளம் மறு உயிர்ப்பு அளிக்கப்பட்டு உருவாகியிருக்கிறது. இது அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?

அதனை இப்போதே கூற முடியாது. விவசாயிகள் மதம், ஜாதி ஆகியவற்றை புறக்கணித்து தனி அமைப்பாக ஒன்றை தொடங்குவார்கள் என கருதலாம்.  இந்து முஸ்லீம்களை பிரிக்காமல் அங்கு அமைதியையும் வளர்ச்சியையும்  கொண்டு வருபவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. இப்படி ஒரு அமைப்பு உருவானால் தேசிய அளவில் செயல்பட்டு வரும் கட்சிகளுக்கு பின்னடைவாக அமையும். அரசியலமைப்புச்சட்டம், அதிகாரம் ஆகியவற்றை தேசிய கட்சிகள் இனி சாதாரண மக்களுக்கு மறுக்க முடியாது. 

விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாடுகளில் உள்ளவர்கள் கூட ஆதரவு தெரிவித்திருக்கிறார்களே? எப்படி?

நிலம் என்பது உரிமை என்பதோடு மட்டுமல்லாமல் அது ஒருவரின் பாரம்பரிய அடையாளமாகவும் உள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் அது நினைவில் அழியாமல் பசுமையாக உள்ளது. எனவே விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவிக்கிறார்கள். புதிய வேளாண் சட்டங்கள் அவர்களின் விவசாய நிலத்தை பாதிக்கும், அடையாளத்தை அழித்துவிடும் என்பதை கனடா, ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்கள் அறிந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

அந்தோலன் ஜீவி, காலிஸ்தானி போராளிகள் என விவசாயிகளை ஒன்றிய அரசு அவதூறு செய்தது பற்றி விவசாயிகள் என்ன நினைக்கின்றனர்?

இப்படி அவதூறுகளை பரப்பியது ஒன்றிய அரசுக்கு ஆதரவாக கருத்துகளை பரப்பும் வலது சாரி ஆட்கள்தான். இவர்கள் ஊடகங்களில் இப்படி உண்மைக்கு புறம்பான கருத்துகளை சொல்லி விவசாயிகளை பிரித்துவிட நினைத்தனர். ஆனால் விவசாயிகள் கட்டுப்பாடாக இருந்து வென்றனர். அவர்கள் தங்கள் போராட்ட பதாதைகளில் கூட விவசாயம் சார்ந்த கருத்துகளை மட்டுமே தெரிவித்தனர். 

டைம்ஸ் ஆப் இந்தியா 

ஹிமான்சு தவான்

 


 

கருத்துகள்