தொழில்நுட்பத்தில் மேற்கு நாடுகளை மிஞ்சும் சீனா! - எப்படி சாத்தியமாகிறது?

 













தொழில்நுட்பத்தில் சிறந்த சீனா!


சீன அரசு, தானியங்கி தொழில்நுட்பங்களை உருவாக்கி தனது நாட்டில் உற்பத்தி திறனை அதிகரித்து வருகிறது.  

2010ஆம் ஆண்டு சீனாவில் தொழில்துறை சார்ந்த ரோபோக்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரமாக இருந்தது. ஆனால் இன்று அதன் எண்ணிக்கை எட்டு லட்சத்திற்கும் அதிகம். உலகில் மூன்றில் ஒரு ரோபோ என்ற கணக்கில் சீனா, உற்பத்திதிறனில் முன்னிலையில் உள்ளது. உற்பத்திதிறனை தொடர்ச்சியாக அதிகரிப்பதன் வழியாக சீனா, செல்வச்செழிப்பான நாடாக வளர்ந்து வருவதோடு பணியாளர்களின் ஊதியமும் கூடி வருகிறது. 

முன்பு ஆண்டிற்கு ஆயிரம் டாலர்கள் என்றிருந்த பணியாளர்களின் ஊதியம், இன்று பத்து மடங்காக அதிகரித்துள்ளது. தானியங்கி தொழில்நுட்பங்களின் வரவால், பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து ரோபோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீன அதிபர் ஜின் பிங், இந்த முறையில் உற்பத்தி திறனை அதிகரிக்கலாம் என்பதை அடையாளம் கொண்டு கொள்கைகளை  உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். 

பொருளாதார வளர்ச்சியில் மூன்று அடிப்படைகள் உள்ளன. ஒன்று, எத்தனை பணியாளர்கள் வேலை செய்கின்றனர், முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை, பணியாளர்களின் உற்பத்திதிறன் எவ்வளவு என்பதே அவை. சீனாவில் இந்த மூன்று அம்சங்களும் சிறப்பாக உள்ளதால் பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. தொழில்துறையில் நிறுவனங்களுக்கு இடையில் போட்டி உள்ளதால் உற்பத்திதிறனும் கூடியுள்ளது. பணியாளர்கள் அதிக சம்பளம் தரும் நிறுவனங்களை தேர்ந்தெடுக்க முடிகிறது. 

1980 முதல் 2010 வரையிலான சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 10 சதவீதமாக இருந்தது. கடந்த பத்தாண்டுகளாக  பொருளாதார வளர்ச்சி பெரிதாக வளரவில்லை. மத்திய வங்கி, வளர்ச்சி அளவை 5.5 சதவீதம் என்று கூறியுள்ளது. மக்கள்தொகை அளவும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வளர்ச்சி வேகமாகி வருகிறது. சீனா வாங்கியுள்ள கடன் மதிப்புக்கு, இப்போது பின்பற்றும் பொருளாதார மாடல் உதவாது என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொதுமுடக்கம் பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளது. இந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், உற்பத்திதிறனை அதிகரிக்கும் கொள்கைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. சீனா, உள்நாட்டுத் தொழிற்சாலைகளை நவீனமயமாக்கி, நாட்டை தன்னிறைவு பெற்றதாக மாற்றி வருகிறது. இதன்மூலம் அமெரிக்காவை வணிகப்போட்டியில் எளிதாக எதிர்கொள்ள முடியும். மேக் இன் சீனா 2025 திட்டப்படி, தொழிற்சாலைகளை மேம்படுத்துவது, புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவது என சீன அரசு திட்டமிட்டு வருகிறது. 

தொழிற்சாலைகளை நவீனப்படுத்துவதற்கான மானிய உதவிகளை அரசே வழங்கி வருகிறது. ஜெர்மனி, ஜப்பான் நாடுகளை விட சீனா பொருட்கள் உற்பத்தியில் உயரத்தில் உள்ளது. நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்கு மட்டுமே 25 சதவீதமாக உள்ளது. ஒழுங்கற்று உருவான நகரங்களை இணைத்து போக்குவரத்தில் அவற்றை ஒன்றாக இணைப்பதை சீன அரசு இப்போது செய்து வருகிறது. இதன்மூலம் நகரமயமாக்கலை விரைவுபடுத்துவதோடு, போக்குவரத்து பிரச்னைகளையும் சீராக்க முடியும்.  கல்வி, தற்சார்பு தொழில் என பல்வேறு துறைகளிலும் கொள்கைகளை வளர்த்து சீனா செயல்பட்டு வருவதன் பயன், பின்னர்தான் கிடைக்கும். 



தகவல்

எகனாமிஸ்ட்

the automatic for the people 14.8.2021


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்