பாரம்பரிய பயிர்களை நடவு செய்யும் விவசாயி!

 








சிவகங்கையில் வாழும் விவசாயியான கண்ணன், அங்குள்ள விவசாயிகளுக்காக அறுவடைத்திருவிழாவை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார். இதன் நோக்கமே, பாரம்பரிய நெற்பயிர்களை விவசாயிகளிடம் கொண்டுபோய் சேர்ப்பதுதான். 

பொறியாளராக பணியாற்றி வந்த கண்ணன் எப்போது விவசாயி ஆனார், அவர் நடவு குறித்த ஏராளமான விஷயங்களை சொல்வார் என யாருமே நினைத்து பார்த்திருக்க முடியாது. ஆனால் இன்று சூழல் அப்படித்தான் இருக்கிறது. விவசாயம் பற்றி நுட்ப நுணுக்கங்களை கண்ணன் கற்றுக்கொண்டதே ஜனவரி 2018லிருந்துதான் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். 

சென்னையில் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக இருந்தவர், 9 டூ 6 மணி வேலையை விட்டு வருவார் என யாருக்கு தெரியும்? கண்ணனுக்கே சொன்னால் கூட நம்பியிருக்க மாட்டார். கண்ணனின் அப்பா காலமானபிறகு, அவரின் தந்தையும் தாத்தாவுமான அழகுகோனார்  கண்ணன் கிராமத்திற்கு வந்து விவசாயம் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். அவரது ஆசைப்படி சென்னையில் செய்து வந்த வேலையைவிட்டு விட்டு அம்மா இந்திரா, தம்பி பாலசுப்பிரமணியத்துடன் கிராமத்திற்கு வந்துவிட்டார் கண்ணன். 

கட்டுமான இயந்திரங்களை இயக்கி பழகியவர் கண்ணன். ஆனால் விவசாய விஷயங்களை பற்றி அ முதல் ஃ வரை ஏதுமே தெரியாது. இதற்கு உதவிக்கு வந்தார் அவரது மாமா போஸ். பத்தரக்குடியில் வாழ்ந்த அவர், கண்ணனுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி கொடுத்தார். 

முதல் ஆண்டு நிலத்தில் போஸ் வேலை செய்ய, கண்ணன் அவர் செய்வதை கவனித்தார். அடுத்த ஆண்டு நிலத்தில் வேலையை தானே செய்யத் தொடங்கினார். மாமா சின்ன சின்ன ஆலோசனைகளை மட்டுமே சொன்னார். மூன்றாம் ஆண்டில் முழுமையாக அனைத்து வேலைகளையும் கண்ணனே செய்யத் தொடங்கிவிட்டார். மாமா போஸ் வெறும் மேற்பார்வை மட்டுமே செய்திருக்கிறார். 

தொடக்கத்தில் கண்ணனும் கலப்பின பயிர்களைத்தான் நிலத்தில் விளைத்து வந்திருக்கிறார். பிறகுதான் மெல்ல பாரம்பரிய நெற்பயிர் ரகங்களை பயிரிடத் தொடங்கினார்.  மாலகுசம்பா, கருப்புக்கவுளி, செம்புளிசம்பா, அறுபதாம் குறுவை, கருத்தகார், சின்னார், சீரகசம்பா, கல்லுருண்டை, குள்ளகார் ஆகிய ரகங்களை தனது நிலத்தில் பயிர் செய்தார். 

அவரது கிராமத்தில் இயற்கை விவசாயத்தை செய்யும் விவசாயி இப்போதைக்கு கண்ணன் மட்டுமே. வாட்ஸ்அப்பில் விவசாயிகளுக்கான தனி குழுவை தொடங்கி சிலர் இயங்க, அதில் இயங்கிய கண்ணன் அங்கு ஐடியாக்களை பகிர்ந்துகொண்டு இயங்கி வருகிறார். பாரம்பரிய நெற்பயிர்களை விளைத்து உடனே பயன்களை எதிர்பார்க்க கூடாது. பொறுமை இருந்தால் மட்டுமே தகுந்த பயன்களை பெற முடியும் என ஆலோசனை சொல்லுகிறார் கண்ணன். 

இப்போது இயற்கை விவசாய அரிசிகளுக்கான தேவை அதிகம் இருக்கிறது. ஆனால் அந்தளவு உற்பத்தி செய்வது கடினம். நான்கு ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் கண்ணன் இப்போது தனது வயலுக்கு தேவையான இயற்கை உரங்களையும் தயாரித்துக்கொள்கிறார். எதிர்காலத்தில் பாரம்பரிய நெற்பயிர் ரகங்களை தெரியாதவர்கள் கூட அதனை அறிந்து விளைவிப்பார்கள் என கண்ணன் நம்பிக்கையோடு தனது பணியை செய்து வருகிறார். 

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

விக்னேஷ் 





  

கருத்துகள்