கனவுகளின் மீது கவனம் குவிக்கும் மேற்கு நாடுகள்! - கற்றதும் பெற்றதும் என்ன?

 








கனவுகளின் ஆராய்ச்சி!


கனவுகளை தானே கட்டமைக்கும் லூசிட் முறையில் கற்றலையும் புதுமைத்திறனையும் அதிகரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை செய்து வருகின்றனர். 

விண்வெளிக்கு சுற்றுலா சென்றுவருவது, சூரியனுக்கு விண்கலங்களை அனுப்புவது வரையில் முடியாத விஷயங்களே விஞ்ஞானிகளுக்கு கிடையாது. ஆனால் அவர்களையும் குழப்ப வைக்கும் விஷயம், கனவுகள்தான். நம் அனைவருக்கும் தூங்கும்போது வரும் கனவுகளைத் தான் இங்கு சொல்லுகிறோம். இந்த கனவுகள் அன்றாட நிகழ்ச்சிகள் அல்லது நிறைவேறாத ஆசைகளை அடிப்படையாக கொண்டிருக்கலாம். இவற்றை ஆய்வு செய்து உண்மையான துல்லியத்துடன் கனவுகளை பார்க்க அறிவியலாளர்கள் முயன்று வருகின்றனர். 

பொதுவாக ஒருவர் கனவுகண்டு காலையில் எழுந்தால் 90 சதவீதம் மறந்துவிடவே வாய்ப்பு அதிகம். அப்படியும் அதனை கூறினால் அதில் நிறைய தவறுகள் இருக்கும். துல்லியமான தன்மை இருக்காது. கனவுகளை நாமே திட்டமிட்டு உருவாக்கினால் எப்படியிருக்கும்? கனவு காணும்போதுகூட நாம் கனவில்தான் இருக்கிறோம் என்ற விழிப்புணர்வையும், அதில்  வரும் சம்பவங்களையும் கூட நம்மால் உருவாக்க முடிந்தால் அதை லூசிட் கனவுகள் என்று கூறலாம்.

அமெரிக்காவின் இலினாய்ஸில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கென் பாலார், கரென் கொன்கொலி ஆகியோர் தலைமையிலான ஆராய்ச்சிக்குழு,  இதுபற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை கரன்ட் பயாலஜி இதழில் வெளியிட்டுள்ளது.  கனவை ஆராய்வது பற்றிய ஆராய்ச்சிகளுக்கான வாய்ப்பு இன்று அதிகரித்துள்ளது என்றார்  கென் பாலார்.  கனவுகளை கண்டுகொண்டிருக்கிறோம் என்பது உலகம் முழுவதும் 20 சதவீதம் பேர் உணர்கிறார்கள். இதில்  ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே இதுபோன்ற கனவுகள் வாரம்தோறும் வருவதாக கூறுகிறார்கள். இதைவைத்து ஒருவரின் கற்றல் திறனையும், புதுமைத்திறனையும் அதிகரிக்க முடியுமா என்று ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர். கனவுகளைப் பற்றி ஆராய இசிஜி முதல் நவீன கருவிகள் வரை முயன்றும் கூட கனவுகளை துல்லியமாக அறிய முடியவில்லை. மூளையின் உள்ளே நடைபெறும் மாற்றங்களை சரியாக அடையாளம் கண்டறிய முயன்று வருகிறார்கள். 

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் நகைச்சுவை நடிகர், டேவ் க்ரீன். இவர் சிறுவயதிலிருந்து லூசிட் கனவுகளை கண்டு வருகிறார். இப்போது அவர் தனது லூசிட் கனவுகளை படமாக வரையும் கலைஞராக மாறிவிட்டார்.  இவர் வரையும் படங்கள் அனைத்துமே கனவில் மூளை உருவாக்கியதுதான் என்பது இதில் முக்கியமான அம்சம். லூசிட் கனவுகளை  காண்பவர்களை தேர்ந்தெடுத்து ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள ஆய்வகங்களில் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதில் கனவு காண்பவர்களை வழிநடத்த ஒளி, ஒலி பொருட்களை பயன்படுத்துகின்றனர்.  கனவு காண்பவர்களுடன் வெளியுலகத்தில் உள்ளவர்கள் தொடர்புகொள்வதுதான் ஆராய்ச்சியின் நோக்கம். இப்படி செய்த ஆராய்ச்சியில் கனவில் நாணயத்தை சுண்டிவிட்டு குவளையில் விழச்செய்தனர். அடுத்த நாள், பங்கேற்பாளர்களின் திறமை மேம்பட்டது. இத்தனைக்கும் நிஜவாழ்க்கையில் அவர்கள் இப்படி ஒரு செயலை செய்ததே இல்லை என்பது முக்கியமாக நாம் அறிந்துகொள்ளவேண்டியது. கனவுகளில் ஒருவருடன் உரையாடுவது வணிகமயமாக்கப்படவும் வாய்ப்புள்ளது. 2021ஆம் ஆண்டில் மதுபான நிறுவனமான கூர்ஸ், தனது விளம்பரங்களை சோதனையாளர்களில் கனவு வழியாக கூற முயன்றது. எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளை மனிதர்களின் மூளைக்கு நேரடியாக அனுப்பும் தொழில்நுட்பம் கூட கண்டறியப்பட வாய்ப்புள்ளது. 

தகவல்

பிபிசி சயின்ஸ்போகஸ் செப். 2021

only in your wildest dreams, dr. christian jarrett , science focus sep 2021



 




 


கருத்துகள்