எதிர்கால தலைமுறையின் வாழ்க்கையை பாதுகாக்க நினைக்கிறேன் - ரிதிமா பாண்டே , இயற்கை செயல்பாட்டாளர்
ரிதிமா பாண்டே |
ரிதிமா பாண்டே
இயற்கை செயல்பாட்டாளர்
இவரை இந்தியாவின் கிரேட்டா துன்பெர்க் என்று சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் அப்படி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இவருக்கென ரிதிமா பாண்டே என்ற பெயர் இருப்பதால், அதனையே சொல்லி அழைப்போம். 2007ஆம் ஆண்டு பிறந்தவர் ரிதிமா பாண்டே. உத்தரகாண்டில் பிறந்தவரின் தந்தையும் கூட சூழல் சார்ந்த செயல்பாட்டாளர்தான். வெள்ளம், நிலச்சரிவு சார்ந்த பிரச்னைகள் பத்தாண்டுகளாக நடப்பதை கவனித்து வந்து பிறகே சூழல் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
2016ஆம் ஆண்டு தனது ஒன்பது வயதில் அரசுக்கு எதிராக மாசுபாடு தொடர்பாக புகார் ஒன்றை எழுதி அனுப்பினார். அதற்கு முன்னரே தேசிய பசுமை தீர்ப்பாணையத்திற்கு இதுபோல புகார் ஒன்றை தெரிவித்திருந்தார். ஆனால் அந்த மனுவை தீர்ப்பாணையம் தள்ளுபடி செய்துவிட்டது. பிறகு 2016ஆம் ஆண்டு ரிதிமா, தன்னோடு பதினாறு குழந்தைகளை சேர்த்துக்கொண்டு ஐ.நாவில் மாசுபாட்டு பற்றி புகார் மனுவை வழங்கினார். இதில் துருக்கி, அர்ஜென்டினா, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகள் மாசுபாடு பற்றி எடுக்க வேண்டிய நடவடிக்கையை குறிப்பிட்டிருந்தார்.
2020ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடியிடம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது பற்றிய புகார் மனுவை எழுதி அனுப்பினார். இதில் அரசு எடுக்கவேண்டிய அவசியமான நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. காப் 26 மாநாட்டில் குடிமைச் சமூகம் மற்றும் இளைஞர்களுக்கான ஆலோசனை கௌன்சில் சார்பாக ரிதிமா பாண்டேவும் இடம்பெற்றிருந்தார். பிரபலமான டெட் எக்ஸ் நிகழ்ச்சி பேச்சாளரும் கூடத்தான்.
பதினான்கு வயதான ரிதிமா பாண்டே. பிபிசியின் டாப் 100 செல்வாக்கு பெற்ற பெண்கள் வரிசையில் இடம்பிடித்து சாதனை செய்தார். இவர் இப்போதே தனது சுயசரிதையைக் கூட எழுதிவிட்டார். சில்ரன்ஸ் வெர்சஸ் கிளைமேட் சேஞ்ச் என்பதுதான் இவர் எழுதிய நூல். அதில், நான் எதிர்காலத்தில் பருவச்சூழல் மாறுபாட்டால் பாதிக்கப்படும் அனைத்து குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்க நினைக்கிறேன் என்று எழுதியிருந்தார்.
டெல் மீ வொய்
கருத்துகள்
கருத்துரையிடுக