இந்தியாவை உயர்த்தும் கிராமப் பொருளாதாரம்!


கொரானோ நோய்த்தொற்று இந்தியாவை தாக்கி ஆறு மாதங்களாகின்றன. மத்திய அரசும், மாநில அரசுகளும் பொதுமுடக்க தளர்வுகளை மெதுவாக அறிவித்து வருகின்றன. கொரானோ காரணமாக அனைத்து தொழில்துறைகளும் முடங்கிவிட்டன என்பது உண்மைதான். அதேசமயம் கிராமங்களிலுள்ள வேளாண்மைத்துறை மெல்ல மீண்டெழுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. கடந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களில் மட்டும் 111.61 டன் உரம் விற்பனையாகியிருக்கிறது. மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், தெலங்கானா, ஹரியாணா, சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வருமானத்திற்கு நெற்பயிரையே நம்பியுள்ளனர். நெற்பயிர் பயிரிடும் பரப்பு கூட 17 சதவீதம் (ஜூன்24படி) அதிகரித்துள்ளது.


விவசாயத்திற்கான டிராக்டர் விற்பனையும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 27 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய அரசு வழங்கிய கடன் திட்டங்களும், பருவகால மழையும், இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதும் கிராம பொருளாதாரத்தை மீட்கும் என வேளாண்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் கிராமப்புறம் சார்ந்த உற்பத்தித்துறை மற்றும் கட்டுமானத்துறையின் பங்கு 50 சதவீதமாக உள்ளது. இத்துறைகள் மீளாமல் வளர்ச்சி சாத்தியமில்லை என்பது பொளுளாதார வல்லுநர்கள் கருத்து.. கொரானோ நோய்த்தொற்றால் மூன்றாம், நான்காம் நிலை நகரங்களில் வளர்ச்சி தடைபட்டுள்ளது என்கிறது ஈக்விட்டி ஸ்ட்ராட்ஜி ஆ்ப் ஆசியா பசிபிக் அட் கிரடிட் சூசி அமைப்பு.


கிராமப்புறங்களில் பொருட்களை விற்கும் பார்லே, ஐடிசி, டாபர் ஆகிய நுகர்பொருள் விற்பனை நிறுவனங்களின் விற்பனை சதவீதம் அதிகரித்துள்ளது. நீல்சன் நிறுவனத்தின் ஆய்வுப்படி, 60 சதவீத மக்களின் வருமானத்தை கொரானோ நோய்த்தொற்று பாதித்துள்ளது. இக்காலகட்டத்தில் 39 சதவீதம் பேர் வீட்டுக்கான செலவுகளை அதிகம் செய்துள்ளனர். வேலையின்மையும் கூட கிராமங்களில் 23.37 சதவீதத்திலிருந்து 7.62 சதவீதமாக (ஏப்ரல் 12 -ஜூன் 28) குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வருமானம் கூட ஏப்ரல் மாதத்தில் 32,000 கோடியிலிருந்து ஜூன் மாதம் 91,000 கோடியாக அதிகரித்திருப்பது பொருளாதாரம் மீள்வதற்கான அறிகுறி என்று வணிக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மைத்துறை 46 சதவீத பங்களிப்பை வழங்கும் என சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


வேளாண்மைத்துறையில் தானியங்கள் உற்பத்தி, மீன் வளர்ப்பு, கால்நடைகள் வளர்ப்பு (பால், இறைச்சி, முட்டை) ஆகியவை உட்பிரிவுகளாக உள்ளன. தானியங்கள், பால் உற்பத்தி பொருளாதாரத்திற்கு உதவும் என்று கணிக்கப்படுகிறது. பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படு்வது, மகாத்மாகாந்தி கிராமப்புறத் திட்டத்திற்காக ஒரு லட்சம் கோடி செலவிடப்பட்டிப்பது, 40 லட்சம் விவசாயிகளுக்கு கோதுமைக்கான குறைந்தபட்ச விலையாக ரூ.73,500 கோடி வழங்கப்பட்டிருப்பது சிறப்பான அம்சங்களாக கருதப்படுகிறது. பிஎம் கிசான் திட்டம் மூலம் விவசாயிகளின் வருமானம் கூடியுள்ளது. மேலும் மண்டி வரி அகற்றப்பட்டிருப்பதும் அவர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் வெட்டுக்கிளி தாக்குதல், ஒடிஷா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஆம்பன் புயல் தாக்குதல், அசாம் மாநிலத்தில் மழை வெள்ளம் என இயற்கை பேரிடர்களை தாண்டியும் கிராம பொருளாதாரம் நம்பிக்கை தரும் விதமாக வளர்ந்து வருகிறது..




தகவல்

இந்தியாடுடே





கருத்துகள்