பெருநிறுவனங்களின் போட்டாபோட்டி!

 


பெருநிறுவனங்களின் போட்டாபோட்டி!


உலகம் முழுவதும் மக்களுக்கான சுதந்திரத்தன்மையை, இணையம் வழங்கியுள்ளது. இதில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள் அதன் கட்டற்ற தன்மையை தடுத்து வருகின்றன. டெக் உலகில் கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், ஆப்பிள், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் முக்கியமானவை. இந்த பெரு நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் இத்துறையில் போட்டியிடுவதை தடுத்து வருகி்ன்றன என்ற குற்றச்சாட்டு இப்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள், டெக் நிறுவனங்களுக்கு எதிரான சட்டப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


கூகுளின் சர்ச் எஞ்சின் வழியாக தேடும் தகவல்களில் பெரும்பாலானவை, கூகுளின் நிறுவனங்களிலிருந்து வழங்கும் சேவையாகவே உள்ளது என புகார்கள் கூறப்படுகிறது. மக்கள், பிற வலைத்தளங்களை விட கூகுளின் தளங்களை விட்டு வேறு தளங்களுக்கு செல்லாதபடி இந்த நிறுவனம் பார்த்துக்கொள்வதாக கூறப்படுகிறது. இதுபற்றி, தி மார்க்அப் என்ற நிறுவனம் இணையவழியில் ஆய்வை மேற்கொண்டது. இதன்படி கிடைத்த 15 ஆயிரம் முடிவுகளை சோதித்ததில் கூகுள் சர்ச் எஞ்சின் காட்டும் முதல்பக்க முடிவுகளில் 41 சதவீதம் அதன் சேவை வழங்கும் தளங்களாகவே இருப்பது தெரிய வந்துள்ளது. அமேசான், மக்களின் பல்வேறு தகவல்களை அல்காரிதம் மூலம் சேகரித்து எந்தெந்த பொருட்களை விற்கலாம் என முடிவெடுக்கிறது. ஃபேஸ்புக், நேரடியாக தனது பணபலம் மூலம் போட்டி நிறுவனங்களை முடக்கி அவற்றை வாங்கிவிடுகிறது என புகார்கள் எழத்தொடங்கியுள்ளன.


அமெரிக்காவில் டேவிட் சிசிலின் என்ற நாடாளுமன்ற உறுப்பினர், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இ்ந்த விவகாரத்தில் முக்கியமானது. போட்டி நிறுவனங்களை அழிக்கும் பெரு நிறுவனங்கள் மீதான விசாரணை ஜூலை 2019இல் தொடங்கியது. நிறுவனங்களின் இயக்குநர்கள் இதில் பங்கேற்று தங்கள் தரப்பை முனவைத்தனர். ‘’’இந்த பெருநிறுவனங்கள், முதலிடத்தைப் பெற வணிக விதிகளை மீறியுள்ளன. மேலும், இவை அரசு மூலம் முறையாக வரைமுறைப்படுத்தப்படவேண்டும்’’ என்றும் சிசிலின் கூறினார்.


அமெரிக்காவிலுள்ள மத்திய வணிக கமிஷன் மற்றும் நீதித்துறை இந்த வழக்குகளை விசாரித்து வருகின்றன. வழக்கின் இறுதியில் கூகுள், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்களின் மீதான குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா என்பதை உலகம் அறியும். ஆஸ்திரேலியாவில் கூகுள், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் அங்குள்ள ஊடக நிறுவனங்களிலிருந்து பெறும் செய்திகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு அந்நிறுவனங்கள் மறுத்துவருகின்றன. பிரான்சில் கூகுள் நிறுவனம், தனது தேடுதல் பக்கங்களில் செய்திகளை, அந்நாட்டிலுள்ள ஊடக நிறுவனங்களுக்கு கட்டணம் வழங்காமல் வெளியிட்டு வருகிறது.


இந்தியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், போட்டிக்கமிஷன் துறை, கூகுள் நிறு்வனம் பற்றிய புகாரை விசாரித்தது. இதில் கூகுள் தனது சர்ச் எஞ்சின் முடிவுகளில் பாகுபாடு காட்டி பயனர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதை உறுதிப்படுத்தியது. இதற்காக அந்நிறுவனத்திற்கு 135.86 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தியாவில் இ விற்பனை வலைத்தளங்களான அமேஸான், வால்மார்ட்- ஃபிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் நேரடியாக பொருட்களை விற்பனை செய்ய தடை(2016படி) உள்ளது. ஆனால் அந்நிறுவனங்கள் அரசின் விதியை பொருட்படுத்தாமல் ஏராளமான பொருட்களை தாங்களே நேரடியாக விற்று வருகின்றன. அகில இந்திய இணைய விற்பனையாளர்கள் சங்கம் இதுபற்றி புகார்களை அளித்தும், போட்டிக் கமிஷன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இணைய விற்பனைத்தளங்களில் விற்பனை முறைகளில் எந்த தவறும் இல்லை என்று கூறிவிட்டது.


விரைவில் இந்திய அரசு, பெரு நிறுவனங்களின் வியாபார முறைகளை முறைப்படுத்தாதபோது, உள்நாட்டு வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


தகவல்

FS






கருத்துகள்