புத்தக வாசிப்பு வட்டமா? அப்ஸ்காண்ட் ஆயிருங்க ப்ரோ!- மயிலாப்பூர் டைம்ஸ்
மயிலாப்பூர் டைம்ஸ்!
நமக்கான பிரச்னைகள் நாம் செய்யும் செயலால் உருவாகிறது என்று சொல்லுவார்கள். எனக்கும் அப்படித்தான் நடக்கிறது. என்ன அதன் டிசைன்தான் கொஞ்சம் வேறுவடிவில் இருக்கிறது. சில பல ஆண்டுகளுக்கு முன்னரே புத்தக வாசிப்பு, விமர்சன கூட்டங்களுக்கு போவது வேண்டாம் என்ற முடிவெடுத்தேன். அதற்கு காரணம், அரைகுறையாக படித்துவிட்டு அந்த கூட்டத்திற்கு வருபவர்களும், எழுத்தாளரை கேள்வி கேட்டால்போதும் அவரை மடக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சினிமாவில் இயங்கும் உதவி இயக்குநர்களும்தான். இப்படி இலக்கிய அக்கறையைக் காட்டிக்கொண்டாலும் இவர்கள் படம் எடுக்கும்போது கதை என்ற தலைப்பில் தனது பெயரை மட்டுமே போட்டுக்கொள்வார்கள் என்பதை தனியாக சொல்லவேண்டியதில்லை.
எங்கேயோ சிக்கிக்கொண்ட கதையைத்தானே சொல்ல வருகிறாய் என இந்நேரம் யோசித்திருப்பீர்கள். அதேதான். மோசமான டைமிங்கில் மாட்டிக்கொண்ட சம்பவம். எனது மடிக்கணினி அடிக்கடி பிடிவாதம் பிடித்த குழந்தையாக வேலை செய்யமாட்டேன் என அடம்பிடித்துக்கொண்டிருந்தது. எனவே இதனை வாங்கிக்கொடுத்த டெக் நண்பரிடம் உதவி கேட்டேன். அவரைப் பொறுத்தவரை இதெல்லாம் ஒரு விஷயமா என்ற ரீதியில் எனது கேஸை எடுத்துக்கொண்டார். அவரது வேலை காரணமாக, வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் மாறிக்கொண்டிருந்ததால் என்னால் அவரை மிகவும் வற்புறுத்தி ஏதும் சொல்ல முடியவில்லை. உதவி கிடைத்தால் போதும். அது எப்படி வந்தால் என்ன என்று நினைத்தேன். வன்பொருளோ, மென்பொருளோ எது பழுதானாலும் அதனை பற்றி சொல்லுங்கள். அதற்கான தொகையை தந்துவிடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். இதில் தான் திடீரென டெக் நண்பரின் நண்பர் உதவிக்கு வந்தார்.
இவரிடம் முன்னமே சில முறை பேசியிருக்கிறேன் என்றாலும் பேச்சில் இருவருக்குமே ஒத்துவரவில்லை. நான் டெத்பெட்டில் இருக்கிறேங்க என்றால் அவருக்கு சேத்துபட்டுங்கறது ரொம்ப தூரங்க. நீங்க இங்க வந்து லேப்பை கொடுங்களேன் என கேட்டது. இப்படியே பேசி சில லேண்ட்மார்க்கை மாற்றி மாற்றி சொன்னார். காதில் பிரச்னையா, இல்லை பேசும் வாயில்தான் கோளாறா என நினைக்கும்படி சம்பவங்கள் நடந்தன.பிறகு சில ஆண்டுகள் கழித்து சந்தித்தோம். இம்முறையும் லேப்பை வாங்க வரச்சொல்லி ராயப்பேட்டை அஜந்தா என்ற இடத்தை சொன்னால் அவர், ரீஜெண்டா ஹோட்டலைத் தாண்டி இன்னொரு இடத்தை சொல்லி அதை அடையாளம் காட்டினார். அடையாளம் சொன்னவருக்கு அங்கு நடக்கும் புத்தக கம்பெனி பெயர் தெரியவில்லை. நமக்கு தெரியாது என்பதை மறைக்க அடுத்தவருக்கு இது கூட தெரியாதா என்று சொன்னால் வேலை முடிந்தது. அடடா.. என உச்சுகொட்டிக் கொள்வோம் இல்லையா, அப்படியானது என் நிலை.
கணினியைக் கொடுத்தது கூட பெரிய விஷயம் இல்லை. வாங்கிக்கொண்டவர், புத்தக வாசிப்பு இங்கதான் அருகில் நடக்கிறது என ஐஸ் ஹவுஸ் இடத்தைக் குறிப்பிட்டு பிரபல மருத்துவமனையையும் அடையாளம் காட்டினார். ஆனால் எனக்கு இதெல்லாம் எப்படி நடக்கும் என்பதை தெரிந்ததால், எனக்கு ஒருநாள் தான் லீவு என்னால் வரமுடியாது என்று சொன்னேன். மாசம் ஒருநாள்தான் கூட்டம். நிச்சயம் வரலாம் என்றார். அந்த வார ஞாயிறு அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என நான் கனவு கூட காணவில்லை. வடபழனியில் போரம் மாலின் பின்புறம் பூங்கா ஒன்று இருக்கிறது. அங்குதான் நானும் நண்பரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இதெல்லாம் காலை வேளை சம்பவங்கள். அப்போதுதான் போனில் குறுஞ்செய்தி வந்திருந்தது. அதில் ஆய்வு நூல் ஒன்றை போட்டிருந்தார்கள். சரி முக்கியமான நூல் போல. அதனை வாசிப்பு ஆர்வம் கொண்டவர்கள் பேசுவார்கள். நமக்கும் இதில் கலந்துகொண்டால் விஷயங்கள் ஏதாவது கிடைக்கும் என்று நினைத்தேன். அது எவ்வளவு பெரிய் பேராசை என்று அப்புறம்தான் தெரிந்தது.
திசையைக் கண்டுபிடிப்பதால் எனக்கு அ.முத்துலிங்கம் போலவே நிறைய பிரச்னை. மிகச்சரியாக தவறான இடத்திற்கு போய்விடுவேன். அப்புறம் என்ன ரவுண்டானாவை சுற்றி பஸ் ஓட்டுவது போல சுற்றி வந்து சரியான இடத்தை கண்டுபிடிப்பேன். இதனால் காமராஜர் சாலையில் வசித்து வந்த அனிமேஷன் துறை நண்பர் ஒருவரைக் கூட்டிக்கொண்டேன். இருள் சினிமாக்களை விரும்பி பார்ப்பவர், சீசனுக்கு குறிப்பிட்ட நம்பிக்கைகளை பின்பற்றிக்கொண்டிருப்பார். இந்த சீசனில் கடவுள் நம்பிக்கை வேண்டாம் என முடிவெடுத்திருந்தார். அவரை அழைத்துக்கொண்டு சென்றேன். முதலில் தயங்கியவர், அங்கு சென்றால் கட்டாயப்படுத்தி என்னென்ன செய்ய வைப்பார்கள் என ஓரளவு யூகித்து சொன்னார். ஆனாலும் நான் வம்படியாக அழைத்து சென்றேன்.
அவர் சொன்னதுதான் அந்த இடத்தில் நடந்தது. என்ன அப்படி நடந்த விஷயங்களில் அவரையும் பங்கேற்க வைத்ததுதான் என்னுடைய வேலை. நான்கு மணிக்கு சென்ற விழா, 4.45க்கு நடைபெற்றது. எனக்கு நேரம் வீணாணது பெரிய வருத்தமாக மாறத் தொடங்கி, கிளம்பிவிடலாமா என்று தோன்றியது. அப்போதுதான் அடுத்த வெடிகுண்டு வெடித்தது. மசூதி அருகே நடந்த கூட்டம் நடந்த இடம், ஒரு கட்சி அலுவலகம். அதுவும் மதரீதியான கட்சி. சுற்றுப்புறத்தைப் பார்த்த எனது நண்பர் கண்ணில் இப்படி மாட்டிவிட்டுவிட்டாயே என்ற கோபம் கண்ணில் தெரிந்தது. கணினியை வேறு இங்கு கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று டெக் நண்பருக்கு நண்பர் சொன்னது நினைவில் இருந்தது. அதை எப்படி சொல்வது?
பாங்கு சத்தம் ஒலித்ததும் அங்கிருந்த இருவரும் தொழுகையை முடித்துவிட்டு தொடங்கலாம் என்றார்கள். பிறகு அடுத்தடுத்து வந்தவர்களும் தொழுகையில் கலந்துகொண்டனர். நான் மட்டும் தனியாக சேரில் உட்கார்ந்து அங்கு நடந்தவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். குறிப்பிட்ட லயத்தில் உடற்பயிற்சி செய்யப்படுவதாக எனக்குத் தோன்றியது. எனக்கு தோன்றியதெல்லாம் அடுத்த பாங்கு ஒலிக்குள் கூட்டம் முடியுமா என்பதுதான். இதற்குள் இரண்டு முறை போன் செய்த டெக் நண்பர், விரைவில் கூட்டத்திற்கு வருகிறேன் என பேசினார்.
நிதானமாக அங்கு வந்து சேர்ந்தவர்கள் யாரும் மருந்துக்கு கூட தாமதமாகிவிட்டது என கூறவில்லை. அது அங்கு மிக இயல்பாக நடக்கிற விஷயம் போல நடந்துகொண்டனர். பிறகு, முக்கியமான விஷயம் அங்கு பேசியபோது தெரிந்தது. நூலை முழுதாக படித்தவர்கள் எட்டுபேரில் மூன்று பேர்தான். பேசியவர்கள் பலரும் நூலில் கூறப்பட்ட விஷயங்கள் தாண்டி, அப்படி செய்திருக்கலாம். ஏன் இப்படி நடந்தது என்ற ரீதியில் பேசத் தொடங்கினார்கள். அதிலும் வழுக்கையாக இருந்த டிஷர்ட் பேர்வழி, வாசிப்பு, வாசிப்பின் மேன்மை என கொடைக்கானல் ரேடியோவில் சாப்பிட்டுவிட்டு பல் குத்தும்போது பேசும் விஷயங்களையெல்லாம் பேசத் தொடங்கிவிட்டார். இதுவே பதினைந்து நிமிடங்களுக்கு நீண்டது. பாயில் உட்கார்ந்திருந்த எனக்கு கால் வலிக்கத் தொடங்கியது. இறுதியில் நூலை அவர் படிக்கவில்லை, இப்போதுதான் செய்தியை பேஸ்புக்கில் பார்த்தேன் என ஒப்புக்கொண்டார். இந்த வாக்குமூலத்தைப் பெற 15 நிமிடங்கள் செலவாகிவிட்டது. கூட்டத்தை நடத்தியவர் புத்தக கடை உரிமையாளராம். அனைத்தும் என்னால்தான் நடக்கிறது. நானே அனைத்துக்கும் சூத்ரதாரி என்பதை சொல்லாமல் சொல்வது போல நடுவில் உட்கார்ந்திருந்தார். கூட்டத்தை நடத்துவர் அவர்தான் என்று புரிந்தது. கொஞ்சம் பொறுப்போடு நடந்தால் கூட்டம் நன்றாக இருந்திருக்கும்.
அன்று கூட்டத்திற்கு வந்தவர்கள் அனைவருமே முஸ்லீம்கள். எடுத்துக்கொண்ட நூலும் அவர்களுக்கானது. இதில் பொதுவானவர்கள் பங்கேற்க என்ன இருக்கிறது.பேசியவர்கள் மெல்ல அம்பேத்கர், விசிக தலைவர் திருமாவளவன் என நிறைய விஷயங்களை பேசிக்கொண்டே போனார்கள். என்னை அழைத்த நண்பர், நூலை வைத்து நிறைய படங்கள் எடுக்கலாம், விரித்து எழுதினால் இன்னும் நிறைய நூல்கள் வரும் என அரிய தகவல்கள் பகிர்ந்தார். அவரது பிரிவு பற்றி மட்டும் படித்துவிட்டு வந்திருந்தார். அதனையும் பெருமையாக கூட்டத்தில் பகிர்ந்தார். எனது நிலை எப்படியிருக்கும் என்று பாருங்கள்.
நாலுமணிக்கு சென்று ஆறுமணிக்கு பாங்கு ஒலித்தபோதுதான் கூட்டம் முடிந்தது. இன்னும் பேசலாம் என டீ குடிக்க கீழே இறங்கினார். எனது அருகிலிருந்த நண்பரோ, இன்னுமா என பீதியானவர் வாங்க அப்படியே ரோட்டை கிராஸ் செய்து ஓடிவிடுவோம் என்று சொன்னார். அவர் சொன்னதை பின்பற்றியதால்தான் அன்று நடந்த சேதாரத்திலிருந்து கொஞ்சமேனும் மீண்டோம். கூடவே போன் நம்பரை வாசிப்பு வட்டத்தில் இணைக்கிறோம் என்று வேறு பயமுறுத்தினார்கள். ஆகா எல்லை கடந்த தீவிரவாதமாக இருக்கிறதே என்று நினைத்தபோது, நாங்கள் நாவல்களை எடுத்துக்கூட பேசுவோம் என்றார். அவர் சொன்ன அனைத்து நூல்களுமே அவர்களுடைய மத விஷயங்களைப் பேசுபவை. இதில் பேச, விவாதிக்க என்ன இருக்கிறது? தொழுகை செய்துவிட்டு டீ குடித்துவிட்டு நகர்ந்துவிடவேண்டியதுதான். செய்யவேண்டிய சொந்த வேலைகளே மூன்று லாரிகள் வைத்து அள்ளும்படி இருக்கிறது? இதில் மத முன்னேற்றம் வேறு எனக்கு தேவையா? என என்னை நானே கேட்டுக்கொண்டேன். நான் கூட்டிச்சென்ற நண்பரை அன்றைக்கு மட்டும் ஆத்திகராக்கியிருந்தேன். அதற்கு பருப்பு போளி வாங்கிக்கொடுத்து மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். அதற்கு பதிலாக அவர் டீ வாங்கிக் கொடுத்து நான் கோடம்பாக்கத்திற்கு வாடகைக்கு போகிறேன். இனி உன்னைப் பார்க்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமையை இனி என்னால் எந்நாளும் மறக்க முடியாது
அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக